குவைத்தில் மிகப்பிரமாண்டமான அந்த விருந்து ஆரம்பித்தது.
அங்கே தரையில் விரித்திருந்தினை மிகப்பெரிய விரிப்பு விரித்து, அதன் மத்தியில் மிகப்பெரிய இரண்டு தட்டில் அந்த உணவை வைத்திருந்தனர். முதல் தட்டின் மத்தியில் முன்னங்கால் விரித்த படி தலையுடன் ஒரு ஆடு அவித்த நிலையில் படுத்திருந்து.
மற்றொரு தட்டில் பின்பகுதியில் கால்களை விரித்த படி ஆட்டின் பின் பகுதியைப் படுக்க வைத்திருந்தனர்.
சொல்லப் போனால் அந்த உணவில் முழு ஆடு வேகவைத்து கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கண்டவுடன் இரண்டு பேரும் அதிர்ந்தே போய் விட்டோம்.
இப்படியொரு விருந்தை நாங்கள் இதுவரைப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டமாக இருந்தது. பிரமித்து போய் நின்றோம்.
இரண்டு இடத்தினிலும் சுற்றி பாயில் தட்டின் அருகே அமர்ந்தோம்.
நம்மவர்கள் அமர்ந்து விருந்து சாப்பிடுவதை கண்ட குவைத்தியர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு இதுபோன்ற விருதை நமக்கு தருவதில் ஆனந்தம் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆட்டு இறைச்சி எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. டாக்டர் சுதாகர் சாரிடம் கேட்ட போது, “இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பெரிய ஆட்டை எங்கள் ஊர் மாடசாமிக்குப் பலியிடுவோம்.
பின்னர் பிரியாணி சமைத்து சுமார் 30 பேர் அடங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிடுவோம். ஆட்டின் பெரும்பாலான பகுதி காலியாகிவிடும். இருந்தும் ஐந்து முதல் பத்து கிலோ வரை கறி மீதி இருக்கும்.
ஆனால் இங்கு அப்படி இல்லை. சுமார் 14 நண்பர்களுக்காக ஒரு முழு ஆட்டைச் சிறப்பாகச் சமைத்துக் கிடத்தியுள்ளனர்”. என்றார்.
நானும் கூட என் தாய் சொர்ணம்மாள் பிறந்த வல்லகுளம் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயிலில் படையல் சாப்பிட்டு இருக்கிறேன். பல ஆடுகளை சாமிக்கு படைத்து விட்டு, அந்த கறியை சமையல் செய்து அனைவருக்கும் சமபந்தி யாக படைப்போம். கொடை முடிந்தவுடன் அதிகாலையில் 200க்-கு மேற்பட்டவர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிடுவோம். ஆனால் இங்கே உள்ள விருந்து வேறு மாதிரியாக இருந்தது.
“இதுதான் பலவேச முத்து அய்யா கூறிய விருந்தா?” நான் டாக்டர் சுதாகரை பார்த்தேன். அவரோ பலவேச முத்து அய்யாவை பார்த்தார்.
பலவேச முத்து அய்யா அங்கிருந்த மூத்த குவத்தியர் சபா அல்சம்மரி பேசிக் கொண்டு இருந்தார். அந்தக் குவைத்தியர்தான் பலவேசமுத்து செய்யும் தொழிலின் கூட்டாளி. எங்களுக்கு பழைய பொருள்களை காட்டி மகிழ்ந்தவர் . இந்த இடத்திற்கு எல்லாம் அவர் தான் சொந்தக்காரர்.
இருவரும் அண்ணன் தம்பிபோல் பேசிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பெருமையாக இருந்தது.
நல்ல வேளை நம்ம சுதாகர் அய்யா ஒட்டக விருந்து கேட்கவில்லை. ஒட்டகம் கேட்டிருந்தால்? ஒட்டகத்தின் ஒரு முழு கல் தொடையுடன் ஒரு தட்டிலும்; அடுத்த கால் தொடைப் பகுதியுடன் அடுத்த தட்டிலும் இருந்திருக்கும்!
எனக்குத் தலை சுற்றியிருக்கும்.
அடுத்து அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். கடந்த 40 வருடங்களாக நாற்காலியில் அமர்ந்து மேசையில் சாப்பிட்ட எங்களுக்குத் தரையில் கால்களை மடக்கி அமர முடியவில்லை. சுற்றிப் பார்த்தோம். அந்தக் கூட்டத்தில் ஒருவர் மட்டும் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தார். சற்று நிம்மதியாக இருந்தது. சரி எப்படியாவது அமர்ந்து சாப்பிடலாம் போல என முடிவு செய்தோம்.
நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்த சபா. அல்சம்மரி கூர்ந்து பார்த்தார். எங்களுக்குச் சரியாகச் சாப்பிடத் தெரியவில்லையென நினைத்தார் போலும். அருகில் வந்தார்.
“ஆட்டின் தொடைப்பகுதியைக் காட்டினார். இந்தப் பகுதியில் கறி ருசியாக இருக்கும் சாப்பிட்டுப் பாருங்கள்” என்றார். முடிந்த அளவு சாப்பிட்டேன். சுதாகர் அய்யாவும் ருசித்து, ரசித்து சாப்பிட்டார். ஆனால் முடிந்த அளவு தான் சாப்பிட முடிந்தது.
எங்கள் முன் இருந்தது, தலையுடன் முன்னங்கால் மற்றும் தொடைப் பகுதி. இங்குதான் ஆட்டின் நெஞ்சு பகுதியையும் இருந்தது. அதில் நிறையக் கொழுப்பு இருந்தது. சாப்பிடச் சுவையாக இருந்தது. தொடைப் பகுதி செந்நிற கறிகளைக் கொண்டிருந்தது. அதன் சுவை வேறுமாதிரி இருந்தது. தண்டுவடப் பகுதியிலிருந்த குருத்தெலும்பு சுவையில் எங்களைத் தள்ளாட வைத்தது.
வீட்டுச் சமையலில் கறி துண்டுகளைச் சாப்பிடும்போது போது ஈரலைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் பிற கறித்துண்டுகள் ஆட்டின் எந்தப் பகுதியிலிருந்தது எனப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது.
ஆனால் இந்த விருந்தில் வித்தியாசமாகப் பல சுவையும் ஆட்டின் உறுப்பையும் இணைத்துப் பார்க்க முடிந்தது. சாப்பிட்டு முடிந்த பிறகு ஒரு சிறிய பெப்சி கேனை எடுத்தோம். இரவு பெரு விருந்தை இத்துடன் முடித்துக் கொண்டோம். பெரும்பாலுமே டாக்டர் சுதாகர் எங்குச் சென்றாலும் அந்த ஊர் மக்கள் உணவைப் பாரபட்சம் இல்லாமல் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒரு முறை மணிப்பூர் சென்றபோது சிறப்பாக சமைத்த நத்தைக் கறியும் நாய் கறியும் கிடைத்தது. சாப்பிட்டுப் பார்த்தார். ஆட்டுக் கறிக்கும் நாய் குறிக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. நத்தையின் சுவை எலும்பு மசை போல் இருந்தது. அதனால் குவைத் விருந்து அவருக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. என்று அவர் என்னிடம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்.
சரி இந்த விருந்தை யார்தான் ஏற்படு செய்தார்கள்?” என விசாரித்தேன். “பலவேசமுத்துவின் தொழில் கூட்டாளி அந்த மூத்த குவைத்தியர் சபா. அல்சம்மரிதான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் எனத் தெரிந்தது கொண்டேன். எங்களுக்கு பெருமையாக இருந்தது.
இந்தியாவிலிருந்து நண்பர்கள் வருகின்றனர் என்று தன் தொழில் கூட்டாளியிடம் பலவேசமுத்து கூறி இருக்கிறார். உடனே அவர் இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்!
இந்த விருந்தில் குவைத் மற்றும் தமிழகப் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழகப் பெண்கள் இத்தகைய சில விருந்துகளில் பங்கேற்பது உண்டாம்.
நினைத்துப் பாருங்கள். தமிழர்களுக்குக் குவைத்தில் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்த விருந்தே தமிழர்களுக்கும் குவைத்தியர்களும் இடையேயான நட்பின் சான்று.
இந்த உறவு இன்றில்லை நேற்றில்லை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கு நிலவிவருகிறது. குவைத்திற்கு அருகே உள்ள ஏமனில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துக்களுள்ள பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. அரபு மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதைத்தான் இது விளக்குகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழர்களுக்கு அரேபியர் மொழியான அராபிக் தெரியவில்லை. குவைத்தியர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் நட்புடன் இணைந்து தொழில் செய்கின்றனர்!
“இது எப்படி சாத்தியம்?” என்றால் இவர்களின் இணைப்பு மொழி ஆங்கிலம். குவைத்தியர்கள் சற்று ஆங்கிலம் பேசுகின்றனர். குவைத்தில் வாழும் தமிழர்களுக்கு ஆங்கிலம் அத்துப்படி. இரண்டாம் மொழியான ஆங்கிலமே தமிழர்களைக் குவைத்தில் தொழில் செய்ய உதவுகிறது. மேலும் தமிழர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் கருவியாக ஆங்கிலம் செயல்படுகிறது.
முடிந்த அளவுக்கு சாப்பிட்டோம். ஆனால் முடியவில்லை. அதன் பிறகு அங்கிருந்த ஊழியர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். நமது ஊரில் நாம் சமபந்தி விருது சாப்பிட்டாலும் ஒரே தட்டில் சாப்பிட மாட்டோம். பல பேர் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டாலும் அவர்களுக்கு உணவு தனித்தனி தட்டில் பரிமாரப்படும். ஆனால் இங்கோ ஒரே தட்டில் சுற்றி இருந்து அனைவரும் சாப்பிடுவது மிக வித்தியாசமாக இருந்தது. ஒரே தட்டில் அனைவரும் கை விட்டு அவர்கள் அவர்களுக்காக சாப்பிட்டது தான் உண்மையான சமபந்தி விருந்தோ என எண்ண வைத்தது. இந்த விருந்து எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது.
இந்த விருந்தை சஹன் விருந்து என கூறுகிறார்கள். சஹன் சாப்பாடு இந்தியாவிலும், இலங்கையிலும், பாக்கிஸ்தானிலும், அரபு நாடுகளில் மிகவும் பிரபலமானது.
நமதூரிலும் ஒருபாரம்பரியம். அந்தந்த பகுதியில் உள்ள கலாச்சாரங்களை பிரதிபளிப்பது. அறிவியல் மாற்றங்கள் என்று எத்தனை வந்தாலும் பாரம்பரியம் என்ற பழக்கவழக்கங்கள் மட்டும் இன்றளவிலும் உள்ளது . உதாரணத்திற்கு சஹன் சாப்பாடு, கல்யாண சீர் (பூச்செப்பு) போன்றவை.
சஹன் சாப்பாடு நமதூரிலும், இலங்கை, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவலாக உள்ளது. பிற நாடுகளில் இருந்துதான் நமதூருக்கும் இந்த கலாச்சாரம் பரவியது என்கிறார்கள். பொதுவாக நமதூரில் கல்யாண விருந்தில்தான் சஹன் சாப்பாடு இருக்கும்.
– சஹன் சாப்பாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் உள்ளது என்கிறார்கள். ஏழை – பணக்காரன் பாகுபாடின்றி ஒரே சஹனில் அமர்கிறார்கள். இதுகுறித்து எனது எழுத்துலகிற்கு மிகவும் ஆதரவாக இருக்கும் பா.ம.க. மாநில தலைவர், எங்கள் ஊரைச்சேர்ந்த அண்ணன் ஏ.வி.ஏ கஸ்ஸாலி கூறும் போது, குவைத்தில் இந்தச் சாப்பாட்டை மந்தி சாப்பாடு என்போம். நமது ஊரில் சஹன் சாப்பாடு என்கிறோம். எங்கள் வாப்பா இருக்கும் போது அடிக்கடி இந்த விருந்து எங்கள் வீட்டில் வைத்து நடைபெறும். தற்போது கொஞ்சம் குறைந்து விட்டது. ஆனாலும் உண்டு. இந்த விருந்தில் பிச்சைகாரர்கள், ஏழைகள், மனநோயாளிகள் என்று எந்த வேறுபாடும் இன்றி அமர்ந்து உணவு சாப்பிடுவோம். இந்த வழக்கத்தினை இஸ்லாத் எங்களுக்கு பிறவியிலேயே கற்றுக்கொடுத்துள்ளது என்றார்.
முற்காலத்தில் நமது ஊரில் பாரம்பரியப்படி பனை ஓலையில் நெய்த பாயில்தான் அமர்ந்தார்கள். தற்போது இந்த சஹன் சாப்பாடு முறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கிறது.
இதை பற்றி நான் திருநெல்வேலி நெல்லை லாட்ஜ் உரிமையாளரும், அடிக்கடி எனக்கு பழங்காலத்து கதைகளையும் சொல்லி வரும் உடன்குடி நியமத்துல்லா அவர்களிடம் பேசினேன். அவர் சஹன் என்றால் வட்டம் என பொருள் கூறினார்.
அரபி, துருக்கி, மற்றும் பராசீக மொழிகளில் சஹன் என்றால் தட்டு அல்லது தாம்பாளம் என்று பெயர். ஆக வட்டம் என்றாலே தட்டு என அர்த்தம் தான். எனவே ஒரேபொருள் தான் பல பெயர்களில் விளங்குகிறது என வைத்துக்கொள்ளலாம். ஊரில் தட்டுச் சாப்பாடு என்றே சிலர் இதை கூறுகிறார்கள்.
நமது ஊரில் இந்த விருந்து எப்படி என்றால் 5 பேருக்கு ஒரே தட்டில் விருந்து என்கிறோம். இந்த விருந்து சமத்துவத்தினை பேசுகிறது. உணர்ந்துகிறது. ஆனால் தற்போது நோய், சுகாதராம் என்று பார்க்கும் போது இந்த விருந்து குறைந்து வருகிறது எனலாம்.
ஆனாலும் நியமத்துல்லா தனது வீட்டில் நடந்த சஹன் விருந்து பற்றி கூறும் போது, இந்த விருந்து நடத்தவே பல்வேறு பட்ட பாத்திரங்கள் தங்கள் வீட்டில் இருந்தன என்றார். அதில் சஹன் சாப்பாட்டுக்காக சீன பாத்திரம், கண்ணாடி பாத்திரம் போன்ற பாத்திரங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்றார்.
நமது ஊரிலும் இந்த சாப்பாடு பழக்க வழக்கம் உண்டு ஆனால் குவைத் போன்ற அரபு நாடுகளில் இருப்பது போல பிரமாண்டாக இல்லை என்றார். மேலும் இந்த வகை சாப்பாட்டுக்கு பிரியாணி பரிமாறுவது இல்லை. நெய்சோறு, தேங்காய் சோறு போன்றவைதான் தயாரித்து வழங்குவது வழக்கம் என்றும் கூறினார். சிலர் பிரியாணியும் படைப்பார்கள்.
தற்போது பழைய காலத்தில் பயன்படுத்திய சஹன் சாப்பாடு தட்டுகளை வாங்க பலர் போட்டிபோட்டு வருகிறார்கள். சுமார் 6 ஆயிரம் வரை இதற்கு விலை வைத்து கேட்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார்.
ஆக. அரபு நாடுகளில் இருந்து நம்மூருக்கு வந்த சாப்பாடு இஸ்லாமிய சகோதரர்கள் வாழும் இடத்தில் பாராம்பரியமாக பெருமை பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. குறிப்பாக காயல்பட்டினம், கீழக்கரை, உடன்குடி உள்பட பல இடங்களில் சஹன் சாப்பாடு உள்ளது என்று அவர் கூறினார்.
இப்போது தான் நமக்கு விருந்து தரும் அரேபியர் சபா. அல்சம்மரி காட்டிய பொருள்கள் எல்லாம் நமது கண் முன்னே வந்து நின்றது. ஆகா. முன்னோர்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என அறிந்து சந்தோசப்பட்டேன்.
இந்த விருந்தில் தமிழ் நாடு பொறியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் ஜகன், செயலாளர் அசோக், பொருளாளர் சுப்ரமணியம், தொழிலதிபர் கிருஷ்ண குமார் , தம்பி சாமுவேல், எங்கள் அருகில் உள்ள மணக்கரையை சேர்ந்த சாமி உள்பட பலர் பங்கு கொண்டனர்.
சாப்பாடு முடிந்த சிறிது நேரம் அமர்ந்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். மனநிறைவாக இருந்தது. பலவேச முத்து அய்யா எங்களை நாங்கள் தங்கும் இடத்தில் கொண்டு விட்டு சென்றார். குவைத் சமையல் எல்லாமே புதிதாகவும் அதே நேரத்தில் மிக சுவையாகவும் இருந்தது. அதை ரசித்த எனது மனதில் மேலும் பல குவைத் சம்பந்தப்பட்ட உணவுகள் வந்து சென்றது.
குவைத் சமையல் என்பது அரபு, இந்திய மற்றும் பாரசீக சுவைகளின் கலவையாகும், இது புதிய கடல் உணவுகள், வறுக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் நறுமண மசாலாப் பொருட்களை கொண்டது. குவைத்தில் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில உணவுகள் உள்ளது. அவை யாவன என கூறுவோம்.
மக்பூஸ் & – இந்த பாரம்பரிய குவைத் டிஷ் மசாலா சாதம், இறைச்சி (பொதுவாக கோழி அல்லது ஆட்டுக்குட்டி) மற்றும் காய்கறிகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
நிமீக்ஷீs ஷீரீணீவீறீஹ் -கிரேஸ் உகாய்லி & இந்த இனிப்பு இனிப்பு ரவை, சர்க்கரை மற்றும் வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது, மேலும் பெரும்பாலும் கிரீம் அல்லது தயிருடன் பரிமாறப்படுகிறது.
மார்கூக் & – காய்கறிகள், இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களுடன் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இது ரமலான் காலத்தில் . பிரபலமான உணவாகும்.
வறுக்கப்பட்ட மீன்& – குவைத் அதன் புதிய கடல் உணவுகளுக்கு பெயர் பெற்றது, மேலும் பல உணவகங்களில் வறுக்கப்பட்ட மீன் பிரபலமான உணவாகும்.
லுகைமத் – இந்த இனிப்பு பாலாடை மாவு, சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கொண்டு தயாரிக்கப்படுகிறது, மேலும் அவை பெரும்பாலும் தேன் அல்லது சிரப் உடன் பரிமாறப்படுகின்றன.
பலவேசமுத்து அய்யா எங்களிடம் ஏற்கனவே கூறி இருந்தார். நாளை மாலை தான் நிகழ்ச்சி. காலையில் குவைத்தின் முக்கிய இடங்களை சுற்றிக்காட்ட நண்பர்கள் வருவார்கள் என்று கூறினார்.
“ஏடே நம்ம ஊருல இருக்குமே மண் திண்ணை. அந்த மாதிரி திண்ணையை கடந்த வருடம் நான் குவைத்தில் பார்த்தேன். அந்த இடத்தை காட்டுவார்களா?” என சுதாகர் தனது நண்பரிடம் கேட்டார்.
“கண்டிப்பாக காட்டுவார்கள்” என கூறிவிட்டு பலவேசமுத்து அய்யா கிளம்பியிருந்தார்கள்.
அது என்ன. இவ்வளவு பெரிய பில்டிங் கொண்ட குவைத்தில் நம்ம ஊரைப்போல மண்திண்ணையா?. ஆச்சரியமாமக இருந்தது.
அந்த மண் திண்ணையை பார்க்கும் ஆவலுடன் பல கனவு கண்டு தூங்கிப்போனேன்.
(குவைத் பயணம் தொடரும்)