மாசி மாதப் பிறப்பு மற்றும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் பெருமாள் கோவிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை ஒட்டி, வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் “ராஜ அலங்காரத்தில்” எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர்.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் கோவிலை 27 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மாசி மாதப் பிறப்பை ஒட்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


