பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு, இதுதொடர்பான வாயிற்கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். என்ற எங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
ஆனால், இதுவரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,” என வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து பங்கேற்பதால், இன்று ஒருநாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 123 மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


