முன்கதை சுருக்கம்
முத்துக்கிளியை காதலிக்கிறான் சந்திரன். சந்திரன் மும்பையில் வசித்து வருபவன். இவனது பூர்விகம் திருநெல்வேலி பக்கம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த முத்துக்கிளியும் இவனும் உறவினர்கள் ஆகிறார்கள். முத்துக்கிளியை மணம் முடித்து கொடுக்க அவளது தந்தை மறுகிறார். காரணம் சந்திரனின் தாத்தா வேறு சாதியில் மணம் முடித்து விட்டார். தந்தையும் மற்றொரு சாதியில் மணம் முடித்து விட்டார். இப்போது சந்திரனின் குடும்பம் சாதி கெட்டு போய் விட்டது. இதற்கிடையில் சந்திரன் தைரியமாக முத்துக்கிளியை பெண் கேட்கிறான்.
இனி.
70. யாருக்கு ஜோடி யாரோ?
மீண்டும் ஊருக்குள் நுழைந்தான் சந்திரன் .
வாசு தாத்தா அவன் காரை மறைத்தார்.
வேண்டா வெறுப்பாக காரை நிறுத்தினான்.
அவர், “டேய் என் கூட நீ பேசனுமுன்னு நினைக்க மாட்டே எனக்கு தெரியுமுடே. ஆனாலும் என்னால உங் கிட்ட பேசனுமுன்னு ஆசை. அதனாலத்தான் நிறுத்தினேன்”.
அமைதியாக நின்றான்.
“முதல் முதலுல உன்னை மும்பையில் பார்க்கும் போதே உன்னை ஹீரோவாத்தான் பார்த்தேன். இன்னைக்கு வரைக்கும் நான் உன்னை ஹீரோவாத்தான் நினைக்கேன்”. எப்படின்னு கேட்க்கீறீயா. எந்த இடத்திலும் எல்லோருக்கும் உதவுற நீ யாருக்கிட்டேயும் தலை குனிஞ்சி நிக்க கூடாதுன்னு நினைச்சேன்”.
நிமிர்ந்து பார்த்தான். வாசு தொடர்ந்தார்.
“இங்க பாருடே. என் மனசுல எப்போதும் நீ ஹீரோத்தான். ஆனா நீ முத்துக்கிளியை விரும்புறன்னு தெரிஞ்ச வுடனே நான் சந்தோசப்பட்டேன். ஆனா பாழாய் போன இந்த கிராமம் சாதியில ஊறிப்போய் உனது காதலுக்கு சங்கு ஊதிரும் நினைச்சேன். அந்த வேளையில நீ ஆசையை வளர்த்துக் கிட்டு கடைசியில ஏமாந்து போய் நிற்கக்கூடாது”.
சந்திரன் யோசித்தான். வாசு தாத்தா ஏதோ நல்லது சொல்லப்போகிறார்.
“அதாவது என் மனசுல ஹீரோவா இருக்கிற நீ எங்கேயும் யார் கிட்டேயும் தலை குனிய கூடாதுன்னு நினைச் சேன். அதான் அடிக்கடி உன் காதலுக்கு தடைப்போட்டேன். நீ கூட தப்பா நினைச்சி இருக்கலாம்”.
இப்போது சந்திரன் கண்களில் இருந்து இலேசாக கண்ணீர் வடிந்தது. துடைத்துக்கொண்டான். வாசு கண்களும் கலங்கியது.
“காதலோட வலி எனக்கு தெரியும். அது ஒவ்வொரு நாளும் மனதுக்குள்ள படுத்துற வேதனை எனக்கு நல்லா புரியும். சொந்தத்துக்குள்ளே ஏற்ற தாழ்வு பார்க்கிற இந்த உலகம் சாதியில ஏற்றத்தாழ்வு பார்க்காமலேயே விடுமா? அதுவும் கிராமத்தில சாதி பேய் தலை விரித்து ஆடுது. முதல் முதலுல நீ உன்னை பத்தி சொல்லும்போதே உன் பூர்வீகம் எனக்கு தெரிஞ்சு போச்சு. அதுவும் நீ முத்துக்கிளியை காதலிக்கிறேன்னு தெரிஞ்சு போன உடனே நான் அதிர்ந்து போயிட்டேன்”.
சந்திரன் கார் கதவை திறந்து கீழே இறங்கினான்.
“நீ அவ மேலே நிறைய ஆசை வச்சிருக்கே. ஆனா அவிய உனக்கு பெண் கட்டி தர மாட்டாவன்னு தெரியும். முத்துக்கிளி உன் மேலே பாசம் காட்டினாலும் அப்பாவை மீறி கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு எனக்கு தெரியும். பாவம் தாய் தகப்பன் இல்லாம சொந்தத்தை தேடி பாசமா அலையிற நீ ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் உன்னை பல முறை எச்சரித்து அனுப்ப பார்த்தேன். மத்தப்படி உன் மேலே கோபம் ஒண்ணுமில்லைடே. என்னை தப்பா நினைக்காத”.
சந்திரன் கையை வாசு பிடித்தார். முதலில் கமடியானாக அறிமுகம் ஆகி இடையிலே வில்லத்தனம் செய்து தற்போது குணசித்திர வேடத்தில் வாசு தாத்தா நின்றார்.
“காதலோட வலி எனக்கு தெரியுமுடே. ஆனால் காதல் எல்லாமே நிறைவேறுமுன்னு நினைக்க முடியாது. ஒரு வேளை காதல் நிறைவேறுதது 1000த்தில ஒருத்தருக்குத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காதல் மனசுல பசுமரத்து ஆணிபோல இருக்கும். அந்த காதல் அவுக கட்டையில போகிற வரைக்கும் மனதுக்குள்ள இருக்கும். ஆனா அந்த காதல் எல்லாம் நிறைவேறணுமுன்னு அவசியம் இல்லை”.
என்ன சொல்ல வாறாரு தாத்தா. சந்திரனுக்கு குழப்பமாக இருந்தது.
“நிச்சயம் உன் காதலை நீ சொல்லியிருப்ப. முத்துக்கிளி என் அப்பா கிட்ட சொல்லுங்கன்னு சொல்லியிருப்பா. அப்பா இல்லைய்யா. நாங்க சாதி மாறி கட்டிக்கொடுக்க மாட்டோமுன்னு ஒரே அடியா அடிச்சு உங்கள் காதலை சோலி முடிச்சிருப்பான். இது எல்லாம் எனக்கு தெரியும். ஆனா அதுக்கா மனசு ஓடிஞ்சி போயிடாதய்யா”.
புண் பட்ட மனதுக்கு களிம்பு தடவுகிறார் தாத்தா.
“இங்க பாருய்யா. ஒருத்தன் பிறக்கும்போதே அவனுக்கு இவள்தானுன்னு எழுதி வச்சிருப்பாங்க. உங்க தாத்தா ரங்கூன் ராஜத்துரை உங்க பாட்டியை கட்டனுமுன்னு நிச்சயம் நினைச்சு இருக்க மாட்டாரு. ஆனா கட்டிட்டாரு. உங்க அப்பா நிச்சயம் சாதி மாறி உங்கம்மாவை கட்டணுமுன்னு நினைச்சே இருக்க மாட்டாரு. ஆனா அதுவும் நடந்துட்டு. உனக்கு முத்துக்கிளித்தான் மனைவின்னா நிச்சயம் நடக்கும். அதுக்காக பல அற்புதங்கள் இந்த உலகத்தில நடக்கலாம். ஆனா நடக்கலைன்னு மனவருத்தம் பட்டுறாதே. கவனமாக இருக்கணும். இந்த மாதிரி நேரத்தில மனதை தளர விடக்கூடாது”.
சந்திரன் சிரித்தான்.
“பராவாயில்லை தாத்தா. நான் மனசை தேத்திக்கிட்டேன்”.
“ஆமா. கிளம்பி ஊரைப்பாத்து போன. பொறவு ஏன் திரும்பி வார”.
“ரத்னம் அய்யா கூப்பிட்டு இருக்காவ”.
“எதுக்காம்”.
“தெரியலை போனாத்தான் தெரியும்”.
“சரி பத்திரமா போ. நானும் உன் கூட வரட்டுமா?”
“வேண்டாம். எல்லோரும் எல்லோர் கூடவும் எப்போதுமே இருக்க முடியாது தாத்தா”.
அமைதியாக இருந்தார் வாசு.
“நானே போய் கேட்டு பாக்கிறேன்”.
கிளம்பினான் சந்திரன்.
பல நினைவுகளோடு, ரத்தினம் அய்யா வீட்டை அடைந்தான்.
காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
இவனை எதிர்பார்த்து ரத்னம் காத்திருந்தார்.
“யய்யா செத்த இந்த நற்காலியில இரு”
அமைதியாக உட்காந்தான்.
“சொல்லுங்கய்யா”.
இந்த வேளையில் முத்துக்கிளி வாசல் கதவு அருகில் வந்து நின்றாள்.
“இன்னைக்கு என் கூட சாப்பிடணும்”.
“இல்லைய்யா. நான் நிரந்தரம் எது வென தெரியாமல் நிறைய ஆசையை வளர்த்துக்கிட்டேன். அது என் தப்பு. இப்போ எல்லாமே புரிஞ்சு போச்சி. இப்போ என்னை நீங்க சாப்பிட கூப்பிடுறீங்க. என்னை நீங்க சாப்பாட்டு ராமன்னு நினைச்சிட்டீங்க போல”.
சிரித்தார் ரத்னம். “தம்பி. உறவுங்கறது நீ நினைக்கிற மாதிரி இல்லை. மாமன் மருமகன் மட்டும் உறவு இல்லை. அப்பா பிள்ளை கூட உறவு தான்”.
சிரித்தான்.
வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறுது. அப்படின்னா திரும்பவும் நம்ம மனதை சீர் செய்யப்பாக்கிறாங்க.
“தம்பி. உன்னை என் வாரிசா நினைக்கிறேன். உனக்கு என் ஐந்து பெட்டை பிள்ளைகளுக்கு எவ்வளவு சொத்து கொடுக்கப்போகிறோனா. அந்த அளவுக்கு சொத்து கொடுக்கப்போகிறேன். உனக்கு, எனக்கு தெரிஞ்ச இடத்தில பெண் கேட்டு கட்டி வைக்கப்போகிறேன்”.
“இந்த மனம் முத்துக்கிளி இடம் இருக்கிறது. அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பணத்துக்காகவும் இவர் தரும் சொத்துக்காகவும், யாரையோ கட்டிக்கொண்டு இங்கே வாழச்சொல்லுகிறார். அப்போது எல்லாம் இவர் சாதி பெரிதாக இருக்காது”. மனது துடித்தது.
“உன் மனசு என்ன சொல்லுதுன்னு தெரியுது தம்பி. என் மகன் வேறு சாதி பெண்ணை கட்டிட்டு வந்தா கூட பராவாயில்லைன்னு நினைப்பேன். ஆனால் பெண் என் வீட்டு குத்துவிளக்கு. அவள் வேறு சாதியில் திருமணம் முடித்தாள். அவளையே என் வீட்டைவிட்டு ஒதுக்கி விடுவேனே தவிர. என் குடும்பத்தோடு சேர்க்க மாட்டேன்”.
“பெண் பெண் என அலைந்த மனுசனா இவர். எவ்வளவு வெள்ளேந்தியாக இருந்தார். இந்த மனுசன் மனசுல சாதி இப்படி ஏறி நிற்கிறதே. இவர் மட்டுமா? கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் சாதி வெறிக் கொண்டுத்தான் இருக்கிறது.
இதனால் தான் சாதி என்னும் வெடிகுண்டை அரசியல் வாதிகள் கிராமங்களில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களும் அந்த சாதி எனும் தீயில் சிக்குண்டு வெளியே முடியாத நிலையில் உள்ளார்கள்.
நமக்கு இவர் உறவு வேண்டுமா? வேண்டவே வேண்டாம்.
எழுந்தான்.
“என்ன தம்பி எழுந்துட்டே. நீ என் ஆண் வாரிசு”.
சிரித்தான்.
“அப்படியென்றால் உங்கள் சொத்தில் ஐந்தில் ஒரு பங்கு எனக்கு உண்டு. உங்களுக்கு கொள்ளி வைக்கிற உரிமை உண்டு. உங்களுக்கு பிறகு இந்த ஊரில் நான் உங்கள் வாரிசாக நாட்டாமை செய்யலாம். ஆனால் எனக்கு உங்க சாதிகாரங்க யாரும் பெண் தரமாட்டீர்கள். அப்படியே வேறுசாதியில் பெண்ணை பார்த்து கட்டினாலும். நான் ஆண் என்பதால் அதை பெரிதாக நினைக்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் மட்டும் பெண்ணை கட்டித்தர மாட்டீர்கள்”.
அமைதியா இருந்தார் ரத்னம்.
“அய்யா. தப்பா நினைக்காதீங்க. நான் மும்பையில முத்துக்கிளிக்கு சப்போர்ட் பண்ணி காப்பாத்தும் போது நான் அவளை காதலிக்க வில்லை. அவள் என்ன சாதி என்றே தெரியாது. கொராணா காலத்தில் தனியாக மூன்று பேரும் ஒரே காரில் வந்த போது கூட காதலிக்கவில்லை. அவள் ஒரு பெண் நான் ஒரு ஆண் என்ற ஈர்ப்பு இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. வாசு தாத்தா அடிக்கடி சொல்லுவார். உனக்கு இந்த குடும்பம் செட் ஆகாதுடே. ரத்னம் உனக்கு பெண் கட்டித்தர மாட்டார் என்று சொல்லும் போது கூட நான் பெரிதாக நினைக்கவில்லை”.
இப்போது முத்துக்கிளி முகத்தினை பார்த்தான். அவள் சலனமற்று நின்று கொண்டிருந்தாள்.
“ஆனால் முத்துக்கிளி நன்றாக இருக்கட்டும் என அவளை விட்டு மும்பையை பார்த்து கிளம்பி விட்டேன். ஆனால் லிங்க நாடார் பனையில இருந்து விழுந்தார். அவருக்கு உதவ வேண்டும் என அழைத்தீர்கள். ஊருக்கு வந்தேன். இங்க ஒவ்வொருவர் படுத பாடை நினைத்து பார்த்தேன். எனக்கு உங்களது பொறுமையும், ஆளுமை தன்மையும் ரொம்ப பிடித்துவிட்டது. இந்த குடும்பத்தை பிடித்துவிட்டது. அப்போது கூட முததுக்கிளியை காதலிக்க வில்லை. ஆனால் இந்த பாசமான இடத்தில் இருந்து நாம் தப்பித்து போனால் என்ன என நினைக்கும் போது வாசு தாத்தா சொன்னார். நீ சாதி கெட்டவன் என்றார். நான் எப்படி சாதிக்கெட்டு போய்விட்டேன் என எனது பூர்விகத்தினை தேடினேன்”.
ரத்தினம் முகத்தினை பார்த்தான். அவர் இவன் சொல்லை மதிக்கிறாரா? இல்லையா என்று கூட தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தான்.
“எனக்குதெரியாத என் தாத்தா ரங்கூன் ராஜத்துரை. இந்த ஊருக்காக உழைத்து, அத்தனைபேரும் காரை வீடு கட்ட வைத்து விட்டு, அதனால் வீண்பழியாக கொலைபழியை ஏற்றுக்கொண்டு போலிசுக்கு பயந்து ஓடினார். அவர் தப்பி சென்ற இடத்தில் பனையேறிக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அங்கு நடந்த கொலையில் மீண்டும் வீணாக பழி சுமந்தப்பட்டு ஓடுகிறார். அவருக்கு சாதி கை கொடுக்கவில்லை. ஆனால் எங்கோ இருந்து வந்த நாயுடு அவருக்கு வாழ்க்கை கொடுத்தார். ஒரு ஆங்கில கலப்பு பெண்ணை இவர் காதலிக்க வில்லை. மாறாக அவளுக்கு வாழ்க்கை கொடுத்தார். பாவம் அந்த மனிதன் ரங்கூனில் ராஜாவாகத்தான் வாழ்ந்தார். இரண்டாம் உலகப்போர். அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது. சம்பாதித்த பொன் பொருள் எல்லாம் போய்விட்டது. சொந்த ஊரில் சொந்த மண்ணில் நாம் எப்படியும் வாழ்ந்து கொள்ளலாம் என நம்பி வந்தார். ஆனால் இருக்க கூட இடம் தரவில்லை இந்த இனம். சாதி மாறிவிட்டராம். எனவே இடமே இல்லை. இறுதியில் வந்த மறுநாளே செத்தே போய் விட்டார். நல்லவேளை புதைக்க இடம் கொடுத்தார்கள். அதில் கல்வெட்டும் வைத்து விட்டார்கள். நல்ல நன்றி கடன்”.
பெரும் மூச்சு விட்டான்.
“என் அப்பா வெள்ளத்துரை, தனது சொந்தத்தில் ஒரு பெண்ணை எடுத்து சந்தோசமாக வாழவேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். யார் பெண் கொடுத்தார்?. யாருமே கொடுக்கவில்லை. எனது தாத்தாவை இந்த நிலமைக்கு ஆளாக்கிய சிவராமன் அய்யரை பழி வாங்க வேண்டும் என்று சென்ற இடத்தில் அங்கே அனாதையான அவருடைய பெண்ணை ஊருக்குள் கூட்டி வந்தார். அந்த பெண்ணை காதலிக்கவும் இல்லை. கல்யாணம் முடிக்கவும் நினைக்க வில்லை. ஊருக்குள் கூட்டி வந்த காரணத்தினால் பெரிய குற்றம் செய்து விட்டார் என ஊரை விட்டே விரட்டி விட்டார்கள். இரண்டு தலை முறை சொந்தம் எல்லாவற்றையும் விட்டு விலகி விட்டோம். இறுதியில் எனது தாயாருக்கு ஆதரவு இல்லையென என் தந்தை திருமணம் முடித்தார். ஆனால் இவர்களோட வாழ்க்கையே எனக்கு தெரியாமல் என்னை வளர்த்து ஆளாக்கி விட்டு அவர்களும் போய் சேர்ந்தே விட்டார்கள்”
இப்போது சந்திரன் கண்களில் கண்ணீர் வடிந்து விட்டது.
“ நான் உங்கள் பெண்ணை காப்பாற்ற வாராமல் இருந்து இருந்தால் எனக்கு இப்படி ஒரு குடும்பம் இருப்பதே தெரிந்து இருக்காது. என் பூர்வீகம் புரிந்து இருக்காது. ஆனாலும் வந்தேன். என் பூர்வீக இனம் எனக்கு பிடித்து விட்டது. தெரிந்தோ தெரியாமலேயோ முத்துக்கிளி கிடைப்பாள் என்ற நம்பாசையில் இருந்துவிட்டேன். தவறுதான் அய்யா”.
கண்ணை தொடைத்து விட்டு மீண்டும் பேசினான்.
“ என் தாத்தாவையும் அப்பாவையும் ஏற்காத இந்த இனம் எப்படி என்னை ஏற்கும் நான் புரிந்திருக்க வேண்டும். நான் தான் தப்பு பண்ணி விட்டேன். முத்துக்கிளியை பெண் கேட்டு இருக்கவே கூடாது”.
இதற்குள் வாசுவும் வீட்டுக்குள் வந்து விட்டான்.
அங்கு இருவரும் வாயடைத்து நிற்க சந்திரன் பேசும் பேச்சு இப்போது அவருக்கு நியாயமாக பட்டது.
“எனக்கு ஒரு நப்பாசையா. என் குடும்பம் விவரம் எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு என்னை நன்றாக பயன்படுத்திய நீங்கள். ஒரு இடத்தில் கூட நீ என் இனம் இல்லைய்யா. நீ போக வேண்டிய இடத்துக்கு போ. என என்னை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாத காரணத்தினால் உங்களை நான் மலை போல நம்பினேன். நீங்கள் எப்படியும் உங்கள் மருமகனாய் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைத்தேன். அதில்தான் நான் ஏமாந்து விட்டேன்”.
ரத்னம். “சந்திரா நான் தான் என் மகனாக உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”.
“ம்”. சிரித்தான். “அய்யா உங்களை முதல் முதலில் சந்திக்கும் போது நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. இனிமேலும் எதிர்பார்க்க போவதில்லை. என்னை விட்டு விடுங்கள் அய்யா. நீங்க நீங்களா இருங்க. நான் நானா இருக்கேன். தயவு செய்து இனிமேல் இதைப்பற்றி பேச வேண்டாம். நான் செல்கிறேன்”.
அங்கிருந்து கிளம்ப எழுந்தான்.
“எங்கே போகப்போகிறாய்”. ரத்னம் அதட்டியப்படி கேட்டார்.
“எங்கேயோ செல்கிறேன். உங்களுக்கு எதற்கு அது பற்றிய கவலை. என்னை விட்டு விடுங்கள்”.
வாசலை நோக்கி நடந்தான்.
“கொஞ்சம் நில் சந்திரா”
என்ன சொல்லப்போகிறார். மீண்டும் நிற்கசொல்கிறார். சந்திரன் மட்டுமல்ல வாசு தாத்தாவும் யோசித்தார்.
வீட்டுக்குள் சென்றார். ஒரு பெட்டியை எடுத்து வந்தார். “இதில் லட்ச ரூபாய் இருக்கிறது. அதை எடுத்துக்கொள்”.
“ம். பணம்”. சிரித்தான். கைகொட்டி சிரித்தான். சிரிக்கும்போதே அவன் கண்களில் இருந்து நீர் சிந்தியது. ஆனாலும் மறைத்துக்கொண்டே சிரித்தான்.
“போதுமய்யா. மேலும் மேலும் எனக்கு சவுக்கடி கொடுக்க வேண்டாம். என்னை மருமகன் இல்லைன்னு சொன்னீங்க. சந்தோசம். நீ மகன் தான். உனக்கு சொத்தில் பங்கு தாரேன்னு சொன்னீங்க மிக்க சந்தோசம். அதுவும் வேண்டாமுன்னு நான் சொல்லிட்டேன். கடைசியில பணம் கொடுத்து என்னை நீ என் வேலைக்காரன்னு நிருபிச்சிட்டுங்களே அய்யா. ரொம்ப சந்தோசம். நான் வேலைக்காரன் என்னும் கார் டிரைவராத்தான் வந்தேன். நான் அப்படியே வேலைக்காரனாகவே வெளியே போறேன்”.
அனைவரும் வாயடைத்து நின்றார்கள்.
வாசு சந்திரன் கையை வந்து பிடித்தார்.
இப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
“சந்திரா எங்க உறவை கூட வேண்டாமுன்னு சொல்லு. பாராவாயில்லை. அதுக்கு தகுதி இல்லாதவங்க நாங்க. ஏன்னா எங்களுக்கு மனித நேயம், உண்மையான மனிதநேயம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு சாதித்தான் முக்கியம். ஆனாலும் உன் உழைப்பு இதில் இருக்கிறது. உன் உழைப்பை எங்களுக்கு நீ தர வேண்டிய அவசியமே இல்லை. அதுக்கு நிச்சயம் கூலி வேண்டும். நீ இலவசமாக செய்து கொடுக்க ரத்னம் ஒண்ணும் பணம் இல்லாதவன் இல்லை. அவன் கிட்டே நிறைய இருக்கு. நீ நஷ்டப்பட வேண்டாம். இதுவரை இந்த குடும்பத்துக்கு செஞ்ச வேலைக்கு கூலியா எடுத்துக்க”.
வாசு கூறிவிட்டு, ரத்னத்தினை பார்த்தார். ரத்னமும். “வாங்கிக்க அய்யா” என்றார்
“உண்மை தான் அய்யா. நான் கூலியாத்தான் இந்த ஊருக்கு வந்தேன். என்னை கூலியாகவே வழி அனுப்பி வைக்க ரெடியாக உள்ளீர்கள். ஆனால் உங்க கூட பழகிய நான், கூலி என்கிறதை மறந்து விட்டேன். இனிமே இந்த கூலியை நான் வாங்கினா. கடைசியில இங்க நான் இருந்து உங்க சாப்பாடை சாப்பிடதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். எனக்கு நீங்க போட்ட சாப்பாடுக்கு எனக்கு கொடுக்கும் கூலியை நீங்களே வைச்சிக்கோங்க”.
வேகமாக வெளியே வந்தான். காரில் ஏறினான்.
வாசு பின்னாலே ஓடி வந்தார்.
“ஏய் என்னடே. பைசாவை வாங்கிக்க”
“ தாத்தா நான் முத்துக்கிளியை மறக்க முயற்சி செய்கிறேன். ஆனால் உங்களை நான் ரத்னம் அய்யாவை மாமனராக நினைத்து விட்டு, அவர்சொன்ன மாதிரி பணத்துக்காக மகனாக நடித்தாலும் இந்த பணத்தை எடுத்தாலும் இரண்டும் ஒன்றுதான்”.
“சந்திரா”
“என் மனம் தெளிவாகி விட்டது. இனி எனக்கும் முத்துக்கிளிக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வருகிறேன்”.
தெளிவான மனதுடன் வெளியே கிளம்பினான்.
இப்போது தந்தையும் மகளும் வெளியே வந்து வழி யனுப்பி வைக்க நின்றார்கள். அவர்கள் சந்தோசமாக டாட்டா காட்டவும் இல்லை. இவனும் அவர்களை நோக்கி கை அசைக்க விரும்பவும் இல்லை.
அவர்கள் யாரோ. தான் யாரோ. ஒவ்வொரு முறை தான் வெளியே கிளம்பும் போதெல்லாம் முத்துக்கிளி வந்து கை அசைக்க மாட்டாளா என நினைத்த காலம் போய் விட்டது.
இதோ இப்போது கை அசைக்க நிற்கிறாள். ஆனால் இவனுக்கு அவர்களை பார்க்க மனமே வரவில்லை.
வண்டி சிட்டாய் பறந்தது. முற்றிலுமாக முத்துக்கிளி காதலை துடைத்துப்போட்டு விட்டான்.
சுலபமாக துடைக்க முடியுமா?
ஒவ்வொரு நேரத்திலும் முத்துக்கிளி வந்து நிற்கிறாள்.
சாப்பாடு சாப்பிடும் போது பையன் சொன்ன வார்த்தைகள் வந்துசெல்கிறது. ஆஸ்பத்திரியில் ரத்னம் அய்யாவை பார்த்தபோது அவள் தன்னோடு வந்துசென்றது மனதில் வந்து செல்கிறது.
அப்பாவுக்காக தன்னை ஏற்றுக்கொண்டாள் என நினைத்த போது அவள் ஓதுங்கிச் செல்கிறாள்.
கஷ்டம் என்ற போது ஒட்டிக்கொண்டிருக்கிறாள். மறுநிமிடம் தள்ளிச்சென்று இருக்கிறாள். இதையா நாம் காதல் என நினைத்தோம். அவள் சரியாகத்தான் இருந்து இருக்கிறாள். நாம் தான் சருக்கி இருக்கிறோம். அதுவும் நான் அவளை காதலிக்கிறேன் என தெரிந்தும் என்னை பயன்படுத்தி இந்த குடும்பத்தில் ஒரு வேலைக்காரனாக வைத்து இருக்கிறார்கள். அது கூட நான் தெரியாமல் இருந்து இருக்கிறேன்.
இவன் மனது இப்போது வேறு மாதிரி சொன்னது. போடா. போ. உன்னை போல நல்ல பையன் அவர்களுக்கு கிடைக்க மாட்டான். அவன் எங்கோ ஒரு குடிகாரனை கட்டிக்கு கொண்டு மனதில் உன்னை மறக்க முடியாமல் வாழ்நாள் புறாவும் வாழப்போகிறாள்.
ஆனால் எளிதில் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “மூலத்தில் சமைந்தவள். தாய் தந்தை இல்லாத இடத்தில் மணம் முடித்து சென்றால் நல்லது என அவர் உன்னை ஏற்று இருப்பார். குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை. தனது மகளை கட்டுபவன் தனது வீட்டோடு மாப்பிள்ளையா இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். அதில் உன்னை விட நல்ல மாப்பிள்ளை நிச்சயம் கிடைக்க மாட்டான். ஆகவே உன்னை அவர் வெறுக்கவில்லையடா. ஆனால் உன்னோட பூர்வீகம் மட்டும் இந்த ஊருக்குதெரியவில்லையென்றால் கண்டிப்பாக உன்னை மருமகனாக ஏற்று இருப்பார்”.
சே. என்ன மனச்சாட்சி என்னை போட்டு குழப்புகிறாய்.
“முத்துக்கிளியும் கடைசி வரை உன்னை வெறுக்கவில்லை. ஆகவே தான் நீ நெருங்கி நெருங்கி சென்ற போது உன்னை தவிர்த்தாளே தவிர முற்றிலும் உன்னை வெறுத்து ஒதுக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே பிரச்சனை சாதி பிரச்சனைத்தான்”.
மீண்டும் மனசாட்சி பேசியது.
“இந்த கிராமத்தில் வாழ்வு முறை அப்படி அமைந்து விட்டது. சாதி எனும் கோட்டை தாண்டி விட்டால் அவ்வளவுதான். அவன் வாழ்க்கை விளையாட்டில் தோற்று விட்டான் என்றுதான் அர்த்தம்”.
ஒரு மறை சாதியை விட்டு விலகினால் கூட அதன் பெண் உன் உறவோடு நீ சேர முடியாது. அப்படியிருக்கும் தாத்தா காலத்தில் இருந்தே உன் குடும்பம் உன்பூர்வீகத்தினை விட்டு எங்கோ போய் விட்டது. இனி இந்த சாதிக்குள் உன்னால் சேரவே முடியாது.
நீ மனிதன் எனலாம். பகுத்தறிவு பேசலாம். அதெல்லாம் தெருவுக்கு மேடை போட்டு பேச மட்டும்தான் இந்த கிராமத்தில் அது எடு படாது.
காதல் என்பது பற்றிக்கொண்டால், எத்தனை தடைகளை தாண்டியும், சாதி மதங்களை தாண்டியும் ஜெயிக்கும் என்கிறார்களே. அப்படியென்றால் அந்த கூற்று தவறா?
பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அந்த மலரை அரும்பாக எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும். முத்துக்கிளிக்கும் சந்திரனுக்கும் இடையே நிகழ்ந்த காதல் கடைசி வரை அரும்பாகவே இருந்து விட்டது. அது பூக்காமலேயே போய் விட்டது. பூத்திருந்தால் அந்த காதல் மலர்ந்து விட்டது என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கே தான் அரும்பு பருவத்தினையே தாண்ட வில்லையே.
ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம்பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும் வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது.
பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. கண்களுக்கு விருந்து படைக்கும் மலருக்கு இத்தனை பெயர்களா?. வியக்க வைக்கிறது அல்லவா? எந்த மொழியிலும் இல்லாத சொல்லாளுமை தமிழுக்கு உண்டு. அதில் இந்த மலர் ஒரு எடுத்துக்காட்டுத்தான்.
அரும்புக்கு துளிர்த்தல், முளைத்தல், தோன்றுதல் என்ற மூன்று பொருள் உண்டு. உண்மைத்தான் முத்துக்கிளி மீது சந்திரன் வைத்த காதல் துளிர் விட்டது ஆனால் பூக்கவில்லை. முளைத்தது ஆனால் மரமாகவோ செடியாகவோ முளைக்கவில்லை. தோன்றியது ஆனால் தோன்றிய அந்த காதல் உறுதியாக வில்லை. பூவின் ஏழு நிலைகள் சொல்வார்கள். அதில் முதல் நிலைதானே அரும்பு. மொக்கு விடும் நிலை மொட்டு, முகிழ்க்கும் நிலை முகை, பூவாகும் நிலை மலர், இதழ் விரிந்த நிலை அலர், வாடும் நிலை வீ, வதங்கி கிடக்கும் நிலையை செம்மல் என்பார்கள். அரும்பை தாண்டி இவர்கள் காதல் அடுத்த இடத்துக்கு செல்வே இல்லை. பிறகு எப்படி அது மொட்டாகி, மலராகும்.
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய் “
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் கூறியிருப்பார். காதல் காலையில் அரும்பும். பகல் ஆக ஆக அரும்பு மலர்ந்து போது என்ற நிலையில் ஏற்படும் புடைப்பு நிலையைப் போல சற்று அதிகரிக்கும். மாலை ஆகியதும் முழு மலராக மலர்ந்து மகிழ்ச்சி தருவதுபோல இன்பம் தரும் என்கிறார் வள்ளுவர்.
இங்கே இன்பத்துக்கு வழியே இல்லை. காலையிலேயே அரும்போடு இவன் காதல் முடிந்து விட்டது. இனி உதிர்ந்து அரும்பு மலராகும் என்று நினைப்பதில் அர்த்தமே இல்லை.
போன் வந்தது. சொர்ணக்கிளி சித்தி பேசினாள்.
“யய்யா சந்திரா எங்க இருக்க”
“சித்தி. அவசரமா ஒரு சவாரி மும்பை வரைக்கு போயிட்டு இருக்கேன்”.
“எப்பய்யா வருவ”
“வேறு ஏதாவது சவாரி கிடைத்தால் வருவேன்”.
“அப்படியா?”
“ஏன் சித்தி”.
“இல்லை. எங்க வீட்டுகாரவிய பனையில இருந்து விழுந்தாவளா, நீ கவர் மெண்டுல இருந்து பைசா வாங்கி தாறேன்னு சொன்னீயே. ஏட்டையா கிட்ட கூட பேசினதா சொன்னீயே. அதுக்கு எந்த ரிக்காடும் வாங்கி கொடுக்காம போறீயே. அந்த பணம் கிடைக்குமாய்யா?”
அமைதியாக இருந்தான். “நீ வேண்டாம் என உன் தம்பியும், மருமகளும் என்னை விரட்டி விட்டிருக்கிறார்கள். என் காதலை பற்றி நன்கு அறிந்தவள் நீ. அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனா கவர்மெண்டுல போராடி பணம் வாங்க நான் வேணும்”. சந்திரன் மனது கோபப்பட்டது.
ஆனால் மனதுக்குள் அடக்கி கொண்டான்.
“சித்தி. கவர்மெண்டு 60 வயசுக்கு மேலே பனையில இருந்து விழுந்தா இழப்பீடு தராதுன்னு சட்டம் இருக்காம். எதுக்கும் நான் வந்து பார்க்கிறேன்”.
“என்னய்யா இப்படி சொல்லுத. நீ நினைச்சா கலெக்டரு தருவாராம். என்ன இப்படி சொல்லுத”.
“இருக்கட்டும் சித்தி. நான் சீக்கிரம் வாறேன்”.
“சரி”. என அவள் வார்த்தை அமைதியானது. “போயிட்டு வாய்யா. பத்திரமா போய் வாய்யா” என்று கூட பதில் வரவில்லை.
பணம் கிடைக்காது என்றவுடன் அப்படியே நம்மை அப்படியே கழற்றி விட்டு விட்டார்கள்.
சே. என்ன உலகம். இவர் கணவர் பனையில் இருந்து விழுந்து விட்டார் என்றவுடன் எத்தனை நாள் கண் விழித்து அலைந்தேன். அதையெல்லாம் நினைத்து பார்க்கவில்லை.
இது தான் உலகம். இந்த உலகத்தில் நாம் வேடிக்கையாக வாழ்ந்து இருக்கிறோம். இல்லாத ஒன்றிற்காக அலைந்து இருக்கிறோம்.
சரி. இனி மும்பைதான் போகவேண்டும்.
போக வேண்டும் என்றால் டீசல் போட வேண்டும். அதற்கு நம்மிடம் பணம் இல்லை. தந்த பணத்தினையும் வாங்க மறுத்து விட்டது இந்த மனம்.
அடுத்த வேளை சாப்பிட கூட பணம் இல்லை. என்ன செய்யப்போகிறோம்.
மும்பை போன் செய்து இளங்கோ டிரைவரிடம் பணம் கேட்கலாமா?. இங்கு நாம் பழகிய நண்பர்களிடம் கேட்கலாமா? வேண்டாம். தயாகத்தில் இதுவரை நமக்கு கிடைத்த மரண அடிகள் போதும். பணத்தினை கேட்டு, மேலும் மேலும் அவர்கள் நமது மனதை ரணப்படுத்துவார்கள். அந்த தாக்குதலை சந்திக்க வேண்டாம்.
அருகில் உள்ள நகரத்தினை நோக்கி காரை செலுத்தினான்.
மீண்டும் போன் ஒலித்தது.
இப்போது மும்பை கமிஷனர் சிங் பேசினார்.
“சந்திரா எங்க இருக்கீங்க”.
“அய்யா திருநெல்வேலியில”
“ நல்லதா போச்சு சந்திரா. கன்னியா குமரியில ஒரு விபத்து. மும்பையில் இருந்து மாராட்டி குடும்பம் ஒன்று ஆன்மிக சுற்றுலா வந்து இருக்கு. அதுல அப்பா அம்மா இரண்டு பேரும் இறந்து போயிட்டாங்க. மக மட்டும் உயிர் பிழைச்சி இருக்கா. அவளை மும்பை கூட்டிட்டு வரணும் முடியுமா?”
“ம். வரேய்யா”.
நமது பிறவி இதற்க்காகவே பிறந்து இருக்கிறது. அடுத்த ஆதரவற்ற குடும்பத்துக்கு உதவி செய்யப்போகிறோம். இது தான் விதி. இந்த விதிப்படி நடப்போம். என் தாத்தா வழியில் நல்லதை மட்டும் செய்வோம்.
கன்னியாகுமரி நோக்கி வண்டி கிளம்பியது. தொடர்ந்து பைபாஸ்ல் ஏறி வேகமாக குமரி முனையை நோக்கி சென்றது.
போனில் பிலிங் சத்தம் கேட்டது.
எடுத்து பார்த்தான். இவனது வங்கி கணக்கில் 20 ஆயிரம் ஏறி இருந்தது. சிங் தான் ஏற்றி விட்டிருந்தார்.
மீண்டும் சிங் இடம் இருந்து போன் வந்தது.
“அய்யா பணம் வந்துட்டு, ரொம்ப நன்றி”.
“இருக்கட்டும். நீ அந்த பெண் கிட்ட பணம் எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு வேண்டிய உதவி செய். சாப்பாடு வாங்கி கொடு. அது மட்டுமல்ல. உனக்கு பணம் காணலைன்னா எங்கிட்ட போன் பண்ணு. நான் பணம் அனுப்புறேன்”.
“சரி. அய்யா. அய்யா. அந்த பெண்ணுக்கு உறவுகாரங்க இல்லையா?”
சிரித்தார். “சந்திரா. அந்த பெண்ணோட அப்பா மாராட்டி காரர், அம்மா குஜராத்தி காரி. இரண்டு பேர் காதல் செய்து திருமணம் முடிச்சிக்கிட்டாங்க. அதனால இரண்டு பேர் உறவு காரங்களும் இவங்களை தள்ளி வச்சிட்டாங்க. கிட்டத்தட்ட 20 வருடமாக அவங்களை விட்டு தனியா பிரிஞ்சி வாழ்ந்துகிட்டு வாறாங்க. இவங்களோடு ஒரே பெண் மம்தா. இந்த பெண்ணுக்கு தோசம் இருக்கு, கன்னியாகுமரி போய் சூரிய உதயம் பார்த்தா அந்த தோசம் தீருமுன்னு சோசிய காரன் சொல்லியிருக்கான். இதுக்காக அவங்க அப்பா கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து நேர்த்தி கடன் முடிக்க கன்னியாகுமரிக்கு வந்து இருக்காங்க”.
இப்போது சந்திரனின் மனம் தடுமாறியது.
“அய்யா”.
“கன்னியாகுமரியில சூரிய உதயம் பார்த்துட்டு, திருநெல்வேலி வந்து அங்கிருந்து ஊருக்கு வரலாமுன்னு ஒரு வாடகை டாக்சி பிடித்து வந்துருக்காங்க. வள்ளியூர் கிட்டே வரும் போது எதிர்பாராத விபத்து. அப்பா அம்மா ரெண்டு பேருமே இறந்து போயிட்டாங்க. பாவம் அந்த பொண்ணு அனாதையா அங்க நிக்கு. அந்த பொண்ணுக்கு வேண்டிய உதவி செய்து பத்திரமா பாத்து கூட்டிட்டு வா சந்திரா-”
நானே ஒரு அனாதை. அங்கே இன்னொரு அனாதையா? தவித்தே போய் விட்டான் சந்திரன்.
இப்போது அவனுக்கு எல்லாமே மறந்து போய் விட்டது.
அவன் வாரிசு வழியாக அவனுக்கு கடத்தப்பட்ட உதவி செய்யும் மனப்பான்மைதான் அதிகரித்தது. வேகமாக காரை ஓட்டினார். கார் மதுரை பைபாஸ் ரோட்டில் சிட்டாய் பறந்தது. சுமார் 25 நிமிடத்தில் வள்ளியூர் காவல் நிலையத்தினை அடைந்தான்.
அங்கே அந்த பெண் இருந்தாள்.
அவளிடம் அறிமுகம் ஆனான்.
அழுது முகமெல்லாம் சிவந்திருந்தது. வண்டி உருண்டபோது இவளும் தாய் தந்தையரோடு உருண்டு இருக்க வேண்டும். இவள் சுடிதார் முழுவதும் ரத்தம் தோய்ந்து இருந்தது.
அதுவரை அவள் பேசிய மொழி அங்கிருந்த காவலர்களுக்கு புரியவில்லை. எனவே அங்கு எந்த காரியமும் நடைபெறவில்லை. சந்திரன் களத்தில் இறங்கினான் . அவளிடம் இந்தியி ல்பேசி பேசி அவர்களுடைய முழு நிலமையையும் காவல் துறை ஆய்வாளரிடம் பேசினான்.
அவள் சற்று ஆறுதல் அடைந்து இவன் முகத்தினை பார்த்தாள். திக்கு தெரியாத காட்டில் நின்ற அந்த அபலை பெண்ணுக்கு ஆறுதல் கிடைத்து இருந்தது. இப்போது அவள் அழுகை நின்று விட்டது.
“மம்தா நடந்தது நடந்து போச்சி. இனிமேல் நடக்க வேண்டியதை தான் பார்க்க வேண்டும். தைரியமாக இருங்கள்” சந்திரன் சொன்னவுடன். அவள் உதட்டில் சோகம் கலந்த சிரிப்பு ஒன்று வந்தது.
காவல் துறையினர் தகவல்களை எல்லாம் எழுதி வாங்கினார்கள். அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்டம் நடத்தி ரெண்டு உடலையையும் வாங்கினான். இனி இவர்களை மாராட்டி மாநிலத்துக்கு கொண்டு செல்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. தாமிரபரணி கரையில் சிந்துபூந்துறையில் உள்ள மின் தகன மேடைக்கு கொண்டு வந்தான். இவனுக்கு இலவச ஆம்புலன்ஸ் உட்பட எல்லா பணியும் லிங்க நாடார் விபத்தின் போதே தெரிந்து இருந்தது. எனவே இந்த காரியத்தினை அவன் ஒரே ஆளாக முடிக்க மிக எளிதாக இருந்தது. எரித்து உடலில் இருந்து சாம்பலை எடுத்துக் கொண்டு தாமிரபரணி கரைக்கு வந்தான். மம்தாவை வைத்து அவர்கள் அஸ்தியை கரைத்தான். தாமிரபரணியில் மம்தாவை நன்றாக குளிக்க வைத்தான்.
நெல்லை சந்திப்பில் போய் அவளுக்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புதிய சுடிதார் மற்றும் உடைகளை கொடுத்தான். மற்றொரு பையில் அவளுக்கு தேவையான பொருள்கள் துணிகளை சேகரித்து ஒரு சூட்கேஸ்ஸில் வைத்து அவள் கையில் கொடுத்தான்.
ஜானகிராம் ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று அவளுக்கு உணவு வாங்கி கொடுத்தான்.
“மம்தா. மும்பைக்கு நாம் போகலாமா?”
“போலாம்”. என்பது போல தலையை ஆட்டினாள்.
“அப்பா அம்மாவை இழந்து விட்டோம். உடமைகளை இழந்து விட்டோம். இனி நமக்கு யார் உதவ போகிறார்கள்”. அவளுக்கு ஆளுகை வந்தது அடக்கிகொண்டாள்.
இருவரும் கர்ரை நோக்கி வந்தார்கள். அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் சென்றான். காரில் ஆயில் மாற்றினான். டயர் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்தான். அதன் பின் சர்வீஸ் அடித்து காரை கழுவினான்.
இப்போது தனது மனதில் உறவுகள் கழிந்தது போல் காரில் இதுவரை இருந்து அழுக்குகளும் அகன்றது.
அருகில் உள்ள பெட்ரோல் பல்க் சென்றான்.
பெட்ரோலை காரில் நிரப்பினான்.
அவனுக்கு என்று இப்போது சொந்தமாக இருப்பது இந்த கார் மட்டும்தான். இதுவரை இருந்த சொந்தங்கள் எல்லாம் அகன்று விட்டது.
இதோ இப்போது வழிபோக்காக ஒருத்தி வந்திருக்கிறாள். அவளை கமிஷனர் சிங்கிடம் ஒப்படைத்து விட்டு, நம் வந்த வழியே செல்ல வேண்டியது தான்.
கார் பின் பக்கத்தில் மம்தாவை ஏறச்சொன்னான்.
அவள் முன் சீட்டு கதவை திறந்து முன்னே ஏறினாள்.
“ஏன் பின்னால் ஏறாலமே”.
அமைதியாக இருந்தவள் தலையை கவிழ்ந்திருந்தாள்.
“என்ன?”
நிமிர்ந்தாள். கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.
தனியா இருக்க பயமா இருக்கு.
சந்திரன் அவள் முகத்தினை பார்த்தான்.
“நான் வீட்டில் தனியாக இருக்க பயப்படுவேன். எப்போதும் என் தாய் தந்தையர் என்னை உடன் வைத்தே தூங்குவார்கள். அன்னைக்கு விபத்து நடக்கும் போது கூட என்னை நடுவில் வைத்து தான் இருபுறமும் இருந்தார்கள். விபத்து நடக்கும் போது என்னை காப்பாற்ற ரெண்டு பேரும் என்னை கட்டிப்பிடித்து அவர்கள் எல்லா காயத்தினை வாங்கி கொண்டு என்னை காப்பாற்றினார்கள். காரில் ஏறியவுடன் எனக்கு அந்த நினைவு த்தான் வருகிறது”.
அழுகை பெரிதாக வெடித்தது.
தேம்பி அழ ஆரம்பித்தாள்.
சந்திரனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. “சரி உட்கார்ந்துக்கோ. கதவை சாத்திக்கொள்”.
அவள் அழுது கொண்டே இருந்தாள்.
கீழே இறங்கி அவள் பகுதியில் இருந்த கார் கதவை அடைத்தான்.
அதன் பின் காரில் ஏறினான்.
“மும்பையில் உனக்கு சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா?”
தலையை அசைத்தாள். “யாரும் இல்லை”.
“அப்போ யார் வீட்டில் போய் தங்குவாய்”.
“தெரியலை”.
திரும்பவும் அவளுக்கு அழுகை வந்தது.
சந்திரனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அனாதைக்கு அனாதை ஆதரவு என்று சொல்லவும் முடியவில்லை. அமைதியாக இருந்தான்.
ஆனால் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. கார் கிளம்பியது.
என்னடா இது புது சோதனை.
“மம்தா அழாதே. நானும் ஒரு அனாதை தான். நம்மை மாதிரி நிறைய பேரு இந்த நாட்டில இருக்காங்க. அவங்களுக்கு ஆதரவு இந்த நாடுதான்”.
இப்போது அவள் அழுகை பெரிதாகியது. அவளுக்கு யார் மீதாவது சாய்ந்து அழவேண்டும் போல தோன்றியது. அவளை அறியாமலேயே சந்திரன் மார்பில் சாய்ந்தாள். சந்திரனால் என்ன செய்யவென்றே தெரியவில்லை. ஒரு கையால் ஸ்டிரியங்கை பிடித்தப்படியே அவள் தலையை ஆதரவாக வருடினான். அவன் வேண்டுமென்றே செய்ய வில்லை. ஆனாலும் அது நடந்தது.
“என் தாத்தா ராஜத்துரையிடம் லெட்சுமி பாட்டி இப்படித்தான் ஆதரவு கேட்டிருப்பாள். என் அப்பா வெள்ளத்துரையிடம் என் தாய் பூமா இப்படித்தான் ஆதரவு கேட்டிருக்க வேண்டும். அந்த வழியில் இப்போது மம்தா என்னிடம் ஆதரவு கேட்கிறாள்”.
“கொடுக்கலாமா?”
“என் தாத்தா கல்யாணம் இரண்டு சாதியை சேர்த்து வைத்தது. அதில் இருந்து பிறந்த என் தந்தை மற்றொரு சாதியில் மணமுடித்தார். அவர்களுக்கு பிறந்த நான் நிச்சயம் என் தாத்தா சாதியில் திருமணம் முடிக்க இயலாது என்றாகிவிட்டது”.
“அப்படியென்றால் இறைவன் தமிழகத்தினை தாண்டி மகராஷ்ரா மாநிலத்துக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே பிறந்த மம்தாவை என்னோடு இணைத்திருக்கிறானோ”.
இப்போது தமிழகம், மகராஷ்ரா, குஜராத், இங்கிலாந்து என உலக வாசிகள் இந்த குடும்பத்தில் ஒன்று கூடி விட்டார்கள். இவர் வழியில் வந்த சந்திரன் மம்தாவுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயம் இந்தியனாகத்தான் பிறக்கும்.
அந்த காலத்தினை நோக்கித்தான் இவர்கள் நகர்வு இருக்கும். இந்த இணைப்பு அரும்பாக இருக்காது. நிச்சயம் மலராக பூத்துக்குலுங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
(முற்றும்)
&&&
வாசகர்களுக்கு நன்றி
கிட்டதட்ட சான்றோர் மலரில் 6 வருடம் முத்துக்கிளி உங்களோடு பயணித்து விட்டாள். உங்களுக்கு அலுப்பு தட்டாமல் முத்துக்கிளி இருந்திருக்கிறாள் என்ற போது சந்தோசமாகத்தான் இருக்கிறது. முத்துக்கிளி நிறைய விசயங்களை உங்களோடு பகிர்ந்துகொண்டாள். தற்போது இந்த நாவல் நான்கு பாகமாக வெளிவரவுள்ளது. முதல் பாகம் “சருகு”. புதுமைபித்தன் நாவல் போட்டியில் இறுதி வரை பயணித்து கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. யாவரும் பதிப்பம் இந்த நாவலை நூலாக வெளியிட உள்ளார்கள். இரண்டாம் பாகம் “தீதும் நன்றே”. இதை சுவடு பதிப்பகம் வெளியிட்டு, பல போட்டிகளுக்கு சென்று வருகிறது. வாசகர்கள் மத்தியில் பல்வேறு சிறப்புகளை பெற்று வருகிறது. மூன்றாவது பாகம் “ரங்கூன் ராஜத்துரை”. இந்த நாவல் பாண்டிச்சேரி அரசு செயலரும், நமது சான்றோர் மலரில் ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தொடர் எழுதி வரும் எழுத்தாளர் எஸ்.டி. சுந்தரேசன் அய்யா அவர்களின் அணிந்துரைக்காக அவரின் கவனதுக்கு சென்றது, அவரது பாராட்டு பெற்று விரைவில் பிரபல பதிப்பகத்தில் நூலாக வெளிவர உள்ளது. அதே போல் இறுதி பகுதி “முத்துக்கிளி” என்ற பெயருடன் நாவலாக வெளிவர உள்ளது. இந்த வாய்ப்பு வாசகர்களான உங்களாலும் நீங்கள் கொடுத்த ஆதரவாலும் எனக்கு கிடைத்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த சகோதரி தேவிகா முத்துக்கிளி தொடரை பற்றி என்னிடம் பேசினார். சுரண்டையில் உள்ள பிரபலங்கள் பலர் என்னிடம் முத்துக்கிளியை பற்றி விவரம் கேட்டார்கள். முக்கூடலில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் காசாளராக பணிபுரியும் கணேஷ் என்பவரின் தாயார் இந்த தொடரை தவறாமல் படித்து வருவதாக சொன்னார். நமது தெட்சணமாற நாடார் சங்க அலுவலகத்திலும் பலர் படித்து விட்டு பாராட்டு தெரிவித்தார்கள். எஸ்.என்.பட்டியை சேர்ந்த மகாலெட்சுமி, அடுத்த தொடர் எப்போது வரும் என ஆவலோடு காத்திருந்து படித்து வந்தார். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் முடிவு இருக்கவேண்டும் அல்லவா?. தற்போது முத்துக்கிளி தொடர் முடிவுக்கு வந்து விட்டது. வாய்ப்பு தந்த தெட்சணமாற நாடார் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள், மேலாளர், கம்யூட்டர் ஆபரேட்டர், புரூப் படித்தோர் என அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தந்த வாசகர்களுக்கும் நன்றி. – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
அடுத்த இதழில்
பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதும் புதிய தொடர்.
“லோன்துரையும் மேகநாதனும்”
இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் திருச்செந்தூர் தாலூகாவில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தொடர்கதை.
தவறாமல் படியுங்கள்.