பி. கக்கன் 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர்.
கக்கன் சூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.
கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939’ என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணார்களைத் தலைமை தாங்கி மதுரைக் கோயிலினுள் நுழைந்தார். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று[4] 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.


