நீலகண்ட பிரம்மச்சாரி என்ற இந்த நூலின் ஆசிரியர் கோமதி சங்கர் வாசிப்பை நேசிப்போம் குழுவின் மூலம் அறிமுகமானவர்… இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களைப் பற்றிய வரலாற்றை நாம் உரைநடை வடிவத்தில் படித்திருக்கிறோம்.. வரலாற்றின் பதிவுகளில் அதிக கவனம் பெறாத இந்திய விடுதலைப் போரில் தன்னுடைய புரட்சிகரமான செயல்களின் மூலம் ஈடுபட்டு தனது பங்கினை அளித்த நீலகண்ட பிரம்மச்சாரி என்பவரின் வரலாற்றை எல்லோராலும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் எழுதி இருப்பது நன்று.. இந்திய போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியை தெளிவாகவும் அதேசமயம் எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது.. சிறிதும் தொய்வில்லாமல், ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு வரலாற்றை சுவாரஸ்யமாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இயற்றியிருக்கும் கோமதி சங்கர் அவர்களுக்கு நன்றிகள்…
1907 ஆம் ஆண்டு பாரதியார் நடத்திக் கொண்டிருந்த “இந்தியா” பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி வ உ சிதம்பரம் பிள்ளையிடம் அறிமுகமாகிறார்.. தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் செல்வாக்குடன் விளங்கிய சிதம்பரம் பிள்ளை நடத்தும் சுதேசி கப்பல் இயக்கத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றுகிறார்…
நீலகண்டர் விபின் சந்திரபாலரின் பொழிப்புரைகளினால் தூண்டப்பட்டு முழுமையான விடுதலைப் போராட்ட வீரராக மாறிவிட சமயம் பார்த்து காத்திருக்கும் ஒரு இளைஞன்..
1907 இல் காங்கிரஸ் கட்சியின் பிளவு காரணமாக புதிய கட்சிக்கு ஆதரவாக புதிய பிரதிநிதிகளை சேர்க்கும் பணியில் வ உ சி யுடன் இணைந்து செயல்படுகிறார்.. இவர்கள் இருவர்களுக்கிடையே கொள்கையில் ஒருமித்த கருத்து இல்லாமல் இருக்கிறது… வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடும் போராட்டமே தீர்வை கொடுக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் வ உ சி.. நீலகண்டரோ வன்முறையினால் வெள்ளையர்களை வென்றுவிடலாம் என்று இயங்கக்கூடிய ரகசிய இயக்கங்களில் பங்கேற்கிறார்..
பாலரின் சந்திப்பிற்குப் பிறகு அவரின் செயலாளர் குஞ்சு பானர்ஜி மூலம் வடக்கில் ரகசியமாக இயங்கி வந்த தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்து கொண்டு அவைகளுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்… இந்த விஷயம் பாரதியாருக்கும் வ உ சி க்கும் தெரியாது..
விபின் சந்திர பாலரின் விடுதலையை கொண்டாட திட்டமிட்ட வ உ சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆங்கிலேய எதிர்ப்பையும் மீறி அதனை கொண்டாடுகிறார்கள்.. இதன் மூலமாக திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் பெரும் எழுச்சி நடக்கிறது… இவர்களுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் கலெக்டர் ஆஷி ன் தாக்குதலின் விளைவுகள் படுமோசமாகிறது…
“பாரத மாதா சங்கம்” என்ற இயக்கத்தில் நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் , ஒட்டப்பிடாரம் மாடசாமி, சங்கர கிருஷ்ண ஐயர் ஆகியோருடன் புதிதாக இணைகிறார் வாஞ்சிநாதன்… இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தான் நீலகண்டர் தன்னுடைய பெயரை பிரம்மச்சாரி என்ற புனைப் பெயரை மாற்றிக் கொண்டார்.. நீண்ட காலமாக நீலகண்டரை பற்றிய தகவல் இல்லாததால் வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி தர்ம ஆலயத்திற்கு செல்கிறார்.. அங்கே வ வே சு ஐயர் வாஞ்சிநாதனை திசைமாற்றி ஆஷ் துரையை கொலை செய்ய துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கிறார்..
????திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற இளைஞன் வாஞ்சிநாதன்.. இந்த நிகழ்விற்கு பிறகு தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிடுகிறார்… அப்போது அவர் தன்னுடைய சட்டை பையில் வைத்திருந்த கடிதத்தில் தன்னுடைய பெயரையும் ஊரையும் எழுதி வைத்திருந்திருக்கிறார்.. இதையே நூல் பிடித்துக்கொண்டு அவருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தவர்களையெல்லாம் இந்த கொலை குற்றத்தில் குற்றவாளியாக இணைக்கிறது பிரிட்டிஷ் அரசு…
????நீலகண்ட பிரம்மச்சாரி கலெக்டர் ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்தவர்… ஆஸ் துரை கொலையின் சூத்திரதாரியான வ.வே.சு ஐயர் இந்த தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்..
????இந்த கொலை நடந்த சம்பவத்தின் போது நீலகண்ட பிரம்மச்சாரி காசியில் இருக்கிறார்… அவரை முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போது கல்கத்தாவில் இருந்து அவர் ஆங்கிலேய அரசிடம் சரணடைகிறார்… கொலையில் தனக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதால் சரணடைந்து விளக்குவதன் மூலம் விடுதலை கிடைக்கும் என்று சரணடைந்ததாக ஓம்கார் தெரிவிக்கிறார்… எட்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்கிறார்… அதன் பின்னர் சிங்காரவேலரின் தொடர்பினால் கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளுக்குள் நுழைகிறார்.. பொதுவுடமை இயக்க செயல்பாட்டிற்காக துண்டு பிரசுரம் விநியோகித்த காரணத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்…
????இந்த நீண்ட தனிமை சிறை நீலகண்டரிடமிருந்த அரசியல் தீவிரத்தை குறைத்துவிடுகிறது.. புரட்சிகர இயக்கத்தில் செயல்பட்டவர்களில் சிறையில் நெடுங்காலம் 16 ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி… கடைசியாக ஓம்கார் சாமிகளாக தனது இறுதி 40 வருடங்கள் மக்கள் சேவையை தொடர்கிறார்… இந்த காலகட்டங்களில் சிறந்த பொருளாதார மேதையாக திகழ்ந்த ஜே சி குமரப்பா மற்றும் காந்தியடிகளை சந்தித்துள்ளார்…
????பத்திரிக்கை நிருபர் சங்கர கிருஷ்ணனின் ஒரு கேள்விக்கு “தனிநபர் கொலையில் எனக்கு விருப்பமும் இல்லை சம்பந்தமும் இல்லை” … ஆஷ் படுகொலைக்கு வாஞ்சிநாதனை உயிர் தியாகம் செய்ய தயார்படுத்தியது தர்ம ஆலயம் தான் என்றும் நீலகண்டர்
( ஓம்காரராக) தெரிவிக்கிறார்…
????தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டதற்கு எதிராக தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியவர் வ உ சிதம்பரம் பிள்ளை.. கிட்டத்தட்ட 66 வருடங்களுக்கு முன்பு நடத்திய போராட்டத்தின் விளைவாக தொழிலாளர்களின் சம்பள உயர்வும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறையும் கிடைத்துள்ளது.. மக்கள் சக்தியை ஒன்று திரட்டி ஏகாதிபத்தியதற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விழுந்த முதல் அடி இது என்று நீலகண்ட(ஓம்கார்)குறிப்பிடுகிறார்.. இந்த சலுகைகளை எல்லாம் மீண்டும் அந்த தொழிலாளர்கள் இழந்தது குறித்த வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்..
????சியாம் ஜி கிருஷ்ண வர்மா என்ற ஒரு பணக்கார இளைஞர் இங்கிலாந்தில் “அபிநவ் பாரத் சமிதி” என்ற இயக்கத்தை தொடங்கி இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு படிக்கப் போனவர்களுக்கு நிதி உதவி செய்வதற்கான ஏற்பாட்டை செய்கிறார்..இந்த அமைப்பின் மூலம் படித்தவர்கள் ஆங்கிலேய அரசாங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கிறார்… திலகர், சாவர்க்கர்,
வ வே சு ஐயர், லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர் போன்றோர்களின் செல்வாக்கினால் ஆங்கிலேய அரசுக்கு எதிராக வன்முறை புரட்சிக்கு திட்டமிடுவது போன்ற செயல்கள் இந்த இயக்கத்தின் மூலமாக நடந்திருக்கிறது…
தொடக்கத்தில் ஒரு தீவிர வன்முறை புரட்சி இயக்கங்களோடு செயல்படத் தொடங்கியவர் இறுதியில் ஒரு மகானாக அமைதியான மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு விடுதலைப் போராட்ட வீரரின் முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது… ஆசிரியரின் கடின உழைப்பிற்கும் இந்த அருமையான படைப்பிற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் ஆசிரியருக்கு…


