தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இசக்கியப்பன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கண்டெய்னர் லாரியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 500 காபி மேக்கர் இருந்தது.
இதுகுறித்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அரசு கண்ணனிடம் கேட்டதற்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இருந்து நாசரேத்தில் ஒரு திருமண வீட்டிற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். மேலும் அதிகாரிகள் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கண்டெய்னர் லாரியை சீல் வைத்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


