ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாச வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநிலக்கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தாமிரபரணி பாசன வடிநிலக்கோட்டத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் அலுவலகத்தை பிரிப்பதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள், தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவதோடு பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், அரசு வழங்கும் ரேசன் கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்டவகைகளை சம்மந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்போம் என்றும் கூறினர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதி பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


