தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையானதை செயல்படுத்துவதற்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் க.அன்பழகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.07.2023) நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வுக்கூட்டத்திற்கு மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமை வகித்து தெரிவித்ததாவது: மதிப்பீட்டுக்குழு என்பது அரசுக்கு முக்கியமான குழு. பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கு தீர்வு காண்பதற்கான குழு.மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் கொண்டு வருகின்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய இடத்தில்தான் அரசு அதிகாரிகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து செயல்பட்டால்தான் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மீனவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி. நீங்கள் என்ன தேவை என்று தெரிவித்தால் நாங்கள் அதை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியினைப் பார்த்தோம். இது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்ற திட்டமாக உள்ளது. ரூ.137 கோடி மதிப்பீட்டில் எவ்வளவு பெரிய இடர்பாடுகள் வந்தாலும் தாங்கக்கூடிய அளவில் அடித்தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 2025ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவித்தார்கள். ஏனென்றால் பிற்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த இங்குள்ள மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் பிற மாவட்டங்களுக்கு செல்லாமல் இங்கேயே கிடைக்க வேண்டும்.
தருவைகுளம் பகுதிக்கு சென்று மீனவர்களின் நிலையினை அறிந்தோம். அங்கு ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். மேலும் ஒரு மீன்பிடி துறைமுகத்தை கேட்டிருக்கிறார்கள். பசுமை தீர்ப்பாயத்தின் நிலையினை அறிந்து திட்டத்தை செயல்படுத்த பொறியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையானதை கொண்டு சென்று செயல்படுத்துவதற்கு இந்த குழு தயாராக இருக்கிறது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் / மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), ம.சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார் கோவில்), ச.சிவகுமார் (மயிலம்), சேவூர். எஸ்..இராமச்சந்திரன்(ஆரணி), வி.பி.நாகைமாலி (கீழ்வேளூர்), இ.பரந்தாமன் (எழும்பூர்), ஓ.எஸ்.மணியன்(வேதாரண்யம்), ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம், பிரிவு அலுவலர் பாண்டிராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


