கயத்தாறு அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள மூர்த்தீஸ்வரம் இந்திரா காலணியைச் சேர்ந்தவர் திருமேணிநாதன். விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது ஒரே மகள் வண்ணத்தாளம்மாள் (14), பசுவந்தனை அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டில் இருந்த அவரை தாயார் வீட்டு வேலை செய்யக்கோரி மகளுக்கு அறிவுரை வழங்கினாராம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் விவசாய வேலைக்காக தந்தையும், தாயும் வெளியே சென்றபோது பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


