
தூத்துக்குடியில் 500 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் பன்னாட்டு அறைகலன் பூங்காவை ஜனவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1,100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் எனவும், அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் ஏற்றுமதி சார்ந்த அறைகலன் உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தும் வகையிலும் இப்பூங்கா உருவாக்கப்படும் எனவும் தொழில்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் நிலம் கையிருப்பை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பிற்கும் வழிவகுக்கும் என தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முதற்கட்டமாக தூத்துக்குடியில் 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பன்னாட்டு அறைகலன் பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பூங்கா திறப்பதன் மூலம், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, பல்வேறு முதலீடுகளையும் ஈர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.