ந. வீரமணி ஐயர் (15 அக்டோபர் 1931 – 8 அக்டோபர் 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற ‘கற்பகவல்லி நின் பொற்பதம்’ என்ற பாடலை இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்…’ என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.


