அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922– மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.


