தூத்துக்குடியில் புனித வியாழனை முன்னிட்டு சின்னக்கோவிலில் நடந்த பாதம் கழுவும் நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி பங்கேற்றார்.
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 5-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதையும் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகின்றனர். நேற்று புனித வியாழன் தினமாக கடைபிடிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து யூதர்களிடம் பிடிபடுவதற்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் கடைசி இரவு விருந்தில் பங்கேற்றார். அப்போது தனது சாவை முன்னறிவித்த ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவர்களுக்கு ரொட்டித் துண்டுகளை வழங்கினாராம்.
இதனை நினைவுகூறும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது 12 சிறுவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவர்களுக்கு ரொட்டிகளை பிஷப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டார்வின் முதியவர்களின் பாதங்களை கழுவி ரொட்டி வழங்கினார். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் பாதம் கழுவும் சடங்கு நேற்று நடந்தது.
தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான ஏசு உயிர் துறந்த தினமான புனித வெள்ளி தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


