தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா நடந்தது தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களை கௌரவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு 1,14,79,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 66பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும். வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 228 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
இந்த வருடம் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக மேடையில் அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில் மூத்த எழுத்தாளர்கள் கலாபன் வாஸ், கோணங்கி, தேச தட்சன், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் தேசபக்தியை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வழங்கல் அலுவலர் உஷா, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், கலால் அலுவலர் கல்யான குமார், சமூக நல அலுவலர் ஹேமலதா, வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபு, சுபேந்திரன், மகலாட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், ஏடிஎஸ்பிக்கள் உன்னி கிருஷ்ணன், ஆறுமுகம், எடிசன், டிஎஸ்பிகள் பொன்னரசு, ராஜாசுந்தர், வசந்தராஜ், மாயவன், லோகேஸ்வரன், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், ராஜு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


