தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 544 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 60 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தாட்கோ சார்பில் 4 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான அடையாள அட்டையினையும் மற்றும் நன்னிலம் மகளில் நில உடைமைத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6,81,649 மதிப்பிலான மானியம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (கலால்) கல்யாணகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


