தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவும் ‘நியூ பிங் வாட்ஸ்ஆப்’ லிங்க் -ஐ யாரும் ‘கிளிக்’ செய்ய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணப்பாளா் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் பல வாட்ஸ்ஆப் குரூப்களில் ‘நியூ பிங்க் வாட்ஸ்ஆப்‘ என லிங்க் பரவி வருகிறது. இது, வைரஸ் ஆகும். எனவே, இதை யாரும் யாருக்கும் பகிர வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்தால் கைப்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டு, அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.
மேலும், கைப்பேசியில் உள்ள அனைத்துக் குழுக்கள், தொடா்பிலுள்ள அனைவருக்கும் இந்த லிங்க் பகிரப்பட்டு அவா்களையும் சிரமத்துக்கு உள்ளாக்கும். வாட்ஸ்ஆப் பயனாளா்களைக் குறிவைத்து பரப்பப்படும் இந்த வைரஸ் உள்ள லிங்க், வாட்ஸ்ஆப்பில் வந்தால் ‘கிளிக்’ செய்ய வேண்டாம் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


