தமிழகம் முழுவதும் உள்ள 17 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாளைக்கு கனமழை மற்றும் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 3.30 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜம்புதூர், சேரகுளம், காரசேரி, நாட்டார்குளம் உள்பட பல்வேறு பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் ஓடியது.
செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த சந்தையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய கொண்டு வருவார்கள். அதே போல் இந்த செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். தற்போது திடிரென பெய்த மழையால் இந்த வாரச்சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தெருச்சாக்கடைகள் அனைத்தும் வாரச்சந்தையில் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சந்தைக்கு வந்த பொதுமக்கள் மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.


