திருச்சி – காரைக்குடி – விருதுநகர் பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் தலைவர் சாமி திராவிடமணி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், “தற்போது திருச்சி – காரைக்குடி – விருதுநகர் டெமு ரயில் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள், அழகப்பா கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தினமும் 300க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி, விருதுநகருக்கு பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். திருச்சி – காரைக்குடி – விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, பயணிகளின் நலன் கருதி இடையூறு இல்லாமல் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒன்பது மணி நேரம் ரயில் நிற்கிறது. எனவே, இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


