அனுராதா ரமணன் ஜூன் 29, 1947 – மே 16, 2010 சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார். இவர் கணவர் பெயர் ரமணன்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.
ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது.இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.
காஞ்சி சங்கரமட பீடாதிபதியான செயந்திர சரசுவதி தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார்.
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.


