கடந்த 3.6.2023 அன்று முற்பகல் சுமார் 11 மணி அளவில் அருணாச்சல் பிரதேச தவாங் மாவட்டத்தில் உள்ள பும்லா பாஸ் என்று அழைக்கப்படும் பும்லா கணவாய் பகுதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடல் மட்டத்திலிருந்து 15200 அடி உயரத்தில் இருக்கும் இந்த பும் லா பாஸ்.இந்தியா மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள உலகின் உயரமான இராணுவ கேந்திரமாகும்.தமிழ் நாட்டின் உயரமான மலை பகுதியான தொட்டாபட்டாவின் உயரம் 8650 அடி என்ற நிலையில் அதை போல் சுமார் இரு மடங்கு உயரம் கொண்டது பும்லா கணவாய் என்பது கவனிக்கத்தக்கது.
பும்லா கணவாய் பகுதி வெள்ளிப்பனி மூடிய மலைகள் சூழ்ந்து வெளிச்சம் நிறைந்தும் அமைதி நிறைந்தும் மரம் செடிக்கொடிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.பாறை இடுக்குகளின் வளரும் புல் பூண்டுகள் மட்டுமே காணப்படுகிறது. மென்மையான குளிர் காற்று தொடர்ந்து வீசுகிறது. அங்கிருந்த 10°டிகிரி குளிரை தாங்கும் வகையில் கம்பளி குல்லா கையுறை உட்பட தேவையான குளிர் தாங்கும் உடையுடன் இருந்தேன்.மிகவும் உயரமான பகுதியில் நாம் மூச்சுவிடுவதற்கு போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலை என்பதால் அங்கிருந்த வழிகாட்டும் ராணுவ வீரர்களின் அறிவுறுத்தலின் படி சற்று நேரம் அசைவற்று இருந்து நம்மை அசுவாசப்படுத்தும் நிலையிருந்தது.
வந்திருந்தோர் அனைவரையும் ராணுவ அதிகாரிகள் குழுவாக ஒருங்கிணைத்து இந்திய சீன எல்லை கோடு அருகில் அழைத்து சென்றதோடு 1962ஆம் ஆண்டு இந்திய சீன போர் பற்றியும் விரிவாக எடுத்து கூறினர். எல்லை கோட்டிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் அமைதியான ஆள் அரவமற்ற பகுதி மட்டுமே நம் கண்ணில் தெரிந்தது. அருகில் இந்திய சீன ராணுவ அதிகாரிகள் எல்லையில் பதற்றம் தவிற்கும் வகையில் அவ்வப்போது சந்தித்து பேசும் பகுதியையும் காண முடிந்தது.
உயரமான பகுதி என்பதால் வந்திருந்த சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. ஓரிருவரால் நிற்க முடியவில்லை. ஒருவர் மயக்கமடைந்தார்.உடன் ராணுவ மருத்துவர்கள் ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை செய்தபின் நலமடைந்தார். இப்பகுதியில் ராணுவதினர் நடத்தும் சிற்றுண்டி மற்றும் நினைவு பொருள் விற்பனை செய்யும் ராணுவ கேண்டீன் உள்ளது.இதுவே உலகில் உயரமான பகுதியில் உள்ள ராணுவ கண்டீன் ஆகும்.தேநீர் மற்றும் பஜ்ஜி சாப்பிட்டபின் பும்லா பாஸ் வந்ததின் நினைவு பொருளாக தேநீர் கோப்பைகள் மற்றும் இராணுவ காண்பளி குல்லா வாங்கினேன்.
பும்லா பாஸ் ஒருக்காலத்தில் இந்திய சீன எல்லை பகுதி வர்த்தக கேந்திரமாக திகழ்ந்தது.அந்த நிலை 1962 போருக்கு பின் மாறியது. இதே பும்லா கணவாய் வழியாக சீன ராணுவம் 23.10.1962ல் அலை அலையாக நம் நாட்டின்னுள் ஊடுருவ முயன்றது. ஒவ்வொரு முறையும் 200 வீரர்களாக மூன்று முறை வந்த சீன படையினரை 19 படைவீரர்களை மட்டுமே கொண்டிருந்த சுபைதார் ஜோகிந்தர் சிங் தலைமையிலான நம் இந்திய ராணும் தீரத்துடன் எதிர்த்து போரிட்டது . முதல் இரு அலைகளையும் முறியடித்த நம் ராணுவத்தினரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லாத நிலையில் மூன்றாம் அலையாக 200 சீன வீரர்கள் வந்த போது நம் வீரர்கள் கத்தி பொருத்திய துப்பாக்கியால் நேரடியாக எதிர்த்து போர் செய்தனர்.இதில் சுபைதார் ஜோகிந்தர் சிங் தனி ஒருவராக 56 சீன ராணுவ வீரர்களை கொன்றார் என்பது குறிப்பிடதக்கது.தொடர்ந்து தாக்கி வந்த அவர் சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின் சீனாவில் உயிரிழந்தார். இவ்வாறு தீரத்துடன் போர் நடந்த இடத்தில் சுபைதார் ஜோகிந்தர் சிங் மற்றும் 19 போர் வீரர்களின் நினைவகம் கட்டப்பட்டுள்ளது
S.D.சுந்தரேசன்.I.A.S.
அரசாங்கத்தின் செயலாளர். அருணாச்சல் பிரதேசம்


