தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைக்க வருகை தந்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் உடன் வந்தனர்.
அவர்கள் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்பின்னர் உணவுப்பொருட்கள் கண்காட்சியை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் திறந்து வைத்தார். மூலிகைப்பொருட்கள் கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். பின்னர் 20 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மத்தியில் மேடையில் கனிமொழி எம்பி பேசுகையில், வரும் காலங்களில் பெண்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் எதை நிறைவேற்ற வேண்டும், உங்களின் கனவுகள் என்ன என்பதை புரிந்து கொண்டு உங்களுக்கு இருக்கும் அனைத்து தடைகளையும் உடைக்க வேண்டும். உங்களுக்கு முதல் தடை மனத்தடை. அந்த மனத்தடையை நீங்கள் முதலில் உடைக்க வேண்டும். இதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிட இயக்கம் உலகத்தில் மாறுதல்கள் வரவேண்டும் பெண்கள் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் நமக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்த கனவை நோக்கித்தான் நம்மை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். உங்கள் திறமைகள், கனவைகளை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். முதலில் நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டியது என்னால் முடியும். என்னைத்தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. என்னால் எதையும் சாதிக்க முடியும். ஒரு பெண் என்பதால் என்னால் செய்ய முடியாது என்பது எதுவும் கிடையாது. இந்த தைரியத்துடன் நீங்கள் பயணம் செய்யுங்கள் வெற்றி உங்களை வழி நடத்தும் என்று பேசினார். பின்னர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


