இந்த சிபிலி ராஜா யார்?. இந்த கேள்வியை கேட்ட போது நிவேக் இவ்வாறாக கூறினார். “இவர் அப்போது இந்த பகுதியை ஆண்டு
பாண்டிய மன்னர் ஸ்ரீ வல்லவ பாண்டியர் , இவர் ஸ்ரீவில்லி மகா ராஜா என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார். இவர் பெயரில் தருவை ஊருக்குள் ஸ்ரீ வாழ வல்ல பாண்டிஸ்வரர் என்ற பெயரில் ஒரு கோயில் இருக்கிறது. அந்த கோவிலை கட்டுன அதே வல்லவ பாண்டியன் தான், இந்த சிபிலி மகராஜா. இந்த பாளையம் கால்வாய் தண்ணீ மக்களுக்கு போய் சேராமல் விவசாயம் பாதிக்க படுதுனு மக்கள் முறையிடவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, ஒரு நரபலி குடுக்கணும் என மக்கள் சொன்னா போது, சரி என பதில் சொல்லி விடுகிறார். பலி கொடுக்கும் நேரத்தில் ஆளைத் தேடுகிறார்கள். அந்த வேளையில் தான் ராஜாவுக்கு தோன்றுகிறது. நான் தானே இந்த நாட்டோட முதல் குடிமகன். எனக்கு தானே முதல் பொறுப்பு. நானே பழி ஆகுறேன் சொல்லி இந்த உடப்புல போய் நின்னுட்டாரு. அவர் மேலே மண்ணை போட்டு மூடிட்டாங்க. அதுக்கு அப்பறம் இந்த இடத்தில் உடப்பே ஏற்படலை. அவர் இன்னும் தெய்வமாக நின்னு உடைப்பை ஏற்பட விடாமல் காப்பாத்திருக்காரு”.
சொல்லி முடித்து விட்டு எங்களை பார்த்தார். அதன் பின் தொடர்ந்தார்.
காலப்போக்கில் மருவி ஸ்ரீவில்லி மகாராஜான்னு கூப்புடறாங்க. இவர் இப்போது சிபிலி ராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு பங்குனி உத்திரத்தில் பூஜை நடைபெறுகிறது. இது நமது முன்னோர் வழிபாடு . பாண்டிய மன்னரும் நமது முன்னோர்தானே. எனவே தான் பங்குனி உத்திரத்தில் இவருக்கு வழிபாடு நடைபெறுகிது. இந்த இடம் இருகிற இடத்தினை கைப்பத்து என கூறுகிறார்கள். இந்த பத்தில் 1000 ஏக்கர்க்கு மேல வயல்வெளிகள் உள்ளது. தாமிர பரணி ஆற்றை ஒட்டி, இந்த கைப்பத்து வயற்காடுகள் உள்ளது.
இந்த இடத்துக்கான தனி சிறப்பு, பாளையம் கால்வாய், பழவூர் தடுப்பணையில் ஆரம்பித்து, கோபால சமுத்திரம் பசுங்கிலி அய்யன் சாஸ்தா கோவில் வரைக்கும் தாமிரபரணி ஆற்றை ஒட்டியே பயணம் பண்ணிட்டு வருது. அதன் பிறகு இந்த கால்வாய் பச்சையாற்றை சமாளிக்க வேண்டி அங்கிருந்து விலகுகிறது. அதன் பின் தருவை கிராமத்தில் மேடான பகுதியை நோக்கி செல்கிறது. அங்குதான் அந்த மதி நுட்பமாய் கட்டப்பட்ட அணை உள்ளது. பச்சையாற்றோடு வெள்ளப்பெருக்கு, மழை காலங் களில் அந்த கால்வாயை உடையாமல் தடுப்பதற்குதான் பல தொழில் நுட்பங்களை இவ்விடத்தில் இருந்துதான் கடைபிடித்து இருக் கிறார்கள். அதைப்பற்றி நாம் ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.
இந்த இடத்தில் கைப்பத்து என்று பெயர் வருவதற்கு காரணம் என்ன? இந்த கேள்வியை கிராமத்தில் கேட்ட போது அங்கு ஒருவர் பதில் சொன்னார். இந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. தீடீரென்று வெள்ளம் வந்தால் மழை வெள்ளத்தில் பயிர் பாதிக்கப்பட்டு விடும். எனவே அதற்கு முன்பு அறுவடை செய்து நெற்மணிகளை கைப்பற்றும் பத்தே கைப்பத்து என்று சொன்னார்கள். ஆனால் அது செவி வழி பேச்சாக இருக்கலாம். ஆனால் உண்மை யிலேயே இதற்கு என்ன பெயராக இருக்கும்.
இந்த இடத்தில் மிகப்பெரிய போர் நடந்து இருக்கிறது. அந்த போரில் ஜெயித்த அரசர் இந்த இடத்தினை தன் வசம் கைப்பற்றி கொண்டார். ஆகவே தான் கைப்பத்து என பெயர் வந்து விட்டது என்கிறார் சபரி வாசன்.
மேலும் அவர் கூறும் போது முற்காலத்தில் மன்னன் இந்த இடத்தினை கைப்பத்திய பிறகு, தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்தும் பாசனத்துக்கு மிகவும் கஷ்டபட்டுள்ளார். ஆகவே தான் இவ்விடத்தில் மற்றொரு குறுங்கால்வாயை உருவாக் கியுள்ளார்.
இந்த பகுதியில் வடிகால் கட்டப்பட்டு மடை கட்டப்பட்டு, பச்சையாற்றை கடக்கும் இடத்தில் தண்ணீர் போக்கை கட்டுப்படுத்தி மேட்டு நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர். இதனால்தான் தருவை, மேல முன்னீர் பள்ளம், கீழ முன்னீர் பள்ளம், கருங்குளம், மேலப் பாளையம், பாளையங்கோட்டை, மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம் சாணன் குளம் வரை தண்ணீர் கொண்டு சென்றுள் ளார்கள். அத்தனை பகுதிகளுக்கும் தண்ணீ தரக்கூடிய பாளையம் கால்வாயுடைய ஒரு சரியான கட்டமைப்பு இருந்தால் மட்டும் தான் பச்சையாறுடைய வெள்ளப் பெருக்கை தாண்டி தண்ணீ கிழக்கே போகும் என்பதற்கான அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அறிவியலில் கைத் தேர்ந்தவர்களாத் தான் இங்குள்ள நமது முன்னோர்கள் இருந்துள்ளனர். இந்த இடம் ரொம்ப சிறப்பு வாய்ந்த இடம். அது மட்டுமல்லாமல் வாழ வல்ல பாண்டியன் தன்னைதான் பலியாக கொடுத்த இடம் என்பதால் இந்த இடத்தை வரலாற்று சிறப்பு மிக்க இடமாக பார்க்கிறார்கள்.
பச்சையாற்றங்கரையில் ஓமநல்லூரில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் ராஜா பலியானது. கரையை மாற்றிய மைத்தது. உள்பட பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன என்கிறார்கள். ஆனால் நான் இதுவரை சென்று பார்க்கவில்லை. இந்த ராஜாவுடைய வரலாறு மூகாம்பிகை கோவிலிலேயே இருக்கு என்கிறார்கள். நம்மோடு வந்த சபரி வாசன். இதையெல்லாம் தொடர்ந்தோம் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த இடத்தில் வித்தியாசமான கட்டிடம் இடிந்து கிடக்கிறது. இது செங்கல் கட்டிடம். ஒரு வேளை இந்த இடத்தில மடை கட்ட முயற்சித்து இடையில் விடப்பட்டிருக்குமா? அல்லது கண்காணிப்பு கட்டிடம் எதுவும் கட்டப்பட்டிருக்குமா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ஏன் என்றால் இங்குள்ள செங்கல் அனைத்துமே பெரிய அளவில் உள்ளது . தற்போது கட்டப்பட பயன்படுத்தும் செங்கலை விட அகலமாக உள்ளது. மிகப்பெரியகட்டிடம் இருந்தற்கான அடையாளமும் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தினை பற்றி மிகப்பெரிய ஆய்வு செய்யவேண்டும். அதை விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால் கைப்பத்து வடிகால் உள்ளது. இந்த வடிகால் நேர்த்தியாக ஒரு பாறை மீது கட்டப்பட்டுள்ளது. மேலும் மிக அதிகமாக வெள்ளம் வந்தால் அந்த வடிகாலையும் தாண்டி, பாளையங்கால்வாயில் உள்ள அனைத்து தண்ணீரும் வடிந்து செல்லும் அளவுக்கு மடை வைக்கப்பட்டுள்ளது. இந்த மடையில் கோடைகாலத்தில் கூட தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. எனவே இதை கடந்து செல்ல கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடந்து செல்வதே கடினம் .ஆனால் நிவேக் இந்த வழியாக மோட்டார் பைக்கில் மறுகரைக்கு பாறையில் சருக்கிக்கொண்டே சென்று விட்டார்.
அதை பார்க்கும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த இடத்தில் தாமிரபரணி கரை , இந்த வடிகாலால் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் பிறகு பாளையங்கால்வாய் இருபுறமும் மிக அதிமாக பனை மரங்கள் உள்ளன. ஆனால் இந்த பனை மரங்களை யாரும் பேணுவது கிடையாது. எனவே இங்கு விழும் பனம் பழங்கள் விதையாகி முளைத்து , மிகஅதிகமான வடலி(குட்டி பனைமரம்)களுடன் காணப்படுகிறது.
இங்கே உள்ள பனை பொருள்களை யார் வேண்டுமானாலும் வந்து சேகரியுங்கள். நாங்கள் உதவுகிறோம். எங்களுக்கு பணம் காசு வேண்டாம். ஆனால் இந்த பனை மரங்கள் சுத்தமாக வேண்டும் என்கிறார் நிவேக். ஏன் என்றால் பனைபொருள்களில் இருந்து கிடைக்கும் பொருள்கள் வீணாக போவதுடன், பனை மரம் முழுவதும் காய்ந்து போன ஓலைகளுடன் காணப்படுகிறது. இதை சீர் செய்கிறோம் என சிலர் நெருப்பு வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த நெருப்பு பரவு பல பனை மரங்களை எரித்து சாம்பலாக்கி விடுகிறது. எனவே பனைகளை பாதுகாப்பது மிக அவசியமாகிறது. எனவே இந்த பொருளை சேகரிக்க சொல்கிறார்கள்.
அடுத்து இந்த பகுதியில் ஒரு தீர்த்த கட்டம் உள்ளது என்கிறார்கள். அந்த தீர்த்த கட்டம் நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது.
(நதி வற்றாமல் ஓடும்)