மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் வான்பொருட்களைப் பார்வையிடுவது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாணவர்களுக்கு வானவியல் விழிப்புணர்வு மற்றும் டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் கலந்துகொண்டு டெலஸ்கோப்பை கையாளும் முறை மற்றும் தொலைதூரப் பொருட்களைப் பார்வையிடுதல் குறித்துப் பயிற்சி அளித்தார்.
இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘நிறமாலை’ விழிப்புணர்வு அட்டைகள் மற்றும் வானவியல் காலண்டர்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தி, நாகலட்சுமி, ஜெயா மேரி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மூலம் இத்தகைய பயிற்சிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


