தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணறுகளை உடனடியாக மூடிட வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சிந்தாமணி- மீரான்குளம் சாலையில் 8 பயணிகளுடன் சென்ற கார் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் வீழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது.
இந்த சோகமான நிகழ்வின் தாக்கம் மறைவதற்குள்ளாக, கரூர் அருகே நாவல் நகர் பகுதியில் ஆம்னி பேருந்தும், சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பதும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதும் மேலும் சோகத்தை அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி உறவுகளை இழந்து தீராத மனவேதனையில் வாடும் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றியமையாத மக்கள் உயிரை பாதுகாப்பது அவசியம். அவ்வப்போது ஏற்படும் இது போன்ற விபத்துகள் எத்தனை, எத்தனையோ குடும்பங்களின் சூழ்நிலையையும், வாழ்வையும் முற்றிலும் மாற்றக்கூடியது. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும், குறைப்பதற்கும் அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணறுகளை உடனடியாக மூடிடவும், மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள கிணறுகளைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைத்திடவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு போன்று மாநிலத்தின் சாலைகளும், கிராமப்புற சாலைகளும், ஊராட்சி சாலைகளுன் தரத்துடன் இருப்பதை தமிழக அரசு ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வாகன ஓட்டிகளும் தங்களை நம்பி வாகனத்தில் பயணிப்பவர்களின் உயிரை பாதுகாக்கும் பொறுப்புடன் வாகனத்தை இயக்கிட வேண்டும். தங்களின் பொருளாதார தேவைக்காக அசதியுடனோ, தூக்கக் கலக்கத்துடனோ, வாகனம் தங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் சமயத்திலோ வாகனத்தை இயக்காமல், பயணிகளின் பாதுகாப்பை உங்கள் பொறுப்பாக ஏற்று வாகனம் ஓட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..


