வாக்குரிமை என்பது மக்களாட்சியில் நமது பிரதிநிதியை நாம் சுட்டிக்காட்ட பயன்படுத்தும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம். இதை எதற்கும் ஈடாக்க முடியாது.இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பயணித்துக்
கொண்டிருக்கிறோம்.
அரசியலில் நம்மிடமுள்ள இச்சக்தியை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நமது எதிர்காலமே இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து விழிப்போடு தங்களது வாக்குரிமையைச் சரியானமுறையில் பயன்படுத்துதலே நமது தலையாய கடமை.
நமது ஓட்டினைப் பெற விளைவோரின் விருப்பு வெறுப்புகளுக்கும் ,மலிவான ஆதாயங்களுக்கும் நமது அவ்வுரிமையை அடகு வைத்தல் அறிவீனத்தின் உச்சம்.
போதிய
அரசியலறிவையும் , தொலைநோக்குப் பார்வையையும் பள்ளிக்கல்வி வயதிலிருந்தே வளர்த்துக் கொள்வது வாக்குரிமையை மிகச் சரியாக பயன்படுத்துவதற்கான முதன்மையான வழிமுறை.
பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் ஆணுக்கு இணையாகத் தங்களை உயர்த்தி கொண்டு சுயமாக தங்களது உரிமைகளைப் பெற்று கடமைகளைத் துணிவோடு செய்து வருகின்றனர். அதே நேரம் வாக்களிப்பதிலும் தங்களது சுய சிந்தனையைப் பயன்படுத்தி குடும்பத்தாரின் ஆணைக்கு அடிபணியாமல் தாங்களாகவே முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும்.
முதல்முறை ஓட்டு போடவுள்ள இளம் வாக்காளர்களுக்கு வாக்களித்தலின் முக்கியத்திவத்தைப் பெற்றோரும், சமூக நலம் விரும்பிகளும், குறிப்பாக ஆசிரியர்களும் வலியுறுத்தி வழிநடத்த கடமைப்பட்டவர்களாவர்.
எத்தனையோ விடயங்களில் ஆலோசனையளிக்கும் நாம், தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான நபரைப் பற்றின ஆலோசனைகளை வழங்க தவறி விடுகிறோம் என்பதே நிதர்சனம்.
சரியான புரிதலில்லாதோர் ஓட்டுச் சாவடிகளுக்குள் செல்லும் வரை எதைப்பற்றியும் சிந்திக்காமல் வேட்பாளர்களின் ஈர்ப்பிற்குச் செவி சாய்த்துவிட்டு விளையாட்டுத்தனமாக வெளியேறும் இத்தகைய அபாயத்திற்குரிய செயல்பாடுகளைத் தவிர்த்தலில் அறிந்தோரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.
இளையோரை, பெற்றோர்களோ வழிநடத்துபவர்களோ தாங்கள் விரும்பும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வற்புருத்தாமல் அவர்களையே சிந்தித்து முடிவெடுக்க வழிநடத்துவதே அறிவார்ந்த தன்மை.
எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்கு சேகரிப்பவர்களின் வாக்குறுதிகளையும் அவற்றின் நம்பகத்தன்மையையும் பகுத்து ஆய்ந்தறியும் புத்திக் கூர்மையை இன்றைய அனைத்துவகை ஊடகங்களும் பொதுமக்களுக்கு நடுநிலமையில் வளர்க்க வேண்டிய கடமையை உணர்ந்தால் மட்டுமே சரியான ஆட்சியமைப்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமுண்டு.
இன்று ஒரு ஓட்டு எந்த அளவு சக்தி வாய்ந்தது என்பதை வேட்பாளர்கள் அறிந்திருக்கும் அளவு வாக்காளர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. எனவேதான் வாக்காளர்களின் அறியாமைகளையும் பலவீனங்களையும் பயன்படுத்தி இழிந்த ஆதாயங்களால் மக்களைக் கவரும் நிலை இருந்து கொண்டிருக்கிறது.
அதிகாரத்திற்கு வந்த பிறகு தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இருக்கப் போவதில்லை என்பதை ஒவ்வொரு வாக்காளரும் அறிந்து செயல்பட்டால், வரப்போகும் ஐந்தாண்டுகள் நமக்கும் நம்மைச் சார்ந்த சமூகத்திற்கும் அமைதியையும், நற்பயனையும் ஏற்படுத்த நமது ஓட்டு காரணமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
பலமுறை சிந்தித்து மிகச் சரியாகச் செயல்படுவோம். நம் ஒவ்வொருவரின் ஓட்டும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில் மிகச் சக்தியாய்ந்த ஒன்றென்பதை என்றும் நினைவிற் கொள்வோம்.
_ த.ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர், திருநெல்வேலி.


