தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜுவானா கோல்டி வருகை புரிந்தார். துணை ஆளுநர் கண்ணன், திட்ட இயக்குனர் முகமது இப்ராகிம், செயலாளர் விக்டர் கௌரவ பங்கேற்பாளர்களாக ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி தலைவர் பிண்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் மற்றும் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழர் பாரம்பரியம் வேட்டி சட்டை அணிந்து பொங்கல் வைத்தனர். பின்பு பசு மாட்டிற்கும் கன்று குட்டிக்கும் ஆடை அணிந்து மாலையிட்டு வணங்கினர். சிறப்பு விருந்தினர் பேசுகையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வேலை பளு இருந்தாலும் குடும்பத்தினருடன் தங்களுக்குரிய நேரத்தை தினமும் ஒதுக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல ஊன்றுகோலாக இருக்கும்.
நாங்கள் அப்படித்தான் இருபது வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம் நிறைய பிரச்சனைகள் வரும் ஆனால் அந்த நேரம் செலவிட்டு பகிர்ந்து கொள்வதின் மூலம் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அதனால் தினசரி நேரம் ஒதுக்குங்கள் என்று கூறினார்.
அதன்பின் சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சாக்கு ஓட்டம், இசை நாற்காலி உள்ளிட்ட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம், சகாயராஜ் ஆகியோர் வழங்கினார். பின்பு வருகை புரிந்த அனைவருக்கும் பொங்கல் பரிசு மற்றும் 90ஸ் கிட்ஸ் மிட்டாய் வழங்கப்பட்டது.


