தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆழிகுடி. இந்த ஆழிகுடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வெங்கடாஜலபதி கோவில் உள்ளது.
இந்த வெங்கடாஜலபதி கோவில் மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாகும். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.
இதற்கிடையில் சீரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் இணைந்து சீரமைப்பு பணிகளை தொடங்கினர். தற்போது கோவில் முழுவதும் பழமை மாராமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஆழிகுடி வெங்கடாஜலபதி கோவிலில் சுமார் 125 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
125 வருடத்திற்கு பின்னர் தங்கள் வீட்டின் முன்பு உற்சவர் வெங்கடாஜலபதி கருட வாகனத்தில் வர உள்ளதை அறிந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தெளித்து வண்ணகோலமிட்டனர். கருட வாகனம் வருவதற்காக சாலைகள் சீரமைக்கப்பட்டது.
மாலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது. ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் நிறுத்தி தேங்காய் பழம் உடைத்து, கற்பூரம் காண்பித்து வழிபாடு செய்தனர். ஒரு சில பக்தர்கள் தங்கள் வீட்டின் முன்பு கடவுள் வருவதை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். கருட வாகனத்தின் பின்னால் பஜனை குழுவினர் பாடல்களை பாடியபடி வருகை தந்தனர்.
125 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் வீடுகள் முன்பு வீதியில் சுவாமி பவனி வருவதை ஒவ்வொரு வீட்டு பக்தர்களும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


