
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையத்திற்கு அருகே தட்டப்பாறை இடுகாடு உள்ளது. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமத்தாழிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தொல்லியல் துறை மாணவன் ரமணா ஒரு தாழியின் வாய்ப் பகுதியைக் கண்டறிந்தார். மாணவன் ரமணா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி என்ற ஊருக்கு அருகே உள்ள ஒட்டுடன்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இந்த மாணவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு தொல்லியல் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
தான் கண்டுபிடித்த தாழியின் வாய்ப் பகுதியில் ஒரு வித்தியாசமான குறியீடு இருப்பதை ரமணா கண்டறிந்தார். அதனால் ரமணா இந்த தாழியின் வாய்ப் பகுதியை தொல்லியல் துறை பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணனிடம் ஒப்படைத்தார். இந்த குறியீட்டைப் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த குறியீடு தமிழ் உயிரெழுத்துகளில் கடைசி எழுத்தான “”ஃ” போன்று உள்ளது. மேலும் ஃ-வின் கீழே உள்ள இரு புள்ளிகளையும் ஒரு அரைவட்ட வடிவ கோடு இணைக்கிறது. இந்த குறியீடு பெண்மையின் வளமை அல்லது இது சாந்த சடங்கு முறையைக் குறிப்பதாக இருக்கலாம் எனவும்; இத்தகைய குறியீடு தாழிகளில் அரிதாகவே காணப்படுகின்றன எனவும்; பொதுவாகக் குறியீடுகள் தாழியின் வெளிப் பகுதிகளிலேயே காணப் படுகின்றன எனவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். இந்த குறியீட்டை மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தாழியின் உட்புறத்தில் ஃ போன்ற இந்த குறியீட்டைக் கூர்ந்து கவனித்தால், இந்த மூன்று புள்ளிகளை உருவாக்கக் கைவிரலில் உள்ள நகத்தை ஆழமாகப் பதிந்துள்ளனர். அதாவது இந்த குறியீட்டை வரைந்த பிறகே இந்த தாழியைச் சுட்டு வலிமையாக்கியுள்ளனர் என்பதையே இந்த நகக்குறி விளக்குகிறது. வெளிப்புறத்தில் மார்பகம் போன்ற அமைபுடைய தாழிகள் பல இடங்களில் நான் பார்த்துள்ளேன். . மாறாக ரமணா கண்டறிந்த இந்த குறியீடு தாழியின் உட்பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிட்டத்தக்கது. பண்டையத் தமிழர்களின் வாழ்வும் கலாச்சார பழக்கவழக்கங்களும் இத்தகைய ஆராய்ச்சியால் வெளிப்படும். இவைகளை நாம் அறிந்து கொள்ளுவது அவசியம். இதன் மூலம் காலகாலமாக நாம் கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த இடுகாட்டிற்குச் சென்று வந்த அனுபவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் இந்த இடுகாட்டைக் கடையம் பகுதியைச் சார்ந்த மக்கள் 2000 வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் இந்த இடம் பாறைகள் நிறைந்தது. இங்கு எந்த விவசாயமும் செய்ய வாய்ப்பில்லை. அதாவது எதற்கும் பயன் படாத இந்த இடத்தை இப்பகுதி மக்கள் இடுகாடாகப் பயன் படுத்தி வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.


