தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை விளையாட்டு அழிந்து வரும் நிலையில் அதனை மீட்டெப்பதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் இலவசமாக கற்றுத் தரும் இளைஞர்கள், அடிமுறை விளையாட்டு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…
தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்றான அடிமுறை என்பது குமரி கண்டத்தில் சித்தர்களால் தோன்றி வளர்ந்து புகழ்பெற்ற தற்காப்புக் கலை என்று வரலாறு சொல்கிறது. கைகளாலும், கால்களாலும் தாக்கி எதிராளியை வீழ்த்தும் இந்த கலை, ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த மரபுக் கலையாகும்.
சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு,களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமான
அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர்.
தற்போதைய காலகட்டத்தில் அடிமுறை விளையாட்டு என்பது அழிந்து வரும் சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்க விரும்பும் ஒருசில ஆசான்கள் அடிமுறை தற்காப்பு கலையை ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்படங்களான பட்டாசு மற்றும் மாமன்னன் திரைப்படங்களில் அடிமுறை விளையாட்டு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுஇருக்கும். இத்திரைப்படங்களின் பயிற்சியாளரும் அடிமுறை பயிற்சி ஆசானுமான செல்வராஜ் தமிழகம் எங்கிலும் இளைஞர்களுக்கு இலவசமாக அடிமுறை பயிற்சி அளித்து அந்த இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு அடிமுறை பயிற்சிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அடிமுறை பயிற்சியாளர் மணிராஜ் தலைமையிலான இளைஞர்கள் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக அடிமுறை பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில், அடிமுறை விளையாட்டானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என்பதும் அனைத்து பள்ளிகளிலும் சிலம்பம் போன்று தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை விளையாட்டையும் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அடிமுறை விளையாட்டை மீட்டெடெப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அடிமுறை பயிற்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது…


