தாமஸ் ஆல்வா எடிசன் பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் இதழானது.
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் ‘சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.


