தூத்துக்குடியில், அரசு தடை செய்த புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி திலீப் மற்றும் போலீசார் இன்று (12.05.2026) அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (52) என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களைச் சட்டவிரோத விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ 125 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 27,000/- ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


