தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு “கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடி மண்ணையும், மக்களையும் நாசமாக்கியது ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிராக 2018ல் நடைபெற்ற தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் போது 15 மண்ணின் மைந்தர்கள் தம் இன்னுயிரை ஈந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து இந்நச்சாலையை மூடியது.
ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் போட்டு மீண்டும் திறக்க எத்தனித்தபோதும் நீதிமன்றங்கள் உண்மைத் தன்மையை உணர்ந்து இவ்வாலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளன.
இந்நிலையில் சிறிது காலம் அமைதியாக இருந்த ஸ்டெர்லைட் நச்சாலை நிர்வாகம் தற்போது சில கைக்கூலிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, மக்களின் ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஏராளமான பணத்தைக் காட்டி அவர்களின் மூலம் ஆலை வேண்டும் என கோரிக்கை எழுப்ப முயற்சிக்கின்றது.
மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறையும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட அனுமதி இல்லை என பகிரங்கமாக அறிவித்து தடை போட்ட போதும் ஏழை எளிய மக்களுக்கு பணத்தாசை காட்டி மறைமுகமாக செயலாற்றி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமைதிச் சூழல் நிலவி வந்த தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கி வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றனர். ஆகவே அரசாலும், நீதிமன்றங்களாலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த நச்சாலைக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


