தாமிரபரணி ஆற்றில் பல்வேறு சுவடுகள் உண்டு. அதில் பல சுவடுகள் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது. அதில் சேரன்மகாதேவி படத்தில் இருப்பது போல ஒரு பாலம் இருந்தது. அந்த பாலம் இரும்பு பாளங்களால் மூடப்பட்டு பார்க்க பிரமாண்டமாக இருந்தது. திருநெல்வேலி & செங்கோட்டை ரயில்வே அகல பாதை திட்டம் நிறைவேற்றும் போது அந்த பாலத்தினை பிரித்து எடுத்து விட்டார்கள். இதனால் வரலாற்-று சிறப்பு மிக்க பாலம் மறைந்தாலும் , மக்கள் மனதில் அது மறையவில்லை.
நெல்லை & செங்கோட்டை ரயில் பாதை இரண்டு கட்டமாக போடப்பட்டது. முதலில் 1.06.1902 ஆம் ஆண்டு 19.14 கிலோமீட்டர் பாதை திறக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக கல்லிடைக்குறிச்சியில் இருந்து செங்கோட்டை ரயில் பாதை 1.08.1903 ல் திறக்கப்பட்டது. இதன் தூரம் 31.28 கிலோ மீட்டராகும்.
ஏற்கனவே இந்த மீட்டர் கேஜ் பாதை செங்கோட்டை & புனலூர் மலைப்பாதையாக 26.11.1899 ல் திறந்த பாதையோட இணைக்கப்பட்டது. புனலூர் செங்கோட்டை பாதை மிகவும் அழகான பாதை. இங்கு சினிமா சூட்டிங் பல நடந்துள்ளது. முரட்டு காளை படத்தில் கடைசி கிளைமேகஸ் சண்டை காட்சிகள் இங்கு தான் எடுக்கப்பட்டது. அதே போல் “வண்டி வண்டி ரயிலு வண்டி” என்ற ஜெயம் பட காட்சியும் இங்குத்தான் எடுக்கப்பட்டது.
அதுபோலத்தான் சேரன் மாகதேவி ஆற்று பாலமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சினிமா காரர்களை கவரும் இந்த ரயில் பாதை மேலே போடப் பட்ட இரும்பு கவசம் பல திரைப்படங்களில் காட்சி யாக அமைந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் சண்டை காட்சிகள் அமைக் கவும் இந்த இடத்தினை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அகல ரயில் பாதை அமைக்கும் போது இந்த பிரமாண்டமான பாலத்தினை கழற்றி விட்டார்கள்
தற்போது புதிய ரயில் பாலம் கூண்டு இல்லாமல் காட்சியளிக்கிறது. சேரன்மகாதேவியின் அடையாளத்தினை இது இழந்து விட்டதோ என்பது போல தோன்றுகிறது. அந்த பாலத்தின் காட்சிகளை பார்த்த நாங்கள் தற்போது அவ்விடத்துக்கு செல்லும் போது எதையோ இழந்தது போலவே நினைக்கிறோம். தாமிரபரணி ஆற்றில் சேரன்மாகதேவி ரயில் பாலம் தற்போது வெறுமையாகவே காணப்படுகிறது.
இதே போல் ஒரு அதிசயமான கோயில் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. குறிப்பாக ஊர்காட்டில் மூதேவிக்கும், கொற்கையில் கண்ணகிக்கும் கோயில் உள்ளது என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருககும். அதுபற்றி தொடர்ந்து பேசுவோம்.
பெரும்பாலுமே மூதேவிக்குக் கோவில் கட்டமாட்டார்கள். காரணம், மூதேவி என்றால் சீதேவிக்கு எதிர்மாறாக அழகற்ற அவலட்சணமானவள் என்று அவளை உதாசீனப்படுத்துவோம்.
ஆனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்க்காட்டில் ரைஸ்மில் மண்டபம் அருகிலுள்ள ஆலமரத்தின் கீழ் பிள்ளையார் சிலையையட்டி ஒரு கல்லில் மூதேவி உள்பட 3 பேரின் கல் சிற்பம் உள்ளது. அதை மக்கள் வணங்கி வருகிறார்கள். மூதேவி பருத்த மார்பு கொண்டவள். மேலும் கழுதையை வாகனமாகக் கொண்டவள் என்பதை உணர்த்தும் வகையில் இங்கு மூதேவி சிலை உள்ளது. அருகில் ஒரு குழந்தையும் காணப்படுகிறது.
இக்கோவில் ஒருசிலருக்கு மட்டும் உரியத் தெய்வம் என்றும் கூறுவார்கள். வணிகச் செட்டியார்களும் இதை வழிபாடு செய்வார்கள். மேலும் கழுதை வாகனமாக இருப்பதால் துணிகளின் அழுக்கை நீக்கி வண்ணம் செய்யும் வண்ணார் இனத்தவர்களும் இத்தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். தற்சமயம் இக்கோவிலை ஏதோ ஒரு காவல் தெய்வம் என்று நினைத்துச் சரியாக யாரும் பராமரிப்பது கிடையாது.
மூதேவி குறித்து புராணம் என்ன சொல்கிறது.
ஆலகால நஞ்சினை சிவபெருமான் குடித்ததும் பாற்கடல் அமைதியானது. மீண்டும் பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைய ஆரம்பித்தனர். இந்த நஞ்சினைத் தொடர்ந்து உச்சை சிரவம் என்னும் வெண்குதிரை வெளிப்பட்டது. அதை அசுரர்கள் தனது வசமாக்கிக் கொண்டனர். அசுரர்களின் அரசான பலிராஜா அதை தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். அடுத்து காமதேனு வெளிப்பட்டாள். அவளை ரிஷிகள் தங்களுடன் வைத்து கொண்டனர். காமதேனுவைத் தொடர்ந்து ஐராவதம் என்னும் வெள்ளை யானை தோன்றியது. அதை இந்திரன் தன் வசம் ஆக்கிக் கொண்டார். பின்பு கௌஸ்துபமணி என்ற பிரகாசமான இரத்தினமாலை வெளிப்பட்டது. அதைத் திருமால் தனது மார்பில் தாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து கேட்டதைத் தரும் பாரிஜாதம் என்னும் மரமும் அப்சரஸ்ம் தோன்றியது. அதைக் கைப்பற்றிய அசுரர்கள் இதனால் பிரயோஜனம் இல்லை என்று விட்டு கொடுக்க அதைத் தேவர்கள் தன் வசமாக்கிக் கொண்டனர்.
அடுத்து கருமையான நிறத்துடனும் துர்வாடையுடனும், பெருத்த மார்புடனும், சிவந்த கண்களுடனும் அவலட்சணமாய் மூதேவி தோன்றினாள். அவளை யாருமே ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையடுத்து அகங்காரத்துடன் மூதேவி அங்கேயே நின்றாள். அதன்பின் அழகு சுந்தரியான மகாலெட்சுமி தோன்றினாள். அவளைச் சொந்தம் கொண்டாட நான், நீ என்று தேவர்களும், அசுரர்களும் போட்டிப் போட்டனர். அந்தச் சண்டைக்குப் பின் அவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி நாம் அனைவரும் வரிசையில் நிற்போம். மகாலெட்சுமி யாருக்கு மாலை போடுகிறாரோ அவர், அவளை மணந்து கொள்ளட்டும் என தீர்மானம் பண்ணினார்கள். ஆனால் இந்த வரிசையில் நிற்காமல் தனியே நின்ற திருமாலைக் கண்டு மயங்கிய மகாலெட்சுமி அவரது கழுத்தில் மாலையிடச் சென்றார். அப்போது அந்த அமங்கல குரல் கேட்டது. திருமணத்தை நிறுத்து என்று மூதேவி கத்தினாள். ஏன் என்று காரணம் கேட்ட போது, நான் தான் மூத்தவள், நான் இருக்கும் போது இளையவளுக்கு எப்படி திருமணம் செய்யலாம் என்று கேட்டார்.
மூதேவியின் நியாயத்தைப் புரிந்து கொண்ட திருமால் எப்போது மூதேவிக்குத் திருமணம் நடைபெறுகிறதோ அதன்பிறகு தான் எனக்குத் திருமணம் என்று கூறிவிட்டார். யாருமே மூதேவியைக் கைப்பிடிக்க முன்வரவில்லை. இவளை மணந்தாள் அழுக்கு, அசுத்தம், இருள், அறியாமை, தோல்வியே ஏற்படும் என அனைவரும் ஒதுங்கி நின்றனர்.
ஆனால் முனிவரான உத்தாலகர் “நான் மூதேவியை மணந்து கொள்கிறேன்” என்றார். அனைவரும் அதிர்ந்து நின்றனர். ஏனெனில் உத்தாலகர் திருமால் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருக்கும் ஒரு பிரம்மச்சாரி. அவர் திடீரென்று திருமணம் வேண்டும் என்று சொல்வதும், அதுவும் அவல நிலையில் உள்ள மூதேவியை மணக்க போவதாகக் கூறியதும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர்கள் சந்தேகத்தினைப் புரிந்து கொண்ட திருமால், உத்தாலகரிடம் “முனிவரே, ஏன் இந்த விபரீத முடிவு?Õ என்று கேட்டார். அதற்கு அவர் Ôஇறைவா உங்கள் திருமணத்தை நான் கண்குளிரக் காணவேண்டும். அதற்காக எத்தனை இடைஞ்சல் வந்தாலும் தாங்கிக் கொள்வேன்” என்றார்.
“உத்தாலகரே, நீர் எமது உண்மையான பக்தர். உனது தவவலிமையை மூதேவிக்கு வழங்கும். அவளும் நல்ல பிறவியாக மாறிவிடுவார்” என்றார் திருமால். ஆகவே தவ வலிமை பெற்ற மூதேவி அவலெட்சண உருவம் மறைந்து போய் அழகாய் மாறினாள்.
உடனே உத்தாலகர், “இவன் பார்வை தவறு செய்பவர்கள் மேல் பட்டால் தண்டனைக்கு உள்ளாவர். நல்லவருக்கு இவளால் எந்தத் தீங்கும் நேராது” என்று கூறினார். பின்பு மூதேவியின் கரத்தினை முனிவர் பிடித்த பின் திருமால் சீதேவியின் கரத்தினைப் பிடித்தார். அன்று முதல் நல்லதைச் செய்யச் சீதேவியும், தவற்றைத் தட்டிக் கேட்க மூதேவியும் வலம் வர ஆரம்பித்தனர்.
ஆனால் சீதேவிக்குச் சிலை வைத்து வணங்கும் நாம் இந்த மூதேவிக்குச் சிலை வைத்து வணங்கத் தயங்கியே வந்தோம். அதாவது மூதேவி என்பது தூக்கம். ஒருவன் கொட்டாவி விட்டு விட்டால் அவனைப் பார்த்து இதோ மூதேவி வந்து விட்டாள் என்று கூறுகிறோம். ஒருவன் பொன், பொருள் (சீதேவி) இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்து விடலாம். ஆனால் மூதேவி அதுதான் தூக்கம் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? அப்படி தூக்கம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் பைத்தியம் பிடித்து விடும். ஆகவே தான் தூக்கத்தை தரும் உயர்ந்த தெய்வமான மூதேவிக்கு ஊர்க்காட்டில் சிலை வைத்து வணங்கி வருகிறார்கள்.
ஒரு மனிதன் தூக்கம் இன்றி கஷ்டப்பட்டால் ஊர்க்காட்டில் உள்ள மூதேவி கோவிலுக்கு வந்து வணங்கி நின்றால் நிம்மதி கிடைக்கும்.
சரி. அடுத்து கண்ணகிககு எங்கே கோயில் உள்ளது என்று கேட்பீர்கள்.
பாண்டிய மன்னனின் மிகப்பெரிய துறை முக பட்டணமாக விளங்கிய கொற்கையில் தான் கண்ணகி கோயில் உள்ளது.
கொற்கை வரலாற்று சிறப்பு மிக்க இடம். தலோமி போன்ற அறிஞர்கள் இவ்வூரை பற்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்கள். கொற்கை துறைமுகம் பாண்டியரின் மிக முக்கிய இடமாக இருந்துள்ளது. இடை சங்கமே இங்குதான் இருந்துள்ளது. “சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்” என நக்கீரனார் பாடியுள்ளார். இதிலிருந்து நக்கீரனார் வாழ்ந்த இடம் சங்கு அறுக்கும் தொழில் செய்யும் இடமாக கருதப்படுகிறது. அந்த இடம் கொற்கையே என அறிஞர்களும் தங்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தற்போது கூட கொற்கை அருகே கீரனூர் என்ற பெயருடன் ஊர் உள்ளது.
2500 வருடங்களுக்கு முன்பு கொற்கை துறைமுகம் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பல இடங்களில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்துள்ளது. கொற்கையில் எங்கு தோண்டினாலும் சங்கு கிடைக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஆங்காங்கே கிடைக்கும் சங்கை எடுத்து தங்களது சிறிய தோட்டத்தில் அழகு படுத்தி வைத்திருந்தார்கள். இப்போது இல்லை.
துறைமுகம் இருந்தது என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது. இங்கு பல நாணயங்கள் கொட்டிகிடக்கிறது. அனைத்தும் பழங்காலத்து நாணயங்கள். இந்த நாணயங்களை இந்த ஊரைச்சேர்ந்த நாரயணபிள்ளை என்பவர் சேர்த்து வைத்திருந்தார். தற்போது அவர் இல்லை. அவரை நான் 2000 ஆண்டில் சந்தித்த போது செய்திகளை சேகரித்தேன்.
இந்த நாணயங்கள் எல்லாம் இவ்வூரில் மழை பெய்யும் போதே பூமியை விட்டு வெளியே வந்தவை என்றார். அப்படியென்றால் பூமியை தோண்டி பார்த்தால் எவ்வளவு நாணயங்கள் கிடைக்கும்.
இந்த நாணயங்களை வைத்து பார்க்கும் போது இந்த இடம் மிகப்பெரிய தொழில் ஸ்தானமாகத்தான் இருந்து இருக்கவேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
பாண்டிய மன்னர்கள் நாணயம் அடிப்பதற்காக உருவாக்கிய அக்க சாலை என்னும் தெரு கொற்கையில் உள்ளது. தற்போது இதை அககா சாலை தெரு என பெயர் வைத்து அழைக்கிறார்கள்.
பொற்கொல் லர்கள் தான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு தப்பான தீர்ப்பு வழங்க காரண கர்த்தா வாகவும் இருந்து விட்டனர். ஆகவே இங்கு கண்ணகிக்கு என்று ஒரு கோயிலும் வந்துள்ளது.
பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையை ஆண்ட போது, அவனது தம்பி வெற்றிவேல்செழியன் கொற்கையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளான். கண்ணகி கால் சிலம்பில் உள்ள முத்து என்று தவறான தீர்ப்பு வழங்கிய காரணத்தினால் கோவலன் கொல்லப்பட்டான். உண்¬மை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கோப்பெருந்தேவியும் உயிர் விட, கண்ணகி மதுரையை எரித்தார். அந்த சமயத்தில் வெற்றிவேல்செழியன் மதுரை சென்று ஆட்சி நடத்துகிறான். அதோடு மட்டுமல்லாமல் கண்ணகியின் கோபத்தினை தணிக்க கொற்கையில் கண்ணகி கோயிலை கட்டுகிறான்.
அக்கோயில் முன்பு தினமும் ஒரு பொற்கொல்லரை பலியிடுகிறான். பொற்கொல்லர் கள் ஓடி ஒளிகின் றனர். “மன்னவா.. யாரோ செய்த தப்புக்கு நாங்கள் என்ன செய்யட்டும். எங்கள் உயிரே ஏன் பலிவாங்குகிறீர்கள்” என்று கேட்டனர். உண்மையை உணர்ந்த மன்னர் உடனே பொற் கொல்லருக்கு பதிலாக ஆயிரம் எருமைகளை பலியிடுகிறார்கள்.
பலியிட்ட எருமைகளின் ரத்தமே.. ஒரு மடையில் செல்லும் தண்ணீரை போல இருந்ததாம். இது பிடிக்காமல் கண்ணகி தனது முகத்தினை திருப்பி கொண்டாராம். தற்போது இந்த கோயிலுக்குள் சென்றால் கூட முகத்தனை திருப்பிய படியே கண்ணகி அம்மன் இருப்பதை காணலாம்.
இந்த அம்மனுக்கு “வெற்றிவேல்செழிய நங்கை” என்றொரு பெயரும் உண்டு.
பிற்காலத்தில் இந்த கொற்கை அகழாய்வுக்கும் எனக்கும் பல தொடர்பு ஏற்பட்டது. அது குறித்து இனி காணலாம்.
(பொருநை ரகசியத்தினை தேடி )


