தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் போஷன் அபியான் சார்பாக போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து குறித்த இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் போஷன் அபியான் சார்பாக போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து குறித்த இருவார (09.03.2024 முதல் 23.03.2024 வரை) விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (15.03.2024) தொடங்கி வைத்து, சிறுதானிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் குறித்தும், முன்பருவக்கல்விக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் போஷன் பக்வாடா என்ற ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவில் போஷன் பக்வாடா-2024 ஊட்டச்சத்து குறித்த இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பொழுது பிரச்சாரத்தின் மூலம் ஊட்டச்சத்துடன்கூடிய முன்பருவக் கல்வி குறித்த விழிப்புர்ணர்வும் அளிக்கப்பட்டது. மேலும், பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம், இந்த உணவுகள் மூலமாக வளர் இளம் பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆகும்.
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து ஊட்டச்சத்துடன்கூடிய முன்பருவக் கல்வியை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி) (மு.கூ.பொ) மு.பெ.காயத்ரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வே.திலகா, க.சண்முகப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூ.விவேக் ராஜா, மேற்பார்வையாளர்கள், போஷன் அபியான் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


