விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவிலில் “மஹா கும்பாபிஷேக விழா” வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ராஜீவ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை யாகசாலை பூஜை, மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணியளவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள், சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


