ஜெமினி கணேசன் (16 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டையில் 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. ரத்னகண்ணு ராமசாமி ஐயா் கணேசன் என்பதன் முழுபெயர் கொண்ட ஜெமினிகணேசன், தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தனது சித்தப்பா நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார்.கணேசன் மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டையில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.கல்லூரிக் கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர் .அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் “காதல் மன்னன்” என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.


