திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவின் போது, தற்காலிக உணவுக் கடைகளும், தனியார் அன்னதானங்களும் அதிக அளவில் நடைபெறவும், நிரந்த ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் தெருவோர உணவு வணிகர்களிடத்தில் அதிக அளவிலான உணவு கையாளப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளை பின்பற்றி தரமான, பாதுகாப்பான உணவு பொருட்கள் பக்தர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்டஅனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சாப்பாடு போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
விழாக்கால தற்காலிக உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் ஆகியோரை இணைத்துக் கொண்டு, அந்த வணிகர்களிடம் குழு ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற அல்லது பாதுகாப்பற்ற உணவுகளைத் தயாரிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனவே, விழாக்கால தற்காலிக உணவு வணிகர்கள் மற்றும் அன்னதானம் வழங்குபவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ல் உள்ள உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை மிகுந்த கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறையில் உரிமம், பதிவுபெற்ற நிறுவனங்களில் அல்லது அன்னதானங்களில் மட்டுமே பொதுமக்கள் உணவு உண்ணவும் அல்லது உணவுப் பொட்டலங்களை வாங்கவும் வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களானது, உண்ணத் தகுந்த காலத்திற்குள் இருந்து, போதிய விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு 0461-2900669 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.


