தன்னுடைய பாட்டுத் திறனால் பாமர மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர் பாரதியார்.
அச்சமில்லை…. அச்சமில்லை… என்று மக்களுக்கு உற்சாகத்தைத் தந்தவர். விடுதலைப் போராட்டக் காலங்களில் அவர் வேலை செய்த பத்திரிகைகளில் போராட்டச் செய்திகளையும் தலைவர்களது வீரமிக்க எழுச்சிதரும் பேச்சுகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் வெளியிட்டார். ஆங்கிலேயருக்கு பாரதியார் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்தார்.
எட்டையாபுரமாம். தமிழ் வளர்த்த மண்ணில் சின்னச்சாமி ஐயருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் 11.12.1882 இல் பிறந்தார். பெற்றோரிட்ட பெயர் சுப்பிரமணியன் என்ற சுப்பையா. இவருடைய சிறுவயதில் கவிதை இயற்றும் திறமையையும், அறிவுக் கூர்மையையும் கண்ட எட்டையாபுரம் ஜமீன் வேங்கடேஷ்வர எட்டம நாயக்கர், பாரதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தினார்.
1904இல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் மூன்று மாத காலம் தமிழாசிரியர் பணியாற்றினார். இவரது எழுத்தாற்றல் சுதேசமித்திரன் நாளேட்டிற்கு துணை ஆசிரியராக இழுத்துச் சென்றது. திறன்மிகு படைப்பாற்றல், பின்பு இந்தியா இதழின் ஆசிரியரானார். தன்னுள் சுடர் விட்டுக் கொண்டிருந்த விடுதலை வேட்கையை கட்டுரை, தலையங்கம். போராட்டச் செய்திகள் வாயிலாகவும் வெளிப்படுத்தினார்.
ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு துளியளவும் அச்சப்படாமல் அவரிடமிருந்து எழுத்துக்களும் கருத்துக்களும் ஏவுகணை போல புறப்பட்டன. ஆங்கிலேயர் நிலை குலைந்து தடுமாறினார். மக்களை போராட்டங்களுக்கு இழுக்கும் சக்தியுடையதாக பாரதியாரின் படைப்புகள் இருந்தன.
தீவிரவாதக் கொள்கையுடைய பாலகங்காதர திலகரின் போராட்டங்கள் சொற்பொழிவுகள் மீது பற்று கொண்டார். வ. உ. சிதம்பரனார். சுப்பிரமணிய சிவா. டி.வி.கிருஷ்ணசாமி ஐயர் ஆகியவர்களுடன் நெருங்கிய நண்பரானார்.
தூத்துக்குடி கோரல்மில் தொழிலாளர்களின் போராட்டம் பற்றியும் வ.உ.சிதம்பரனார். சுப்பிரமணிய சிவா ஆகியோரின் வீரம் செறிந்த பேச்சுக்களையும் தம்முடைய நாளிதழ்களில் வெளியிட்டு அவற்றை உலகறியச் செய்தார் பாரதியார்.
1905 இல் பாலகங்காதர திலகரை வ.உ.சி.யுடன் பூனாவில் சந்தித்தார். 1907 இல் குஜராத் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர் களைக் கண்டார். 1908 இல் ஜூன் மாதம் பாளையங்கோட்டை சிறையில் இருந்த வ.உ.சிதம்பரனாரையும், சுப்பிரமணிய சிவாவையும் சந்தித்து மகிழ்ந்தார்.
உரிமைக்குரலை எழுப்பிய அவரது பேனா ஆங்கிலேயருக்கெதிராக செய்தியை வெளியிட்டுக் கொண்டு இருந்ததால் 1908 இல் இந்தியா பத்திரிகை அடக்குமுறைக்கு உள்ளானது. பத்திரிகை பதிப்பாளர் கைது ஆனார். பாரதியார் பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு தலைமறைவானார். அங்கு அரவிந்தர் மற்றும் முன்னணி விடுதலைப் போராட்டத் தலைவர்களையும், வீரர்களையும் சந்தித்தார்.
1911 ஆம் ஆண்டு மணியாச்சியில் வைத்து வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த வ.உ.சிதம்பரனாரின் வலது கையாகத் திகழ்ந்தவருமான ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை.வ.வே.சு ஐயர் ஆகியோரையும் அங்கு கண்ட பாரதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நண்பர்கள் உதவியுடன் இந்தியா பத்திரிகை மீண்டும் மலர்ந்தது.
பாரதியாரையும். வ.வே.சு ஐயரையும் ஆஷ்துரை கொலை வழக்கில் சேர்த்து விட ஆங்கிலேயரின் போலீஸ் பாண்டிச்சேரியில் நோட்டமிட்டு அலைந்தது. மிக மிக கவனமுடன் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் பாண்டிச்சேரி பாரதியாரின் புகலிடமானது. 1918 ல் ஒரு நாள் பாண்டிச்சேரியிலிருந்து தமிழகம் திரும்பும் வழியில் கடலூரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலையானார்.
திருநெல்வேலிக்கு வந்த பாரதியார் கடையம் என்ற தனது மாமியார் கிராமத்தில் சிறிது காலம் இருந்தார். மீண்டும் சென்னை அழைத்தது. சுதேசமித்திரன் நாளிதழின் உதவி ஆசிரியரானார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு தேங்காய் பழம் கொடுப்பது பாரதியாரின் வழக்கமாக இருந்தது.
ஒரு நாள் அந்த யானை மதம் பிடித்தது அறியாமல். வழக்கம் போல பழம் கொடுத்தார். யானை பாரதியாரின் சிறப்பறியாமல் தூக்கி தரையில் வீசியது. நோய் வாய்ப்பட்ட பாரதியார் 1921செப்டம்பர் 11 இல் மறைந்தார்.
பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த அக்காலத்தில் பெண்கள் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும், தீண்டாமை ஒழியவும் தம் பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மகாகவி நமது சுப்பிரமணிய பாரதியார்.
இன்றும் அவரது பாடல்கள் மூலம் நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


