ஆர். கே. நாராயணன் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.
தந்தையின் பெயர் வி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயர். தாய் ஞானாம்பாள். ஆர்.கே.நாராயணன் இந்தியாவில் மைசூரில் இலக்கம் 1 வெள்ளா வீதியில் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்த எண்மருள் இவர் மூன்றாமவர். இவரது முழுப்பெயர் (இ)ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி. தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வழக்கப் படி முதற்பெயரானது பெற்றோரின் பெயரே வருவதால் இவரது சகோதரர்களும் முதற்பெயராக ஆர்.கே என்பதையே கொண்டிருந்தனர் . இவரது முதற் பதிப்பாளரான ஹமிஷ் ஹமில்ரன் இவரது பெயர் பெரிது எனக்கருதி அதைக் குறுக்கும் ஆலோசனைப் படி ஆர்.கே. நாராயணசுவாமி என அழைக்கப்பட்டார்.
நாராயணனின் தாயாரான ஞானாம்பாள் இவரது பிறப்பை அடுத்து உடல் நலங்குன்றினார். எனவே இவர் ஓர் மருத்துவத் தாதியினால் பராமரிக்கப் பட்டார். தாயார் மீண்டும் தாய்மையடைந்ததால் இவர் சென்னையிலுள்ள அம்மணி என்றழைக்கப்படும் அம்மம்மாவின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இவர் தனது பதின்ம வயதுவரை அம்மம்மாவுடனும் மாமாவான ரீ.என்.சேஷாச்சலத்துடனும் வாழ்ந்து வந்தார். இவர் தனது சகோதரர்களையும் பெற்றோரையும் சந்திக்க ஒரு சில வாரங்களையே செலவழிப்பார். நாராயண் தமிழ் மொழியையும் பாடசாலையில் ஆங்கிலத்தையும் கற்று வந்தார். நாராயணினின் சுயசரிதையான எனது நாட்கள் என்ற பொருள்படும் ஆங்கில நாவலில் பெற்றோரைப் பார்ப்பதற்காக மைசூர் வந்த போது கன்னட மொழிபேசும் கடைக்காரர்கள் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடியாதிருந்ததையும் பின்னரே இம்மொழியை அறிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
8 வருடக்கல்வியை சென்னையில் அம்மம்மாவின் வீட்டிற்கு அருகில் உள்ள லூத்தரன் மிஷன் பள்ளியில் படித்தார். சிறிது காலம் CRC உயர் பாடசாலையிலும் படித்தார். சென்னை புரசைவாக்கம் ஈ.எல்.எம்.பெப்ரிஷியஸ் பள்ளி, மைசூர் மன்னர் கல்லூரி உயர் நிலைப்பள்ளி, மன்னர் கல்லூரி ஆகியவற்றில் படிப்பு. இவரது தகப்பனாரான ராசிபுரம் வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயர் மைசூரில் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்ட பின்னர் பெற்றோரிடமே சென்றுவிட்டார். ஆரம்பத்தில் பிரதான் புத்தகமானது களைப்பளிக்கக் கூடியதாக இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதும் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றியடையவில்லை எனினும் மீண்டும் முயற்சி செய்து மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார்.
அநேகமாக நாரயணனின் எழுத்துக்கள் சுவாமியும் அவரது நண்பர்களும் என்று ஆங்கிலத்திலேயே ஆரம்பித்தது. இது மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது என்றாலும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
ஒரு சில குறிப்பிடத்தக்க இந்திய ஆங்கில எழுத்தாளர்களே இந்தியாவில் ஏறத்தாழத் தொடர்ந்து வசித்து வந்தனர். 1956 இல் ரொக்ஃபெல்லர் அமைப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். தி இந்து ஆங்கில செய்தித்தாளில் குறுங்கதைகளை எழுதினார். அத்துடன் நியாயம் என்னும் சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் மைசூர் ஆசிரியராகவும் சிறிதுகாலம் கடமையாற்றினார்.
இவரது படைப்புகள் எளிய நடையும், இழைந்தோடும் நகைச்சுவை உணர்வும் கொண்டவை. இவரது கதாபாத்திரங்கள் யாவும் சிற்றூர்களைச் சார்ந்தவை. சுவாமியும் நண்பர்களும் என்பதிலிருந்தே அவரது எழுத்தாக்கங்கள் ஆரம்பித்தன. முதலில் இவரது நாவல்களை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வரவில்லை. இறுதியாக நண்பரிடம் கிரகாம் கிறீனியிடம் ஆரம்ப வரைதலைக் காட்டினார். கிறீனி இதை மிகவும் பாராட்டியதுடன் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைப் பின்பற்றி பல நாவல்களைப் பிரசுரித்தார். சில நாவல்கள் இவரது சுயசரிதையைப் பின்பற்றியவை. உதாரணமாக ஆங்கில ஆசிரியர் என்னும் நாவல் இவரது இளம் மனைவியின் மரணத்தைப் தழுவியெழுதப் பட்டதாகும்.
நாராயணனின் ஆக்கங்கள் ஒவ்வொரு நாளும் சமுதாயத்தில் நடைபெறுவதைத் தழுவியதாகும். இவர் இந்துப் புராணக் கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் கூறத் தயங்கவில்லை இவரது இத்தன்மையானது விமர்சிக்கப்பட்டபோதும் சிறந்த ஓர் எழுத்தாளராகவே கருதப் பட்டார்.
எழுத்தில் மால்குடி என்ற கற்பனை நகரை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை ரசிக்க வைத்தவர். கிரஹாம் கிரீன், ஈ.எம். பாஸ்டர், சோமர் செட் மாம், மால்கம் முகரிட்ஜ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இவரது ரசிகர்கள். பல சிறு கதைகளும், புதினங்களில் உள்ள பகுதிகளும் தொலைக்காட்சி நாடகங்களாக நடிக்கப்பட்டன.
பள்ளி ஆசிரியர், பத்திரிகை நிருபர் பணிகளோடு மாநிலங்கலவை நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார். ராக்கிங் கொடுமை, குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
மால்குடி என்பது இவர் கதைகளில் பயன்படுத்திய கற்பனை ஊர் ஆகும். இந்திய அரசு இவரை சிறப்பிக்கும் விதத்தில் மைசூரிலிருந்து யஷ்வந்பூர் வரை செல்லும் விரைவுத் தொடருந்துக்கு மாகுகுடி விரைவுத் தொடருந்து என்று பெயரிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் கற்பனை ஊரின் பெயர் கொண்ட ஒரே தொடருந்து இதுவாகும்.
கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.லீட்ஸ் பல்கலைக்கழகம் (1967) மைசூர் பல்கலைக்கழகம்(1976) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (1973) ஆகியவை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின .2001 ஆம் ஆண்டில் (இறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு) இவருக்கு பத்ம விபூஷண் பட்டமும் வழங்கப்பட்டது.


