நீட் தேர்வு விலக்கு கோரி தி.மு.க. இளைஞரணி சார்பாக நடைபெறும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் தமிழகத்தில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து தி.மு.க இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரப் பயணம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கும் வருகை தருகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த பிரச்சாரப் பயணத்திற்கு 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 12.30 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கம், மாலை 5.30 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம், 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவில்பட்டி தேவர் சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


