சொரி முத்து அய்யனார்.
இந்த கோயிலில் அடி அமாவாசை மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் தொண்டு நிறுவனத்தில் அங்கு சென்றனர்.
தொண்டு நிறுவன இயக்குனர் தாணுலிங்கம், மாவட்ட ஆட்சிதலைவரிடம் அனுமதி பெற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கு சென்று விட்டார். அவரும் அவரது ஊழியர்களும் தாமிரபரணி நதியை மாசுபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
என்ன கொடுமை இது என் நதி பொதிகை மலையில் இருந்து ஊற்றெடுத்து சந்தோசமாக மலை முகடுகளை கடந்து, இந்த மக்களுக்கு நன்மை செய்ய ஒடோடி வருகிறாள். அவளுக்கு நாம் கைமாறு என்ன செய்ய போகிறோம். அவளை மாசு படாமல் வைத்தாலே பெரிய கைமாறு. அதை செய்ய வேண்டுமென்று யாராவது நினைக்கிறோமா?
பொதுவாக கொஞ்ச நாளாகவே காட்டை அழித்த காரணத்தினால் மழை பொழிவு குறைந்து விட்டது. தற்போது களக்காடு முண்டந்துறை வனத்தினை காப்பாற்ற முனனப்புடன் செயல் பட்டு வருகிறார்கள் வனத்துறையினர். வரிசையாக வருகின்ற அதிகாரிகள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்படுகிறார். அவர்களுக்கு உதவி செய்யவே சொரிமுத்துஅய்யனார் வேடம் போட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினான் காளி என்பது நமக்கு எல்லோருக்கு தெரியும். வனத்துறையினர் அதோடு நிறுத்தவில்லை. தாமிரபரணியில் மாசு படுகிறது என்பதையும் அரசுக்கு எடுத்துரைத்தனர். எனவே தான் மாசு எப்படி படுகிறது. எவ்வளவு படுகிறது என ஆய்வு செய்ய ஒரு ஆய்வாளரை அரசு நியமனம் செய்தது.
அந்த ஆய்வாளர் தான் முனனவர் முருகேசன். சொரிமுத்துஅய்யனார் திருவிழா முடியும் முன்பு தாமிரபரணி தண்ணீரை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். விழா முடிந்த பிறகு மீண்டும் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்யவேண்டும். எந்த அளவுக்கு நதி மாசு பட்டிருக்கிறது என அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இதுதான் முனைவர் முருகேசனின் வேலை. அதற்காக அவருக்கு உதவி புரிய 11 பேரை தொண்டு நிறுவன இயக்குனர் தாணுலிங்கம் கொடுத்தார். அதில் தான் காளியும் செல்வியும் இருந்தனர்.
முனைவர் முருகேசன் கூறினார். “தாமிரபரணியை காப்பாற்றவோ, அல்லது ஆய்வு செய்ய வேண்டும் என்றாலோ முதலில் அவர்களுக்கு தாமிரபரணியின் பெருமை தெரியவேண்டும். எனவே உங்கள் ஊழியர்களிடம் நான் பேசவேண்டும்” என்றார்.
அதற்கான ஏற்பாடுகளை தாணுலிங்கம் செய்தார்.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தில் 11 பேரை¬யும் அழைத்து வந்து அவர்களிடம் முனைவர் முருகேசனை பேச வைத்தார்.
தாணுலிங்கம் தான் அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நிறைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் இந்த 11 பேருடன் சேர்ந்து பணிபுரிவார்களா? என்பதுதெரியவில்லை. ஆனால் அனைவரிடமும் பேசவேண்டும் என முனைவர் முருகேசன் நினைத்தார்.
1992 ஜனவரி மாதம் 27 வது நாள் தான் அந்த கூட்டம் நடந்தது. முனைவர் முருகேசன் ஊழியர்களிடம் ஆர்வலர்களிடமும் பேசினார். அவர் பேச்சை கேட்டு அனைவரும் விதி மறந்து அவர் சொல்லை கேட்டனர்.
“தாமிரபரணி என்றாலே வற்றாத ஜீவநதி. இந்த ஜீவநதி சாதரண நதிஅல்ல. இந்த நதி தாமிர சத்து கொண்டது. நோய் தீர்க்கும் அரு மருந்து. இந்த நதியில் ஊர வைத்த நாரை கொண்டு செய்யப்படும் பத்தமடை பாய் உலக தரம் வாய்ந்தது. நோய் தீர்க்கும் அறுமருந்து”.
காளி சொன்னான். “சிரிக்காத பாரத பிரதமர் நரசிம்மராவையே சிரித்து ரசிக்க வைத்தது” என்றான்.
“அது ஏன் விக்டோரியா மகராணிக்கே பத்தமடை பாய் பரிசளிக்கப்பட்டுள்ளது”
தாணுலிங்கம் சொன்னார், “பத்தமடை பஸ் நிலையத்தில் இறங்கி ஊருக்கு போற ரோட்டில வலது பக்கம் பாருங்க. பத்தமடை பாஸ் பற்றி தயாரிப்பாளர் படங்கள் நிறைய வைத்திருப்பார். விதவிதமாக பத்தமடை பாயும் வைத்திருப்பார்” என்றார்.
சிரித்தார் முனைவர் முருகேசன். அதன் பின் தொடர்ந்தார். “திருநெல்வேலி அல்வா தாமிரபரணி தண்ணீர் மூலமாக செய்யும் போது அதன் சுவையும் தன்மையும் கூடுகிறது”.
“டவுண் நெல்லையப்பர் கோயில் முன்னால போய் பாருங்க இருட்டு கடை அல்வா வாங்க சாயங்காலம் நீண்ட லைன் காத்து கிடக்கும். சில நேரம் அடிபுடி வந்து போலீஸ் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும்”
தாணுலிங்கம் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தார்.
முனைவர் முருகேசன் சொன்னார். “கொஞ்சம் பொறுங்க. இது சிரிப்புக்கான நேரம் இல்லை. தாமிரபரணியின் பெருமையை ஏன் சொல்றேன்னு நான் சொல்லி முடிஞ்ச பொறவு உங்க எல்லோருக்கும் தெரியும்”
அனைவரும் அமைதியானார்கள்.
“அது மட்டுமல்லாமல் மூன்று போகம் விளைய வைக்கிறது தாமிரபரணி. கார் சாகுபடி ஜுன் மாதமும், பிசானம் சாகுபடி செப்டம்பர் மாதமும், முன்கார் சாகுபடி ஜனவரி மாதமும் நடைபெறுகிறது. தஞ்சைக்கு அப்புறமாக நெல் அதிகமாக விளையும் ஊர் தாமிரபரணி கரைத்தான். இதற்காத்தான் அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து அம்மை 16 உள்பட பல்வேறு வகையான நெல் வகைகள் உருவாக்கி வருகிறார்கள் நம் மக்கள்”.
எல்லோர் மத்தியிலும் ஒரு அமைதி உருவானது.
“நமது தாமிரபரணி வற்றாத ஜுவநதியாக இருக்க இயற்கையாக பெய்யும் தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் தான் காரணம். தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்சி மலையில் கொட்டோ கொட்டு என கொட்டி தாமிரபரணி அணைகளிலும், துணை நதிகளில் உள்ள அணைக்கட்டுகளையும் நிறைத்து பாசனம் நடைபெற காரணமாகிறது. வடகிழக்கு பருவ மழை, வங்களா விரிகூடாவில் வரும் புயல் மூலமாக மழை பெய்து தாமிரபரணி கரைகளை செழிப்படைய செய்கிறது”.
முனைவர் முருகேசன் ஒரு நிமிடம் நிறுத்தினார். அதன் பின் அருகில் கண்ணாடி டம்ளரில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டார்.
“இயற்கை நமது தாமிரபரணிக்கு நிறைய கொடைகளை கொடுத்துள்ளது. குறிப்பாக மே மாதம் நமது திருநெல்வேலியில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது தாமிரபரணி தோன்றும் பொதிகை மலை மேகக்கூட்டத்துடன் எப்போதுமே பெய்யும் மழையுடன் இருக்கும். அது மட்டுமா? இங்குள்ள வானுயர்ந்த மரங்கள் வானத்து மேகக்கூட்டங்கள் இழுத்து மழை பொழிய செய்து கொண்டே இருக்கும். இதனால் வருடம் முழுவதும் தாமிரபரணி தோன்றும் இடத்தில் மழை பொழிந்துகொண்டே இருக்கும். தாமிரபரணி தோன்றும் இடத்தில் உள்ள பொதிகை மலையில் உள்ள பல்வேறு நீர் ஊற்றுக்களும் பல துணை நதிகள் தாமிரபரணிக்கு தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கும். பூங்குளத்தில் தோன்றும் தாமிரபரணி உள்ளாறு பேயராற்றையும் சேர்த்துக்கொண்டு 15 கிலோ மீட்டர் சூரிய ஒளியே படாமல் மரத்துக்குள்ளும் மூலிகைகளையும் சேர்த்துக்கொண்டு ஓடி வந்து பாணத்தீர்த்தத்தில் வந்து விழும். இதனால் தான் இங்கு குளித்தால் நாள் பட்ட நோய் தீரும் என்பார்கள். இப்போ கூட பாருங்க ஆடி அமாவாசை அன்னைக்கு இங்க வர்ற பெரியவங்க, கொட்டும் சாரம் மழையிலும், தன்னோட பேரக்குழந்தைகளை தோளில தூக்கிப்போட்டுக்கிட்டு, சொரிமுத்து அய்யனார் கோயிலில இருந்து நடந்தே பாணதீர்த்தம் போய் குளிப்பாங்க. அதில ஒரு ஆனந்தம். சொரிமுத்து அய்யனார் அருளுன்னு நினைச்சாலும், தாமிரபரணியின் சுத்தமான மூலிகை கலந்த தண்ணீர் நோய் தீர்க்கிறது என்பது தான் உண்மை”.
அவர் தாமிரபரணி பெருமையை சொல்லுவதை கேட்கவே அனைவருக்கும் ஆனந்தமாக இருந்தது. எனவே அவரை கண் இமைக்காமல் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த அணையில் காரையாறு, மயிலாறு, பாம்பாறு உள்பட பல ஆறுகள் சேருகிறது. பாபநாசம் மேலணை இதனால நிரம்பி வழியும். மூன்று மலைகளுக்கு இடையே 144 அடியை தேக்கி நிக்க கூடிய இந்த அணையே ஒரு கண்கொள்ளா காட்சித்தான். அணையின் ஓரம் கிடக்கும் முதலை கூட்டமும், அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் ம்£ன் இனம், யானை கூட்டமும், மற்ற மிருகங்களின் நடமாட்டமும் பாபநாசம் மேலணைக்கு கூடுதல் சிறப்பு”.
அவர்சொல்வது பாட்டி பேரக்குழந்தைக்கு கதை சொல்வது போலவே இருந்தது. எனவே தான் அனைவரும் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர்.
“தாமிரபரணி நதி ஓடும் இடத்தில் எல்லாம் நீர் ஊற்றுக்கள் உண்டு. மலையில் மட்டுமல்ல, தரையில் ஓடி வரும் இடத்திலும் இந்த நீர் ஊற்றுக்கள் உண்டு. இந்த நீர் ஊற்றுக்கள் தலையணையில் இருந்து நதி கடலில் கலக்க கூடிய ஆத்தூர் வரை உண்டு. கரையில் விவசாயத்துக்காக பயன்படுத்தும் நீரில் இருந்து அந்த நீர் ஊற்றுக்கள் தாமிரபரணியை நோக்கி ஓடிவரும். ஆகவே தான் தாமிரபரணி வற்றாமல் இன்று வரை ஓடுகிறது”.
அவர் தாமிரபரணி வரலாற்றை கூற கூற அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். அனைவருக்கும் இவர் சொல்லும் தகவல் புதிய தகவலாக இருந்தது.
முனைவர் முருகேசன் தொடர்ந்தார். “இங்க பாருங்க. ஒரு காலத்தில மாஞ்சோலை எஸ்ட்டேட் ஆரம்பிக்கும் போது, தாமிரபரணி ஆற்றங்கரையில தேயிலை தோட்டம் போட்டா நல்லா சுவையா இருக்குன்னு நம்ம ஊரு மிரசுதாரர்கள், ஜமீன்தார்கள் எல்லாம் தாமிரபரணி ஆற்றங்கரையில், பொதிகை மலையில் உள்ள மரங்களை வெட்ட முயற்சி செய்தார்கள். அந்த சமயத்தில் நம்ம ஊருல இருந்த ஆங்கிலேய கலெக்டர் பங்கிள்துரை இங்கிலாந்து கோர்ட்டுக்கு போய் தடை உத்தரவு வாங்கி வந்தார். மரங்களை வெட்ட நீங்க அனுமதி கொடுத்த இன்னும் 200 வருசத்துல தாமிரபரணி பாலைவனமா போயிருமுன்னு வாதாடித்தான் அந்த தடை உத்தரவை வாங்கினாரு. அந்த புண்ணியவான் புண்ணியத்துல தான் இன்னைக்கு வரைக்கு நம்ம பொதிகைமலையில உள்ள மரங்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. அதையும் தாண்டியும் நம்ம மக்கள் இப்போ மரம் வெட்ட ஆரம்பிச்சாங்க. அதானாலத்தான் இப்போ அதுக்கு நம்ம வனத்துறை தடை போட்டு இருக்கு. நாம இப்பவும் தாமிரபரணிஆத்துல நல்லத் தண்ணீயை குடிச்சிக்கிட்டு இருக்கோம்”.
பெரும் மூச்சி விட்டார் முனைவர் முருகேசன்.
“இயற்கை இந்த அளவுக்கு நமக்கு உதவி புரிஞ்சது போல பின்னால வந்த அரசும் நமக்கு நிறைய உதவி புரிஞ்சாங்க. பொதுவாகவே நம்ம முன்னோர்கள் ரொம்ப அறிவாளிங்க. நம்ம தாமிரபரணியில் அணை கட்டினாங்கள். அந்த அணையில் இருந்து விவசாயத்துக்கு போற தண்ணீரை மீண்டும் தாமிரபரணியிலேயே விழும் படி வச்சாங்க. குறிப்பா பாபநாசத்துல இருக்கிற தலையணை என்னும் கோடை மேலழிகியான் அணையில வடக்கு தெற்கு கால்வாயின்னு இரண்டு இருக்கு. இந்த இரண்டுல பாசனம் முடிஞ்சி போன பொறவு அந்த தண்ணீர் மீண்டும் தாமிரபரணியிலேயே விழும். அடுத்து நதியுண்ணி அணை மூலம் நதியுண்ணி கால்வாய் வெட்டப்பட்டுருக்கு. ஊர்க்காடு பகுதியிலே பாசனத்தை முடிச்சிடடு கடனா நதியில விழுந்து மீண்டும் தாமிரபரணிக்கு அந்த தண்ணீ வந்து சேர்ந்திடும்.
அம்பாசமுத்திரத்தில வெட்டப்பட்ட கன்னடியன் அணை மூலம் கன்னடியன் கால்வாய் பிராஞ்சேரி வரைக்கும் பாசனத்துக்கு பயன்பட்டுட்டு பச்சையாறு வழியா மீண்டும் தாமிரபரணியில வந்து விழுந்துரும். அரியநாயகி புரம் அணைக்கட்டு மூலமாக கோடகன் கால்வாய் திருநெல்வேலி புறநகர் பகுதியில பாசனத்தை கொடுத்துட்டு மீண்டும் திருநெல்வேலி கால்வாய் பாசனத்தில விழுந்து தாமிரபரணிக்கே வந்திரும். அடுத்தாப்ல பழவூர் அணைக்கட்டில இருந்து பாளையங்கால்வாய் துவங்குது. மேலப்பாளையத்தையும், பாளையங்கோட்டையையும் கடந்து வசவப்பபுரம் சாணன் குளம் வரைக்கும் பாய்ந்து திரும்ப மருதூர் மேலக்கால்வாயில போய் விழுந்திரும்”.
நமது முன்னோர்கள் வெட்டிய கால்வாய் பயனை அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“சுத்தமல்லி அணைக்கட்டு திருநெல்வேலி கால்வாயா பாய்ஞ்சி அதன் பிறகு தாமிரபரணியில விழுந்துரும். இந்த கால்வாய் திருநெல்வேலி நகரத்துக்குள்ள வந்து அப்புறம் நயினார் குளத்துல பாயும். இந்த பகுதியில வெள்ளம் வரும் போது திருநெல்வேலி நகரம் சிக்கிடக்கூடாதுன்னு திருநெல்வேலி இரட்டை கால்வாய் உருவாக்கினாங்க. இதனால எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் திருநெல்வேலி நகரத்தில அழிவு ஏற்படாது”.
காளி நினைத்துப்பார்க்கிறான். “நமது முன்னோர்கள் பிற்காலத்தில் நமக்காக எப்படியெல்லாம் சிந்தித்து ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஆனா இப்போ உள்ள தலைமுறை வருங்காலத்துக்கு எதுவுமே இருக்க கூடாதுன்னு எல்லாத்தையும் கூறுபோட இல்லை அழையுது”.
அதுக்கப்புறம் மருதூர் அணைக்கட்டு மூலமா மருதூர் மேலக்கால், கீழக்கால் வழியா தண்ணீர் போகுது. இதுல மருதூர் மேலக்கால் வெள்ளுர் தென்கரை குளம், நாசரேத் தை சுற்றி ஐந்து குளத்தை நிரப்பி மீண்டும் தாமிரபரணி ஆற்றுக்குள்ளே வருது. அதோடு மட்டுமல்லாமல் இந்த கால்வாயில் இருந்து சடையனேரி கால்வாய் வழியாக புத்தன் தருவை வரை போகுது. இந்த புத்தன் தருவையில ஒரு தடவை தண்ணீரை தேக்கினா. 12 வருசத்துக்கு சாத்தான் குளம் பகுதியில நிலத்தடி நீர் பிரச்சனை வராதாம். அதுபோலத்தான் கீழக்கால் வழியா பேரூர், பெருங்குளம், சிவகளை குளமுன்னு நிரம்பி மீண்டும் தாமிரபரணிக்கு வந்து சேரும்”.
“ஆகா நமது முன்னோர்கள் எப்படி வடிவமைச்சு இருக்காங்க”. செல்வி மனதில் முன்னோர்கள் மீது மரியாதை கூடியது.
“தாமிரபரணியில முதலில கடடின 6 அணையும் நமது முன்னோர்கள் கட்டினது. கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. நம்ம பொதிகைமலை காட்டை காப்பாத்தினாருன்னு பேசினோமோ ஆங்கிலேய கலெக்டர். அந்த கலெக்டர் பக்கிள் துரை காலத்தில கட்டப்பட்ட அணைதான் ஸ்ரீவைகுண்டம் அணை. சுமார் 11 ஆயிரம் செலவில கட்டப்பட்டுச்சாம். இந்த அணைக்கட்டுல வடகால் ,தென்காலுன்னு இரண்டு கால்வாய். தென்காலுல தான் கடல் பாதி கடப்பா பாதின்னு சொல்லுற கடம்பா குளம் இருக்கு. அதை தாண்டி 11 குளத்தை கடந்து திருச்செந்தூருல இருக்கிற எல்லப்பநாயக்கன் குளம் வரைக்கும் தாமிரபரணி தண்ணீர் பாய்ந்து அந்த பகுதியை செழிப்பாக்குது. அதுக்கப்புறம் தான் அது கடலுக்குள்ளேயே போகுது”.
“வடகால்வாய் ஏரல் பேய்குளம், கோரம்பள்ளமுன்னு செழிப்பை தந்து, கடைசியல தூத்துக்குடி நகருக்கு மத்தியில ஓடுற பக்கிள் ஓடை வழியா தாமிரபரணி தண்ணீர் தூத்துக்குடி நகரை அழகுபடுத்துச்சு. இப்போ அதை சாக்கடையா மாத்திட்டாங்க. தூத்துக்குடியில பக்கிள் ஓடை உருவாக காரணமே பக்கிள் துரையின் ஆர்வம்தான். குறிப்பா சொல்லணுமுன்னா தாமிரபரணி நெல்லை மாநகர் நடுவே எப்படி அழகா ஓடி வருதோ, அதுபோல பக்கிள் ஓடையும் தூத்துக்குடி நடுவிலே ஓடணுமுன்னு ஆசைப்பட்டாரு. ஆனா நிலமையை பாருங்க. பங்கிள் ஓடை இப்போ சாக்கடை ஓடையா மாறிப்போச்சு. அதுபோலவே தாமிரபரணி முழுக்க சாக்கடையா மாறப்போற காலம் வந்திரும் போல எனக்கு தெரியுது. அதுவும் யார் இந்த நதியோட தண்ணீரை பயன்படுத்துறாங்களோ, அவுங்க மூலம்தான் சாக்கடை ஆக போகுது என்று சொன்னால் என் மனசுக்கு வேதனையா இருக்கு”.
அனைவரும் அதிர்ந்து நின்றனர். முனைவர் முருகேசன் தொடர்ந்தார். “நம்ம அரசை குறை சொல்ல முடியாது. ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு போகும் போது பாபநாசம் மேலணையை கட்டினாங்கள். கீழணையும் கட்டப்பட்டு மின்சாரம் தயாரிச்சாங்க. மணிமுத்தாறு அணையை காமராஜர் கட்டினாரு. சேர்வலாறு அணையை எம்.ஜி.ஆர் கட்டினாரு. தாமிரபரணி துணைநதியான கடனா நதி, ராம நதி, பச்சையாறு போன்ற நதிகளுல எல்லாம் கருணாநிதி அணைக்கட்டுனாரு. இது எல்லாமே நம்ம நீர் நிலைகளை காப்பாற்ற அரசு எடுத்துக்கிட்ட முடிவுதான். இதை நாம வரவேற்கிறோம். இதனாலதான் குடிதண்ணீருக்காக அனைத்து நீர் உறிஞ்சு கிணற்றையும் ஆத்துக்குள்ள போடுதோம். தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுக்கோம். தூத்துக்குடி அனல் மின்சார்த்துக்கு தண்ணீ கொடுக்கோம். இது எல்லாமே சிறப்புத்தான்”.
அவர் கதை போலவே தாமிரபரணி வரலாற்றை கூறிக்கொண்டிருந்தார்.
“ஆனால் இப்போ நடக்கிற நிலமையை பாக்கும் போது கொஞ்ச காலத்தில நம்ம கண் முன்னால நதி அழிஞ்சி போயிடுமோன்னு தோணுது”.
“என்னய்யா சொல்லுதீங்க” காளி மனகஷ்டத்துடன் கேட்டான்.
“ஆமாம். இப்போ ஆத்து மணலை அள்ளிட்டே வாறோம். அதுவும் அரசே அந்த வேலைக்காக ஏலம் வுடுது. இதனால வழி நெடுக இருந்த ஊற்று அழிக்கப்படுது. இதனால் வழிநெடுக தாமிரபரணி தனது உயிரை கொஞ்சம் கொஞ்சமா விட்டுக்கிட்டே இருக்கு. தொழிலை பெருக்கனுமுன்னு, அரசு தொழிற்சாலையும், தனியார்தொழிற்சாலையும் தங்களோடு கழிவு நீரை தாமிரபரணியில விடுதாங்க. இதனால் நதியில் இருக்கிற வகைவகையான மீன்கள் எல்லாம் செத்து மிதக்கு. இதே நிலைநீடிச்சா மீன்கள் இனம் அழிஞ்சுரும். இந்த சாக்கடையை குடிக்கிற மீனே இறந்தா? அதை குடிதண்ணீராக குடிக்கிற நம்ம நிலையை கொஞ்சம் நினைச்சு பாருங்க”.
முனைவர் முருகேசன் சொல்லும் பேச்சு நியாயமாக பட்டது.
“அய்யா. இந்த நிலமையை மாற்ற முடியாதா?. தாமிரபரணியை காப்பாற்றவே முடியாதா?”
“முடியும். அதுக்காத்தான் நாம முயற்சி செய்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் சொரிமுத்து அய்யானர் கோயிலில ஆடி அமாவாசைக்கு கூடுறாங்க. அவங்கள் பிளாஸ்டிக் பொருளை காட்டுக்குள்ள போட்டுட்டு போறாங்க. அதை யானை சாப்பிட்டு இறந்து போகுது”. விரக்தியாக பேசினார்.
“என்னய்யா சொல்றீங்க”. காளி ஆச்சரியமாக கேட்டான்.
“ஆமாம் சமீபத்தில ஒரு யானை காடடுக்குள்ள இறந்து கிடந்திருக்கு. அதை போஸ்ட் மாஸ்டம் பண்ணி பார்த்த போது அதன் வயித்தில பிளாஸ்டிக்கு இருந்து இருக்கு”.
அனைவரும் அதிர்ந்தனர்.
“சொரிமுத்து அய்யனார் கோயில கூடுற இடத்தில மக்கள் போடுற குப்பை, அவுக கழிவுகளை தாமிரபரணியில போடுற காரணத்தினால தாமிரபரணியோட நிலமை படுமோசமா ஆயிட்டு வருகிறது. அதுவும் தெள்ளத்தெழிவா தாமிரபரணி ஓடி வர்ற காட்டுக்குள்ளேயே மாசுபட்டு போயிடுது”.
உண்மை தானே மனுசன் கால் வச்ச இடம் கட்டமண்ணு தான்.
“வருடம் வருடம் கோயில் விழா முடிஞ்ச பொறவு நாம தண்ணீரை டெஸ்ட் செய்றோம். வருடம் வருடம் நில¬ மோசமாகிட்டுத்தான் இருக்கு.
அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“இதே நிலமை நீடிச்சா 2023 ஆம் ஆண்டு நம்ம நதி சாக்கடை கலந்து மக்கள் குடிக்கவே லாயக்கற்ற தண்ணீரை கொண்ட நதியா மாறிடும். அதுக்கப்புறம் நம்ம ஊரே பாலைவனமாகிவிடும்”.
அனைவரும் அதிர்ந்தனர். “அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும். மக்கள் கிட்ட நதியின் பெருமையை அருமையை எடுத்துச் சொல்லணும். குப்பைகளை சாக்கடைகளை தாமிரபரணியில் கொண்டு கொட்டுவதை நிறுத்த ஏற்பாடு செய்யணும்”.
அனைவரும் தாமிரபரணியை காப்பாற்ற உறுதியை எடுக்க தயரானார்கள். முனைவர் முருகேசன் மேலும் சொன்னார்.
“நம்ம தொண்டு நிறுவனம் மூலமாக நதி ஓரத்தில இருக்கிற ஒவ்வொரு கிராமத்திலேயும் தன்னார்வல தொண்டர்களை உருவாக்கணும். அவர்கள் எல்லா இடத்திலும் நதியோட பெருமையை சொல்லி நதியை கொண்டாட சொல்லணும்”. தாணுலிங்கம் யோசித்தார். “அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. மக்களிடம் இன்னும் நிறைய மாற்றத்தை கொண்டு வரணும்” என நினைத்தார்.
“இப்போ நாம முதலில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அவர்களிடம் குப்பைகளை கொட்டாதீர்கள் என கூறுவ«£ம். அதன் பிறகு தண்ணீரை டெஸ்ட் எடுப்போம். அதில் ஏற்படும் பாதிப்புகளை பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லுவோம். எபடியாவது வருங்கால சன்னதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம்”.
முனைவர் முருகேசன் உறுதி கூறினார்.
“தொடர்ந்து 11 பேர் இந்த பணியில் ஈடுபட்டார்கள். காளியும் செல்வியும் கையில் பேட்டரி மைக்கை எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் கோணி பையில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்க தயரானார்கள். இவர்கள் அனைவரும் பாபநாசம் செக்போஸ்ட்டில் மக்கள் வாகனங்கள் வரும் இடத்தில் நின்றனர்.
காளி மைக்கில் குப்பைகளை பற்றி காட்டில் போடாதீர்கள் என பேசினான். செல்வியும் மற்றவர்களும் ஒவ்வொருவரிடமும் சென்று பிளாஸ்டிக்கு இருக்கிறதா? என சோதனை செய்தனர். இவர்களுக்கு வனத்துறையினரும் உதவி புரிந்தனர்.
இவர்களின் 11 பேர் செயல்களையும் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் இந்த 11 பேரும் ஏதோ பையித்த காரர்கள் என நினைத்தனர்.
ஆனால் இதை அலட்சியம் செய்யும் மக்கள் சிறிது காலத்தில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டப் போகிறார் என்பது அப்போது யாருக்குமே தெரியவில்லை.
( தொடர்ந்து பயணிப்போம்)


