பேட்மாநகரத்தில் தொழிற்சாலையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை மர்ம நபர்கள் வேனில் கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சூப்பர்வைசர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (33), தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் குமார் (43), அமிர்தராஜ் மகன் சகாய பூண்டி செல்வன் (29) ஆகிய மூவரும் ஜெனரேட்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, ஜெனரேட்டர் மற்றும் அதை கடத்துவதற்காக பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


