தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 234 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை அமைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டு பணம் பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து 90 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்து பணிகள் 2011 ஆம் ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. இந்த பணிகள் 2012ம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த 4 வழிச்சாலையை பொறுத்தவரை மிகவும் முக்கியமான சாலை. இந்த சாலை வழியாகத்தான் தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்கிறது.
இந்த நிலையில் வல்லநாட்டில் மிக பிரமாண்டமாக தாமிரபரணி ஆற்றில் ஒரு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டு ஒரு வருடத்தில் பாலத்தில் ஒரு பகுதியில் ஓட்டை விழுந்தது. இதனால் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்றது. தொடர்ந்து பாலம் சீரமைக்கப்பட்டது. மீண்டும் மற்றொரு பகுதியில் பாலத்தில் ஓட்டை விழுந்தது. பின்னர் இரண்டு சாலைகளும் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து பல முறை இந்த பாலத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சாலையின் ஒரு வழிச்சாலை மட்டுமே வாகனங்கள் சென்று வந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு அந்த சாலையில் ஒரு பகுதியில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை ஒரு வார காலத்தில் சீரமைக்கப்பட்டது. எனவே இந்த சாலையை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், இப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் இன்று மதியம் சுமார் 11.30 மணி அளவில் கடந்த முறை ஓட்டை விழுந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் ஒரு ஓட்டை விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் இருபுறமும் மிகவும் ஆபத்தான முறையில் செல்கின்றனர். எனவே இந்த பாலத்தின் இரு புறத்தையும் விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


