திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.
கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.[சான்று தேவை]
இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.


