முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். அவர் மகன் வெள்ளத்துரைக்கு சொந்த காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள்.
வெள்ளத்துரை தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராமன் அய்யரை பலிவாங்க தேடிப்போகிறான்.
இனி.
66. அப்பா செய்த தப்பை நானும் செய்தேன்
கிளாரிந்த சர்ச்சில் பலர் ஜெபம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினாலும், அமைதியை நாடுவோர் ஆங்காங்கே அமர்ந்து இருக்க நிறைய நாற்காலிகள் போட்டு இருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெஞ்ச் போடப்பட்டிருந்தது. உள்ளே உள்ள ஆலயத்துக்கள் ஜெபம் செய்யும் வசதியாக பாய் விரிக்கப்பட்டிருந்தது. முட்டி போட்டு ஜெபம் செய்யும் வசதியும் இருந்தது. நிறைய பைபிள்கள் ஆங்காங்கே வைத்திருந்தார்கள். அந்த பைபிளை எடுத்து ஜெபம் செய்யலாம். நாம் என்ன நினைத்து ஜெபம் செய்கிறோமோ? அதற்கு பதில் நாம் பைபிளை திருப்பும் போது கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
பல ஆங்கிலேயர்கள் கல்லறை அங்கே இருந்தது. பெரும்பாலும் 20 வயது 21 வயதில் இறந்தவர்கள் அதிகம் அவர்களின் கல்வெட்டுக்கள் மிக அதிகமாக இருந்தது. உண்மைத்தான் மேலை நாட்டில் இருந்து பிரசங்க செய்ய வந்தவர்கள், இங்குள்ள தட்ப வெட்ப நிலை ஒத்துக் கொள்ளாமல் சிறு வயதிலேயே இறந்திருக்கிறார்கள். நமக்காக வந்தவர்கள். பாவம் அவர்களது கல்லறை மட்டும் இருக்கிறது. அவர்களது வரலாறு இங்கே இல்லை. ஆனால் அந்த கல்லறைக்குள் வரலாறு தூங்கி கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் என்ற ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரை ஆங்கிலேயர் ஒருவர் விலைக்கு வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்திருந்தார். ஆகவே அந்த ஊர் அவர் பெயரிலேயே சாயர்புரம் என அழைக்கப்படுகிறது. என்றார் அகஸ்தீஸ்வரன் . அந்த சாயர் என்பரில் கல்லறை அங்கே கல்லறை இருந்தது. உண்மைத்தான் பல வரலாறுகள் இங்குள்ள கல்லறையில் உறங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள அனைவரும் ஆங்கியேலர்கள் கிளாரிந்தா கல்லறையை தவிர. அந்த இடத்தில் கிளாரிந்தா இடம் பிடித்து இருக்கிறார் என்றால் அவர் எத்தனை சாதனைக்கு சொந்தகாரர்.
சற்று நகர்ந்து சென்ற பார்த்தோம். கிளாரிந்தா என்ற கோகிலாவின் கல்லறையும் அங்கே இருந்தது. அந்தஇடம் ஊருக்கு நடுவில் உள்ளது. ஆனாலும் இத்தனை கல்லறைகள் இருப்பது அதிசயம். இந்த கல்லறைக்க மத்தியில் உள்ள ஜெப கூடத்துக்கு எத்தனை பேர் வந்து ஜெபிக்கிறார்கள். இன்று மதிப்பும் மரியாதையும் கிளாரிந்தாவுக்கு அதிகம். ஆனால் கிளாரிந்தா வாழந்த காலத்தில் அவருக்கு இந்த அளவுக்கு மதிப்பு கொடுத்து இருப்பார்களா என்ன?.
அகஸ்தீஸ்வரன் சார் விட்ட இடத்தில் இருந்து கிளாரிந்தா கதையை கூற ஆரம்பித்தார்.
சந்திரன் அமைதியாக அவர் அருகில் இருந்து கதையை கேட்க ஆரம்பித்தான். ஏன் என்றால் சார்வாள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். இந்த அம்மா வரலாறும், உன் தாத்தா வரலாறும் கிட்டத்தட்ட ஒண்ணுத்தான் என சொன்னார். ஆகவே இந்த வரலாற்றை கேட்க ஆயத்தமானார்.
லிட்டில்டனும் நினைத்தான். “நாம் தெரிந்தோ தெரியாமலேயோ அபலை பெண் கோகிலாவுக்கு உதவி விட்டோம். இவளை நாம் வெளியே அனுப்பினால் அவள் பெற்றோர்களே இவளை கொன்று விடுவார்கள். இவளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடும். இல்லையென்றால் சிதையில் இருந்து நம்மால் காப்பாற்றப்பட்ட இவள் வேறு எந்த குளம் அல்லது குட்டையில் விழுந்து செத்து விடுவாள். அப்படி இருக்கும் போது இவளை நாம் காப்பாற்றி என்ன பிரயோசனம். இவள் என்ன தப்பு செய்தாள். இவள் கணவன் இறந்தால் அதற்கு இவள் என்ன செய்வாள். இந்த அபலை பெண்ணை காப்பாற்றவேண்டும். ஆகவே நாம் இவளை ஏற்றுக் கொள்வதில் எந்த வித தவறில்லை என்று நினைத்தான்.
ஆகவே தான் இவருவரின் மனமும், உடலும் இணைந்து விட்டது.
இவர்கள் இருவரும் இணைந்து விட்டார்கள். ஆனால் மற்றவர்களுக்கு இவர்களின் இணைப்பு பிடிக்க வேண்டுமே. மற்றவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இருவரையும் அருவெறுப்பாக பார்த்தார்கள். நம்மவர்களே இவர்களை இப்படி பார்க்கிறார்கள் என்றால், ஆங்கிலேயர்களும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றவாளியாகத்தான் பார்த்தார்கள். எனவே இருவரின் நிலையும் திரிசங்கு சொர்க்கமாகவே இருந்தது.
தஞ்சாவூரில் இவர்களின் வாழ்க்கை பெரும் கேள்வி குறியாகவும், கிசுகிசுப்பாகவும் இருந்தது. இப்போது சினிமா கிசுகிசு வருகிறதே. அதை விட பல மடங்கு இவர்களை பற்றி அந்த காலத்தில் கிசு கிசு பேசினார்கள். ஏற்கனவே ஆங்கிலேய படைத் தளபதிகள் உள்ளூர் பெண்களுடன் குடிதனம் நடத்துவதாலும், மது அருந்தி விட்டு பெண்களிடம் தவறுதலாக நடத்துவதாலும் இந்தியாவில் உள்ளவர்கள் மனமுடைந்து போய் இருந்தனர். இதில் மேலை நாட்டு பிரசங்கியர் சுவார்ட்ஸ் அய்யருக்கு உடன் பாடில்லை. இவர்கள் செய்யும் செயல் எதிர்காலத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் பரவ தடையாக இருக்கும் என நினைத்தார். எனவே அவர்கள் இருவரையும் வெறுத்தார்.
ஆனால் கோகிலாவை பொறுத்தவரை அவளுடைய உலகமே லிட்டில்டன் தான் என நினைத்தாள். காரணம் மரண பிடியில் இருந்து அவன் காப்பாற்றியிருந்தவன்; அவனின் அன்பு பிடித்திருந்தது. அவன் அரவணைப்பு அவளுக்கு தேவை யிருந்தது. அவன் மார்க்கம் பிடித்திருந்தது. அந்த மார்க்கத்துக்கே தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டாள். சிறு வயதில் உடன்கட்டை ஏற வைத்த அவளது சமூகம் அவளுக்கு பிடிக்கவில்லை. உயிர் பிழைத்த பின் தன் தாய் தந்தையரோடு சேர வேண்டும் என்ற போது, இவன் அவளுக்கு உதவினான். இவளை அவன் தவறுதலாக நினைத்திருந்தால், பெற்றோர்களிடம் கூட்டி வந்திருக்க மாட்டான். எனவே அவனின் அந்த பண்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னை ஏற்றுக்கொள்ளாத தாய் தந்தையர்களையும் தனது குடும்பத்தையும் முழுவதுமாக வெறுத்தாள். எதிரியாக இருந்தாலும் தன்னை காப்பாற்றியவன் மதம் மார்க்கம் இவளுக்கு பிடித்திருந்தது. எனவே அந்த மதத்தினை அவனோடு சேர்ந்து இந்த உலகத்திற்கு பரப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கான பணியிலும் இறங்கினாள். ஆனால் அதற்கு தடை இருந்தது ஆங்கியேல பிரசங்கியர்கள். ஏன் என்றால் இவளை கிறிஸ்தவளாக அவர்கள் அங்கீகரிக்க வில்லை. இதனால் அவள் பிரசங்க செய்ய தடையாக இருந்தது.
அப்படியென்றால் இவள் கிறிஸ்தவராக மாறவேண்டும். அதற்கு முதல் முதலாக ஞானஸ்தானம் எடுக்க வேண்டும். எனவே அவள் சுவாட்ஸ் அய்யரை நேரில் சென்று பார்த்தாள்.
“அய்யரே எனக்கு ஞானஸ்தானம் கொடுங்கள்” என கேட்டாள்.
ஆனால் அய்யர் அவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார்.
“என்னடா அந்த காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு வாருங்கள் வாருங்கள் என அழைத்தார்கள் ஆங்கிலேயர்கள் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறோம் . இங்கே ஏன் இவர் ஆங்கிலேயரை நம்பி வந்த பெண்ணுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மறுக்கிறார்” என கேட்க வேண்டும் என சந்திரனுக்கு தோன்றியது. அதற்கும் அகஸ்தீஸ்வரன் சாரே பதில் சொன்னார்.
சுவாட்ஸ் அய்யர் இந்த இடத்தில் எண்ணிக்கைக்கு மதம் மாற்ற தாயராக இல்லை. ஒழுக்கத்துக்கத்தான் மிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக தமிழர்கள் ஒழுக்கமாக வாழ்பவர்கள். எனவே ஒழுக்க கேடு என்ற தெரிந்தால் அந்த மதத்தினை கூண்டோடு வெறுத்து விடுவார்கள். அப்படி ஏதாவது ஏடாகூடாமாக செய்து விட்டால், நம் மதத்தின் மீதுள்ள நம்பிக்கை எல்லாம் பறி போய் விடும். கோகிலாவுக்கு, லிட்டில்டன் நல்லது செய்து இருந்தாலும். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை என்றே நினைத்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலேயன் ஒருவன் , இங்கே வந்து தமிழ் பெண்ணை அபகரித்து மணந்து விட்டான் என்ற அவப்பெயர் மட்டுமே இருக்கிறது. எனவே இவர்களுக்கு நாம் உதவி செய்தால் நிச்சயம் நமது மதத்தினை உள்ளூர் மக்கள் நம்ம மாட்டார்கள். இதனால் இவளுக்க ஞானஸ்தானம் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார் அய்யர். உண்மைதானே இதே போல் கணவன் மனைவியாக ஒழுக்கம் கெட்டு வாழும் தம்பதிகளுக்கு தான் உதவி செய்தால், இந்த மார்க்கம் மீதே அனைவருக்கும் எரிச்சல்தானே ஏற்படும். ஏற்கனவே ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாருக்கு கெட்டப்பெயர். தங்கள் வீரர்கள் உள்நாட்டு பெண்களுடன் குடித்தனம் நடத்துவது உள்ளூர் மக்களுக்கு விருப்பம் இல்லை. அதை அவர்கள் தட்டி கேட்கவும் முடியவில்லை. அதைபெரிய அடக்கு முறையாகவே நினைத்தார்கள். அது மட்டுமல்லாமல் கம்பெனியார் ஆங்கில பெண்களை இந்தியாவிற்கு வர அனுமதிக் காததால், படை வீரர்கள் தங்கள் விருப்பம் போல் இந்திய பெண்களைச் சேர்த்துக் கொண்டு கும்மாளம் அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் மீதே தமிழர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சீர்திருத்த கிறிஸ்தவ சமயம், இந்தியாவில் பரவ தடையாக இருக்கும் என்று சுவார்ட்ஸ் அய்யர் நினைத்தார்.
அது மட்டுமல்லாமல் திருமணம் முடிக்காமல் அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இருப்பது அவர் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியது. இது மேலை நாட்டில் வேண்டும் என்றால் நாகரீகமாக இருக்கலாம். ஆனால் நமது தமிழ் கலாச்சாரத்தில் எப்படி ஒத்துப்போகும். ஒரு ஆங்கில படை அதிகாரியுடன் குடியிருந்து பாவ வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பவளுக்கு தனது மனசாட்சியை மழுக்கிகொண்டு ஞானஸ்தானம் தர முடியாதென்று முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
இதனால் நொந்தே போய் விட்டாள் கோகிலா. அவளும் நல்ல பெண் தான். தனது கணவனோடு வாழ வேண்டும். குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று தானே நினைத்தாள். இவளை காப்பாற்றியவன் தன்னை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படவில்லையே. தாய் தந்தையரிடம் அழைத்து சென்றானே. ஆனால் அவர்கள் தானே இவளை ஏற்றுக்கொள்ள வில்லை. அதுவரை லிட்டில்டனின் விரல் நுனி கூட கோகிலா மீது படவில்லையே. கோகிலாவும் அவனை தப்பாகவே பார்க்கவில்லையே. இந்தியாவில் ஆங்கியேலர்களுக்கும், இந்தியர்களுக்கும் பல பிரச்சனை நடை பெறுகிறது. ஆனால் இந்த அபலைபெண்ணுக்கு அதெல்லாம் எங்கே தெரியும். இவளை உடன் கட்டை ஏற வைத்தது நம்மவர்கள் தப்பா. இல்லை ஆங்கிலேயர்கள் தப்பா?. லிட்டில்டன் இல்லாமல் யாராக இருந்தாலும் உடன் கட்டை ஏறும் அபலை பெண்ணை காப்பாற்றியிருப்பான். அதற்காக என்னை தெருவில் விட்டது யார் குற்றம்?. என் தாய் தந்தையர் குற்றமல்லவா?. அதற்கு ஆங்கிலேயர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம். இப்போது தாய் தந்தையரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் தனக்கு ஞானஸ்தானம் கொடுத்து கிறிஸ்தவ மதத்திலும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
கதறி அழுதுவிட்டாள். லிட்டில்டனிடம் தனது ஆதங்கத்தினை வெளிபடுத்தினாள். அவன் இவளுக்கு ஆறுதல் சொன்னான். அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்தான். ஆகவே மனம் தளராமல் லிட்டில்டனுடன் வசித்து வந்தாள். இந்த வாழ்க்கை அவளுக்கு சுகம் என்று சொல்வதோடு, தவம் என்றே சொல்ல வேண்டும். தனக்கு உயிர் கொடுத்தவனுக்கு தன் உடலை கொடுத்தாள். அதை தவறு என்று யார் நினைத்தால் தனக்கென்ன என்றே நினைத்தாள்.
சுவார்ட்சு அய்யர் தஞ்சாவூரில் கோகிலாவிற்கு ஞானஸ்தானம் கொடுப்பதற்கு மறுக்க மற்றொரு காரணமும் இருந்தது. அவர் திருச்சபைச் சட்டங்களைக் கடை பிடித்து வந்ததுதான். மேலும் அவர் தமிழகத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ சமயத்தை பரவ செய்வது மட்டுமே தமது கடமையும் பணியும் என்று நினைத்தார். அதற்காக அவரும் தவ வாழ்க்கை வாழ்ந்தார். இம்மாதிரி ஒழுங்கீன வாழ்க்கை நடத்துபவரை கிறிஸ்தவ சபையில் ஏற்றுக் கொண்டால், கிறிஸ்தவ சமயத்தை மற்றவர்கள் தழுவுவதற்கு தடையாக இருக்கும் என்று அவர் எண்ணினார். ஆனால் அவர் எண்ணியது தவறு என்பது பிற்காலத்தில் அவருக்கு உணர்த்தும் காலமும் வந்தது.
சந்திரன் “ச்” கொட்டினான். பாவம் கோகிலா அவளின் வாழ்க்கை இவனுக்கு வருத்தத்தினை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்கள், விடுதலைப்போராட்டம், உள்பட பல்வேறு வரலாறுகள் வெளியே தெரிகிறது. வரலாறாக படிக்கப்படுகிறது. ஆங்காங்கே நூல்களில் உள்ளது. ஆனால் கோகிலா கதை போன்று பல கதைகள் இங்கே வரலாறாக இருந்து வருகிறது. ஆனால் பெரிய அளவில் பொறிக்கப்படாமல் அல்லவா இருக்கிறது. சந்திரன் “அய்யா, கோகிலா கதை அதுக்கப்புறம் என்னாச்சி” என்றான்.
அவன் ஆர்வத்தினை புரிந்து கொண்ட அகஸ்தீஸ்வரன் சார் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார். “லிட்டில்டன்னும் கோகிலாவும் உண்மையான காதலர்களாக வாழ்ந்தனர். அவர்களைப்பற்றி முழுவதுமாக அய்யர் அறிந்து இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவர்கள் உடற்பசிக்காக தங்களை இணைத்துக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, அறிந்து காதல் செய்தவர்கள். லிட்டில்டன் கோகிலாவிற்கு கிறிஸ்தவ சமய கொள்கைகளைப் பற்றியும், ஆங்கில மொழியையும் கற்றுக் கொடுத்தார். ஞானஸ்தானம் மட்டும் தான் பெறவில்லையே தவிர அவள் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ ஆரம்பித்தாள். தினமும் ஜெபம் செய்வது உள்பட , அந்த அக்கிரகாரத்து பெண் தனது சம்பிரதாயங்களை எல்லாம் விட்டு மாறி விட்டாள். முக்காடு போட்டு, சுப்ரபாதம் பாடிய கோகிலா துப்பட்டா போட்டு ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டாள். கோகிலாவும் லிட்டில்டன் இருவரும் சந்தோசமாக வாழ ஆரம்பித்தனர். இவர்கள் வாழ்க்கையில் ஒரு துரும்பு கூட இடையூறு வரக்கூடாது என்பதில் லிட்டில்டன் உறுதியாக இருந்தான். ஆனால் காலம் வேறு மாதிரி வேலை செய்தது. இவர்களுக்கு இடையே வேறு விதத்தில் பிரச்சனை ஏற்பட்டது. ஆம் இவர்களை பிரிக்க பூமியில் இருந்தவர்கள் யாரும் சதி செய்யவில்லை. ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது. ஒரு காலகட்டத்தில் லிட்டில்டன் நோயால் வருந்தினான். தன் உயிரை உடன்கட்டையில் இருந்து காப்பாற்றிய அவன் உயிரை காப்பாற்ற போராடினான். படுத்தப் படுக்கையாக இருந்த அவனுக்கு கோகிலா மிகுந்த அன்புடன் பணிவிடை செய்தாள். எமனுடன் போராட்டம் என்பார்களே அதுபோலவே போராட்டம் நடந்தது. தன் உயிரை காப்பாற்றிய தனக்கு மறுவாழ்வு கொடுத்த அவரது உயிரை காப்பாற்ற போராடினாள். இதனால் லிட்டில்டன் நெகிழ்ந்து போய் விட்டார், அதற்கு நன்றியாக லிட்டில்டன் அவரது சொத்து முழுவதையும் கோகிலா பெயருக்கு மாற்றி வைத்தான். கோகிலா சொத்தை பெரிதாக நினைக்கவில்லை. எப்டியாவது லிட்டில்டனை காப்பாற்றி விட வேண்டும் நினைத்தாள். அதற்காக இரவு பகலாக அவனுக்கு ஊழியம் பார்த்தாள். ஆனால் விதி யாரை விட்டது-”?.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், அதன் பின் பேச ஆரம்பித்தார்.
சந்திரன் தனது தந்தை கதையை கேட்போம் எனதான் நினைத்தான். ஆனால் கோகிலாவின் கதையை கேட்டவுடன் மிகவும் வேதனை அடைந்தான். அய்யோ கோகிலாவுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என துடித்தான். எனவே “சார்வாள் அந்த இங்கிலிஷ் காரன் என்ன ஆனான். நீங்க தஞ்சாவூரில் இவர்கள் இருந்த மாதிரி வரலாறு சொல்றீங்க. ஆனால இந்த அம்மா கல்லறை திருநெல்வேலியில இருக்கு. அவங்க ஏன் திருநெல்வேலிக்கு வந்தாங்க? எப்படி வந்தாங்க?”. கேள்விகளை வேகமாக அடுக்கினான்.
“சொல்றேன். கண்டிப்பா சொல்றேன்”.
அகஸ்தீஸ்வ்ரன் சார், அமர்ந்து இருந்த பெஞ்சில் நன்றாக அமர்ந்தார். அவரின் முன்னால் சந்திரனும் கதை கேட்ட மற்றொரு நபரும் அமர ஆரம்பித்தனர். அதன் பின் அவர் வரலாற்றை தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
நோய் வாய்ப்பட்ட லிட்டில்டன் தஞ்சாவூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அப்போது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் படையொன்று ஆற்காடு நவாப்பிற்கு ஆதரவாகவும், பாளையக்காரர்களை அடக்கவும், அவர்களிடமிருந்து கப்பம் வசூலிக்கவும், பாளையங் கோட்டையில் முகாமிட்டு தங்கியிருந்தது. அந்த பாளையங் கோட்டை முகாமுக்குத்தான் கோகிலாவும், லிட்டில்டனுடன் வந்துச் சேர்ந்தார்கள். உடல் நிலை பாதித்தாலும் இவனது அறிவு ஆற்றல் படை வீரர்களுக்கு இவன் கொடுக்கும் பல திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. எனவே இவன் ஆலோசனைக்காகவே இவனை பாளையங்கோட்டை கூட்டிவந்தார்கள்.
சந்திரன் ஆவலோடு அந்த வரலாற்றை கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் ஆங்கிலேய படைக்கு இவன் உதவினாலும் இங்கேயும் இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. லிட்டில்டனுக்கு ஆங்கியேலர்கள் பெரிய அளவில் உதவ வில்லை. ஆனால் கோகிலா அவனை நன்கு கவனித்தாள். பராமரித்தாள்.
காலங்கள் கடந்தது. ஆனால் ஒரு நாள் லிட்டில் டன் கோகிலாவை நன்கு நேசித்தான். எல்லோரும் அவரை ஒதுக்கிய போதும் கூட அவரை நன்கு கவனித்துக்கொண்டாள் கோகிலா.
நோயால் தவித்த லிட்டில்டன் பாளையங் கோட்டைக்கு வந்த சில காலத்தில் கோகிலாவை தவிக்கவிட்டு மரணமடைந்தான். அவன் வாழ்க்கையை பொறுத்தவரை அந்த காலத்தில் புரட்சியானவன். ஒரு விதவை பெண்ணை மனம் முடித்த அந்த மகான் தற்போது போற்றப்படுகிறான். ஆனால் அந்த காலத்தில் நம்மவர்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்களும் அவன் வாழ்க்கையை ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையாகத்தான் நினைத்தார்கள். எனவே அவனை அடக்கம் செய்ததை கூட அவர்கள் பதிவு செய்து வைக்கவில்லை. பாவம் அவனை எங்கே புதைத்தார்கள் என்று கூட தெரியவில்லை. அவன் கோகிலாவை திருமணம் முடித்த காரணத்தினால் அவனை ஆங்கிலேயர்களும் தங்களோடு சேர்த்துக்கொள்ள வில்லை போலும். அதனால் இந்த பகுதியில் அவனை எங்கே புதைத்தார்கள் என்று கூட தெரியவில்லை.
“என்னய்யா சொல்றீங்க. பாளையங்கோட்டையில் தான் வாஞ்சி நாதன் சுட்டுக்கொன்ற ஆஷ் துரை கல்லறை கூட இருக்கு. அப்படி இருக்கும்போது இவர் கல்லறை மட்டும் ஏன் இங்கே இல்லை. அதோட அந்த காலத்தில யாரை எங்க புதைச்சாங்கன்னு ஆங்கிலேயர் பதிவு பண்ணி வச்சிருப்பாங்களே அய்யா”. சந்திரன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஆமாம். அது தான் புரியலை. ஒரு இங்கிலாந்து காரன் இந்திய கார பெண்ணை திருமணம் முடிச்சது அவங்களுக்க பிடிக்காம இருந்தது தான் காரணம். அதனால லிட்டில்டன் எங்க புதைக்கப்பட்டான்னு கூட தெரியலை”.
“அடப்பாவமே”. சந்திரன் கொதித்து போனான்.
“பாளையங்கோட்டையில் கிளாரிந்தா எழுப்பிய ஆலயத்திற்கு தெற்கு பகுதியில் ஐரோப்பியரை புதைக்கும் இடம் இருக்கு பாத்தல. நீ வரும் போது பாத்து இருப்ப. இந்த இடம் 1775&ஆம் ஆண்டு தோன்றியதாக கால்டுவெல் எழுதியிருக்கிறார். அவ்விடத்தில் லிட்டில்டன் கல்லறை இல்லை. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பு நிலையத்தில் திருநெல்வேலியில் இறந்து போன ஐரோப்பிய ர்களின் பெயர் பட்டியல் இருக்கிறது. அதில் லிட்டில்டன் பெயர் இல்லை. அவர் புதைக்கப்பட்ட இடம் எங்கேயோ மறைந்து கிடக்கிறது. சரி அது இருக்கட்டும். இந்த நவீன காலத்தில் சாதிக்குள் சாதி கல்யாணம் பண்ணினாலே படாதபாடு படுத்துறாங்க. அந்த காலத்தில விட்டு வைப்பாங்களா?”. அகஸ்தீஸ்வரன் சொல்லி முடித்தார்.
சந்திரன் அமைதியா இருந்தான். அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. கிளாரிந்தா சர்ச்சுக்குள்ள உள்ள கல்லறையில் எங்கேயாவது ஒரிடத்தில் அவர் கல்லறை இருக்காதா? என அந்த கிளாரிந்தா சர்ச்சுக்குள் ஒவ்வொரு கல்லறை பெயராக படித்துப் பார்த்தான். சில பெயர்கள் படிக்க முடியாமல் இருந்தது. அந்த பெயரில் முதல் எழுத்து “எல்” என வந்தால் உடனே அந்த பெயரை படிக்க ஆரம்பித்தான். ஆனால் அது லில்டில்டன் இல்லை என்றவுடன் மனது உடைந்தான்.
ஆங்கிலேயர்கள் காதலை நேசிப்பார்கள் மதிப்பார்கள் என நினைத்து இருந்தோம். ஆனால் உண்மையான காதலை அவர்கள் நிரகாரித்து இருக்கிறார்களே. ஒரு ஞானஸ்தானம் கூட கொடுக்கவில்லை. கல்லறை தோட்டத்தில் இடம் கொடுக்க வில்லை. மேலை நாட்டார்களே இப்படி என்றால் தற்போது சந்திரன் முத்துக்கிளி காதலை எங்கே ஏற்றுக்கொள்வார்கள்.
தவியாய் தவித்தது சந்திரன் மனது.
நமது தந்தை கதை வேறு புரியாத புதிராக இருக்கிறது. அவர் சொந்தத்தில் தான் திருமணம் செய்தாரோ-? அல்லது அவரும் காதல் கீதல் என சாதி மாறி திருமணம் செய்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. நிச்சயம் அவர் தேனிலாவை மணமுடிக்க வில்லை. அப்படியென்றால் நிச்சயம் நாடார் சாதியில் அவர் மண முடிக்க வில்லை. அப்படியென்றால் இவர் எந்த வெள்ளக்காரியை திருமணம் செய்தாரோ தெரியவில்லையே? என அவன் மனம் துடியாய் துடித்தது.
ஆனால் அவன் தந்தை கதையை விட கிளாரிந்தா என்ற கோகிலாவின் கதையை தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தான்.
காரணம் ஆண் துணை இருந்தும் கூட கோகிலா என்ற அந்த பெண் தனது உறவுகாரர்களால் மிகவும் பாதிக்கப்பட்டாள். அவளை திருமணம் செய்த மேலை நாட்டை சேர்ந்தவர்களும் இவளையும் , இவளை சேர்த்து வைத்துக்கொண்டான். என்ற நிலையில் அந்த ஆங்கிலேயனையும் படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். பல திருமணம் செய்யும் மேலை நாட்டவர்கள் கூட இந்தியா வந்தவுடன் இங்கே உள்ளவர்கள் போலவே தங்களது பழக்கம் வழக்கங்களை மாற்றியுள்ளார்கள். ஏன் ஒரு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய கூட இடம் கொடுத்தாக தெரியவில்லை.
சே. என்ன உலகம் இது. சங்க காலத்தில் காதலை பற்றி பெருமையாக பாடியிருக்கிறார்கள்.
“கலம் செய் கோவே” என்ற பாடலில் தலைவன் போரில் இறந்து விடுகிறான். தலைவி தன்னை சேர்த்து புதைக்கும் படி முதுமக்கள் தாழி செய்ய கூறினாள் என கூறப்படுகிறது. அது உண்மை என்பது போல தற்போது ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த போது ஒரே முதுமக்கள் தாழியில் கணவன் மனைவி இரண்டு பேர் இருந்த உடல் கிடைத்து இருக்கிறது. அந்த அளவுக்கு காவிய காதலர்கள் வாழ்ந்த பூமி அல்லவா? இந்த பூமி. இந்த பூமியில் காதலுக்கு சாதியால் தடையா?. வள்ளுவனும் காதலை பாடியிருக்கிறான். சங்க கால இலக்கியங்களும் இதை வலியுறுத்துகிறது. ஆனால் கிராமங்களில் சாதி அல்லவா? தலை விரித்து ஆடுகிறது. லிட்டில்டன் இருக்கும் போதே கோகிலாவை விரட்டினார்கள் ஆங்கிலேயர்களும், இவளது உறவினர்களும். அப்படியிருக்கும் போது பாளையங்கோட்டையில் இந்த அம்மா எப்படி தாக்கு பிடித்து இருப்பார்கள்.
சந்திரனின் எதிர்பார்பை அதிகரித்தது. எனவே அகஸ்தீஸ்வரன் சார் அதைப்பற்றி பேச ஆரம்பித்தார்.
கடுமையான காலம் தான். லிட்டில்டன் இழப்பு கோகிலாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான். இருந்தாலும் மனந்தளராமல் இருந்தாள். கொஞ்ச நாள் அவளால் அவன் பிரிவை தாங்க முடியாமல் தவித்தாள்.
மறக்க கூடிய காதலா அது?. தன்னை காப்பாற்றி அரவணைத்து ஆளாக்கி, அவனது சொத்தையெல்லாம் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறான். அவன் விரும்பிய சீர்திருத்த கிருஸ்துவம் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் நம்மிடம் விதைத்து விட்டு போயிருக்கிறான். பிறப்பால் இந்து பிரமாண இனத்தில் தான் பிறந்தாலும் , தன் ஒரு மனுஷியாக மதிக்காமல் நெருப்புக்குள் தள்ள இருந்த உறவினர்கள் எங்கே?. எங்கிருந்தோ வந்து, தன்னை காப்பாற்றி தன்னை பற்றி முன் பின் அறியா விட்டாலும் நம்பி வந்தவளை காப்பாற்ற வேண்டும் என ஆதரவு தந்தவர் எங்கே?.
இருவரையும் தாரசு தட்டில் வைத்து பார்க்கிறாள் கோகிலா. லிட்டில்டன் எங்கோ உயர்ந்து நிற்கிறான். அவன் உயரத்தினை ஏணி வைத்தால் கூட எட்ட இயலாது இவரது உறவினர்களால். அதே வேளையில் லிட்டில்டன் இனத்தவர்கள் இவளை ஒரு பிறவியாக மதிக்க வில்லையே. இனி எப்படி வாழப்போகிறாள். இவளை மதித்து இவளுக்கு ஞானஸ்தானம் கொடுத்து விட்டால் போதும் இவளுக்கு அங்கீகாரம் கிடைத்து விடும். ஆனால் அதை கூட கிறிஸ்தவ பிரசிங்கியார்கள் செய்ய மறுக்கிறார்களே.
நினைத்துப்பார்க்கிறாள் கோகிலா அவள் கண்களில் கண்ணீர் வடிகிறது.
என்ன செய்வது. தற்கொலை செய்து விடலாம், அந்த அளவுக்கு லிட்டில்டனின் பிரிவு இருந்தது. ஆனால் அவன் போதித்த கிறிஸ்தவ மதமும், அவனின் போதைனையும் அவள் மனதை திடப்படுத்தியது. எனவே தற்கொலை என்ற எண்ணம் அவளை விட்டு போய் விட்டது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனாலும் என்ன செய்யப்போகிறாள். லிட்டில்டன் கொடுத்த சொத்து கை நிறைய இருக்கிறது. அதை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாள்.
ஆனால் தைரியமாக கோகிலா பாளையங்கோட்டையில் தாங்கினாள்.
அகஸ்தீஸ்வரன் சார் கோகிலா கதையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்வம் அவள் வரலாற்றை கேட்கும் ஆவல் சந்திரனுக்கு ஏற்பட்டது.
யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. லிட்டில்டன் நினைவாகவே வீட்டுக்கு கிடந்தாள். நன்றாக ஜெபம் செய்தாள். இறை பணி செய்வதற்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டாள். லிட்டில்டனுக்கு நிறைய நில புலன் இருந்துச்சு. பண்ணை வீடு இருந்துச்சு. பணம் கொடுத்த சேவகம் செய்ய வேலை காரங்க இருந்தாங்க. இந்த வேளையில தான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப ஆயத்தமானாள் கோகிலா. இதற்காக பிரசங்கியர்கள் உதவி செய்யவில்லை. ஆனாலும் அவர்களை விட வில்லை . தொடர்ந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்க என்ன செய்யலாம் என யோசித்தாள்.
தென் திருநெல்வேலியில் தேரிக்காட்டில் சுவிஷேசபுரம் அருகிலிருக்கும் தேரிவிளையும் மேலும் சில கிராமங்களும் இருந்ததாக “திருநெல்வேலி திருச்சபையின் ஆரம்ப வரலாறு” என்ற நூலில் பிஷப் வெஸ்டன் சொல்றாரு. அந்த இடத்தில எல்லாம் கோகிலா கிறிஸ்தவ மதத்தை பரப்ப தயாரானாள். ஆனால் இவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கவில்லை. இவளே கிறிஸ்வ மதத்து காரியா மாற வில்லை. அப்படியிருக்கும் போது இவளை நம்பி மத்தவர்கள் எப்படி கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவாங்க.
இதனால தவித்தாள். பல நாள்களாக ஆண்டவர் இடம் ஜெபம் செய்தாள். ஒருநாள் அதுக்கு விடிவு காலம் பிறந்தது. ஆம். திருநெல்வேலியை நோக்கி, இவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மாட்டேன்னு என மறுத்த சுவார்ட்சு அய்யர் வந்து சேர்ந்தார்.
பாளையங்கோட்டையில் சில காலம் தங்கி இருந்தார். இந்த சமயத்தில் தான் ஒரு நாள் அதிகாலையில் கோகிலா சென்று அவரை சந்திச்சா.
இவளை பார்த்து அமைதியா இருந்தார் சுவார்ட்சு அய்யர்.
“அய்யரே எப்படியாவது எனக்கு ஞானஸ்தானம் தாங்க” என்று கேட்டாள் கோகிலா.
திரும்பவும்அமைதியாக இருந்தார் அய்யர். இவளுக்கு நல்ல முறையில் லிட்டில்டன் ஆங்கிலம் கற்றுக்கொடுத்திருந்தான். ஆகவே அவர் சரளமாக ஆங்கிலத்தில் அய்யரிடம் பேசினாள்.
“நான் என்ன தவறு செய்தேன். என்னை காப்பாற்றியவருக்கு என்னை கொடுத்தேன். என்னை நிர்கதியாக எனது உறவினர்கள் விட்டு விட்டு சென்றார்கள் . அப்போது எனக்கு ஆதரவு அளித்து காப்பாற்றியவரை நான் காதலித்தேன். அது தவறா? அவர்தான் என்னுடைய உண்மையான கணவர். நான் விவரம் தெரியாமல் இருக்கும் போது செய்து வைத்த கல்யாணமும், அந்த கணவர் இறந்த போது என்னை உடன்கட்டை ஏற வேண்டும் என என் குடும்பத்தார் செய்த பிடிவாதமும் சரி என்று சொல்கீறீர்களா?”.
என கண்ணீர் மல்க கேட்டாள்.
“எப்படியாவது எனக்கு ஞானஸ்தானம் தாங்க. என்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாத்த மட்டுமில்லை. இன்னும் அறியாமையில சிக்கி தவிக்கிற மக்களை நான் விடுவிக்கணும். அதுக்காக தாங்க” ன்னு கேட்டாள்.
அய்யரும் நினைத்து பார்த்தார். பாவம் இந்த பெண் என்ன தப்பு பண்ணினாள். குடும்பத்து காரங்க சின்னவயசுல இவரை உடன்கட்டை ஏறச்சொன்னது இவள் தப்பா?. இவரை காப்பாற்ற லிட்டில்டன் வந்தானே அது தப்பா?. இது ஒரு மனிதாபமானம் தானே. உதவி தானே. அதற்கு பிறகும் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படவில்லையே?. திரும்பவும் கோகிலாவை அவர்களது குடும்பத்தாரோடுதானே சேர்ந்து வைக்கத்தானே முயற்சி செய்து இருக்கிறான் லிட்டில்டன். ஆனால் குடும்பத்தார் மீண்டும் அவளை சேர்க்கவில்லையே. இதற்கு காரணம் யாரு?. பாவம் சிறு வயதில் அறியா பருவத்தில் இருந்த கோகிலா என்ன செய்ய முடியும்?. அவளுக்கு என்று ஒரே ஒரு ஆதரவு லிட்டில்டன் மட்டும் தானே?. அவனுக்கும் இவளுக்கும் புரியாத மொழி. ஆனாலும் பாதிக்கப்பட்ட அவளை தெருவில் விட்டு விட்டாள் அவளை உடன் கட்டையில் இருந்து காப்பாற்றி என்ன பிரயோசனம். ஆகவே தானே அவன் தன்னோடு அவளை வசிக்க வைத்தான். எத்தனை நாள் ஒரே அறைக்குள் இருவரும் இருந்து இருக்க முடியும். ஒருவருக்கு ஒருவர் உதவும் போது காதல் தான் வருமே. அந்த காதல் மொழி பார்க்குமா? நாடு பார்க்குமா? மதம் பார்க்குமா? ஒரு ஆண் மற்றொரு பெண். இவர்கள் இருவருக்கும் இடையில் தானே ஈர்ப்பு வரும். இதில் என்ன தப்பு இருக்கிறது?. ஒருவேளை இவன்அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் குடும்பம் இல்லாமல் இருக்கும் மற்ற படைவீரர்கள் இவள் மீது அத்து மீறி உறவு கொள்ள ஆசைப்பட்டாள். இவளுக்கு விபச்சாரி என்றல்லவா பட்டம் கிடைத்து இருக்கும். தமிழர் பண்பாடு படியே ஒருவருக்கு ஒருவர் என்று தானே வாழ்ந்து இருக்கிறார்கள் இருவரும். அதில் என்ன தப்பு. மேலை நாட்டார் போல வாழந்தோம் பிரிந்தோம் என அவர்கள் வாழ வில்லையே. அவர்களின் காதல் புனிதமானதாகத்தானே இருந்து இருக்கிறது. அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது அவனை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி எடுத்தாளே இந்த பெண், அவன் இறந்த பிறகு கூட அவன் கூறிய மதத்தினை இந்த உலகில் பரப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறாளே கோகிலா. இது எல்லாம் தப்பா?”
சுவாட்ச்சு அய்யருக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் முடிவு செய்தார். இதற்கு பிறகும் இவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்காமல் இருந்தால் நாம் கிறிஸ்தவ பிரசங்கியராக இருப்பது சரியல்ல என முடிவுக்கு வந்தார்.
1778 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் நாள். கோகிலாவுக்கு உபதேசம் செய்து ஞானஸ்தானம் கொடுத்தார். இனி அவளுக்கு கிறிஸ்தவ பெயர் வைக்க வேண்டும். என்ன பெயர் வைக்கலாம். அதையும் அவளிடமே கேட்கிறார்.
லிட்டில்டன் உயிரோடு இருக்கும் போதே அவனால் கோகிலா என்று இவளை கூப்பிட முடியவில்லை. கிளாரிந்தா என்றே கூப்பிட்டு வந்தான். அந்த பெயரை தனக்கு வைக்க வேண்டும் என கோகிலா கேட்டுக்கொள்டாள். அவளுக்கு “கிளாரிந்தா” என்று பெயர் சூட்டி ஞானஸ்நானம் அளித்தார் சுவாட்ச்சு அய்யர்.
மொத்தத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தில் ஞானஸ்தானம் பெற்ற முதல் பெண்மணியாக கிளாரிந்தா உருவானார்.
அதன் பின் மிக வேகமாக கிறிஸ்தவ மதம் பரப்பும் பணியில் கிளாரிந்தா ஈடுப்பட்டாள்.
அமைதியாக இருந்தார் அகஸ்தீஸ்வரன் சார். கிளாரிந்தா மட்டும் திருநெல்வேலிக்கு வரலைன்னா சீர்திருத்த கிறிஸ்தவம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது.
இருவரும் அமைதியாக அவரிடம் கிளாரிந்தா வரலாற்றை கேட்டுக்கொண்டிருந்தனர். அகஸ்தீஸ்வரன் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
கிளாரிந்தா அம்மையார் ஞானஸ்நானம் பெற்றதும் பாளையங்கோட்டையில் சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை ஒன்றை நிறுவினார். கோட்டைக்கருகே பட்டாளத்தார் இருப்பிடத்திற்கு அருகில் தமது சொந்தச் செலவில் ஆலயத்தினைக் கட்டினார். தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் எழுப்பிய பேட்ரிக் ஆலயத்தைத் தவிர்த்து, திருநெல்வேலியில் தோன்றிய முதல் சீர்திருத்த கிறிஸ்தவ ஆலயம் இவர் கட்டிய இந்த ஆலயம் தான். இதனை 1783&ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 1785&ஆல் முடிந்ததார். இந்த ஆலயத்தினை பிரதிஷ்டை செய்ய சுவார்ட்ஸ் அய்யர் மீண்டும் பாளையங் கோட்டைக்கு வந்தார். ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி பிரதிஷ்டை செய்தார். இந்த விழா ஏற்பாடுகளையெல்லாம் கிளாரிந்தாத்தான் தனி ஆளாக நின்று செய்தாள். அப்போது சிறப்பாக திருவிருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் சபையைச் சேர்ந்த 80 பேர் அந்த விருந்தில் பங்கெடுத்தனர். கிறிஸ்தவ மதம் பரப்பும் பணியில் ஈடுபட்ட கிளாரிந்தாவின் பணிகளை பார்த்து வியந்து போய் நின்றார் சுவாட்ச்சு அய்யர். ஆகா இந்த சகோதரியை முன்பே ஞானஸ்தானம்கொடுத்து சபையில்சேர்த்து இருந்தால் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமே என வியந்து நின்றார்.
பாளையங்கோட்டை ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கு முன் கிளாரிந்தா அம்மையார் தனக்கு சொந்தமாக இருந்த தேரிவிளையில் ஒரு ஜெப வீட்டை கட்டிக் முடித்தார். இதில் நாடார் சமூகத்தினைச் சேர்ந்த 9 பேரையும் சீர்திருத்த சபையில் சேர்த்திருந்தார். இவர்களுக்கு இறைப் பணி செய்ய மரிய சவரி என்ற உபதேசியாரை நியமித்தார். அவர் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தார். மாதா மாதம் அவர் சம்பளத்தையும் அம்மையாரே கொடுத்து வந்தார். ஆக தனது சொந்த செலவில் பல்வேறு கிறிஸ்தவ பணியை செய்தார். இதனால் ஆங்காங்கே கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.
இந்தச் சமயத்தில் வழிப்பறியும், தீக்கொளுத்துதலும், கொள்ளையும், கொடூரமும், திப்புசுல்தான்களின் அட்டகாசமும், பாளையக்காரர்களின் அட்டூழியங்களும் நிறைய இருந்தது. அவர்கள் பாமர மக்களை மிகவும் பாடாய் படுத்தினர். இவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்றால் ஆங்கிலேய அரசு நமக்கு உதவி புரியவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும் எனவும் நினைத்தார். அதற்கு ஒரே வழி கிறிஸ்தவ மதத்தினை பரப்ப நல்லதொரு பிரசங்கியர்கள் திருநெல்வேலிக்கு வேண்டும் என நினைத்தாள்.
ஆகவே தான் தனது வளர்ப்பு மகன் ஹென்ரி லிட்டில்டனும் மற்றும் சிலருடன் அவர் நடைப்பயணமாகப் பாளையங்கோட்டை யிலிருந்து தஞ்சாவூருக்கு சென்றாள். அங்கு சுவார்ட்சு அய்யரை கண்டார். பாளையங்கோட்டை சபைக்கு உதவும்படி சுவார்ட்சு அய்யரைக் கேட்டுக் கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கு இணங்கினார் சுவார்ட்சு, தம்மிடம் இருந்த மிகச் சிறந்த தொண்டர் எனக்கருதும் கற்பகம் சத்தியநாதன் என்ற உபதேசியரை 1785&ஆம் ஆண்டு பாளையங் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபையின் பதிவேடு 1780&ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அதில் முதல் பெயர் கிளாரிந்தா அம்மையாருடையதுதான். தொடர்ந்து அம்மையாரின் வீட்டைச் சார்ந்த நான்கு பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 40 பேர் அடங்கிய பட்டியலில் 13 ஜாதியினர் இருந்தனர். அக்காயி என்ற பிச்சைக் காரியின் பெயரும் அதில் இருந்தது. முதன் முதல் பாளையங் கோட்டையில் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்குத் தமது கையிலிருந்து சம்பளம் வழங்கியதும் கிளாரிந்தா அம்மையார்தான். 1796&ஆம் ஆண்டு தொடங்கிய “சாணார் வெகுஜன கிறிஸ்தவ இயக்கத்தையும்” கண்டுகளித்த கிளாரிந்தா, தாம் தொடங்கிய “திருநெல்வேலி சீர்திருத்த கிறிஸ்தவர்களின் திருச்சபை” ஆலமரம் போல் தழைத்து ஓங்கியதைக் கண்டாள். அதன் பின் தமது 60&வது வயதில் இறைவனடி சேர்ந்தாள். உலக கிறிஸ்தவ சபை வரலாற்றில் இவரை போல் செயலாற்றிய வீராங்கனை எவருமில்லை. பிப்ரவரி 25&ஆம் தேதி கிளாரிந்தா அம்மையாரின் நினைவு நாளாகப் போற்றப்படுகிறது.
வரலாற்றை சொல்லி முடித்து விட்டு பெரும் மூச்சு விட்டார் அகஸ்தீஸ்வரன்.
இது போன்ற வரலாறு பல இருந்தாலும் காதலித்த காரணத்துக்காக, அதுவும் வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து இங்குள்ள பிராமண பெண்ணை காதலித்த வகைக்காக லிட்டில்டனுக்கு இழைத்த கொடுமை சொல்லி மாளாது. பாவம் அவனை எங்கே புதைத்தார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு அவனது வரலாற்றை மூடி புதைத்து விட்டார்கள்.
வாஞ்சி நாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ் துரைக்கு கல்லறை உள்ளது. சபைக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தவித்து விடப்பட்ட ரேணியஸ் அய்யருக்கு கூட முருகன் குறிச்சியில் தனியாக ஒரு இடத்தில் கல்லறை உள்ளது. ஆனால் லிட்டில்டன் எங்கே புதைக்கப்பட்டான் என்றே தெரியவில்லை.
இதனால் தான் பிற்காலத்தில் கிளாரிந்தா வணங்கிய இந்த ஜெப ஆலய வாளகத்தில் பல்வேறு ஆங்கிலேயர்களை புதைத்து உள்ளார்கள். சாயர்புரத்தினை உருவாக்கிய சாயரின் கல்லறையை உள்ளே தான் உள்ளது.
சந்திரன் யோசித்தான். ஆங்கிலேயர்கள் காதல் திருமணத்தினை ஆதரிப்பவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் இடத்திலேயே இப்படி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தாத்தா ராஜதுரை ஏற்படுத்திய வடு நமது இனத்தில் எப்படி மாறும். இவரை எப்படி இனத்தில் சேர்ப்பார்கள். அப்படி இனத்தில் சேர்க்க வேண்டும் என்றால் அவரது மகன் வெள்ளத்துரையாவது ஒழுங்காக இருந்து இருக்க வேண்டும்.
ஆனாலும் இவரும் அப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சரி அப்பா வாழ்க்கை தான் எப்படி இருந்திருக்கும். யோசித்து பார்க்கிறான்.
அகஸ்தீஸ்வரன் சார் சொன்னார். “அப்படியே போஸ்ட் ஆபிஸ் வரைக்கு போய் ஒரு டீயை குடித்து விட்டு வருவோம்”. என்றார்.
வேண்டா வெறுப்பாய் எழுந்தான் சந்திரன்.
அவன் உற்சாகமில்லாமல் வருவதை பார்த்தவுடன் சிரித்தார் அகஸ்தீஸ்வரன்.
“சந்திரன் கவலை படாதேடே. இன்னைக்கு நிச்சயம் உங்க அப்பா கதையை சொல்லிடுதேன்”. என்றார்.
சோர்வுடன் எழுந்தான் சந்திரன். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்தது. தனது தந்தை கதையை இவர் எங்கே சொல்லப் போகிறார். சரி தெரிந்து தான் என்ன ஆக போகுது. ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனை விட்டு விலகவும் இல்லை.
சரி இருந்தாலும் இவரை விட்டால், நமது குடும்ப கதையை சொல்ல வேறு உதவி இருக்க வாய்ப்பில்லை. எனவே அகஸ்தீஸ்வரன் சார் சொல்வதற்கெல்லாம் விட்டு கொடுத்துத்தான் போகவேண்டும்.
“சார் டீ மட்டும் குடிகீயிளா, இல்லாட்டி நல்ல மீன் சாப்பாடு சாப்பிடுவோமா?”
சிரித்தார் அகஸ்தீஸ்வரன் சார்.
“எவன் இந்த டீயை இந்த ஊருக்கு அறிமுக படுத்தினானோ. தெரியலை. ஆனா என்னை மாதிரி நிறைய பேரு டீக்கு பையித்தியம் ஆகிட்டாவடே”.
திரும்பவும் சிரித்தார். ஆனால் ரசிக்கும் மன நிலையில் தான் சந்திரன் இல்லை.
“நான் மட்டும் என்ன அதுக்கு விதி விலக்கா?”
சிரித்தார். “டீ மட்டும் குடிப்பும்டே. அப்படியே நடந்து போகும் போதே உன் அப்பா கதையைசொல்லுதேன். கவலைப்படாதே” மீண்டும் சிரித்தார்.
சந்தோசத்துடன் எழுந்தான் சந்திரன். காரை ஸ்ராட் செய்தான். முன் பக்கத்தில் சாரை ஏற்றிக்கொண்டான்.
கிளாரிந்தாவோட கணவர் இருக்கும் இடம் தெரியாம போயிட்டாரார். ஆனால் இன்னைக்கு கிளாரிந்தா சாதிச்சிட்டா. வருடம் 150 தை தாண்டிட்டு, இன்னைக்கும் அந்த அம்மா பெயரை சொல்லிக்கிட்டு, நிறைய பேரு வந்து கிட்டே இருக்காவ.
ஆனா அவளுக்கு பிற்காலத்தில ஆங்கிலேய அரசு உதவி கிடைச்சுது. ஆனா நமக்கு கிடைக்குமா? ஆனாலும் உன்னோட அப்பா கதை வித்தியாசமானதுடே. எதிர்பாராம நடந்தது. ஆனால் அவர் வாழ்க்கை பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வித்தியசமான காதல் கதை. அந்த கதையை தான் இப்போது சொல்லப்போகிறேன்.
கார் கிளம்பியது. சந்திரனின் தந்தை வெள்ளத்துரையின் கதை¬யும் அகஸ்தீஸ்வரன் மூலம் விரிய ஆரம்பித்தது.
அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான் வெள்ளத்துரை.
செல்லையா வந்தார். “என்னய்யா வெள்ளத்துரை இங்க நிக்கிய. இருட்ட போவுது. ஊருக்கு போவும் வாங்கய்யா”.
அமைதியா இருந்தான்.
“என்னய்யா இப்படி பரபக்க பரக்க முழிக்கிய. என்னன்ன எங்கிட்ட சொல்லுங்கய்யா”.
“அய்யா. நான் சொல்லுதேன்னு தப்பா நினைக்காதீய. எங்கப்பா எங்க உறவு காரங்களை விட்டு போவ காரணம் இந்த அய்யர்தானே. இப்போ அந்த அய்யர் எங்க இருக்காரு. எப்படி இருக்காரு”. கோபமாக கேட்டான்.
சிரித்தார் செல்லையா. “இங்க பாருங்கய்யா உப்பத்தின்னவன் தண்ணி கொடுக்கணும். அதுதான் நியதி. அது மேல்சாதி, கீழ்ச்சாதின்னு கிடையாது. யாரு தப்பு பண்ணினாலும் ஆண்டவன் கிட்ட ஒண்ணுத்தான்”.
நிமிர்ந்தான் வெள்ளத்துரை.
“ஆமாமுய்யா . இப்போ ரெண்டு கண்ணும் தெரியாம அக்ரகாரத்தில வீட்டுக்குள்ள முடங்கி கிடக்காரு அந்த அய்யரு. கடவுள் அவருக்கு நல்ல தண்டனையை கொடுத்து புட்டாரு. நீங்க அதை ஏன் கேக்கிய. அவுகளை பத்தி நீங்க ஒண்ணும் நினைக்காதீக”.
அமைதியாக இருந்த வெள்ளத்துரையின் கண்கள் சிவந்து இருந்தது. மறைய துடிக்கும் சூரியன் சில வேளைகளில் இப்படித்தான் சிவந்து நிற்கும் . அதுபோலவே இவனது கண்களும் சிவந்து நின்றது.
“இங்க பாருங்கய்யா. உங்க அய்யா நல்லதுக்குத்தான் வாழ்ந்தாவ. அவுக காலத்தில நல்லதை செஞ்சாவ அதனாலத்தான் நல்ல சாக்காலம் கிடைச்சது. ஊர் உலகத்தில வம்பு பண்ணினா. அய்யரை மாரி வீட்டுக்குள்ள கிடந்து நஞ்சி நகண்டுத்தான் சாவணும். மனுசன் நிம்மதியா இருப்பானாக்கும். அவன் பண்ணின தப்பு அப்படி. வயசுக்கு வந்த பெண்ணு பாலச்சுளை மாரி இருக்கு. அந்த பிள்ளையை நல்லபடியா திருமணம் முடிச்சி கொடுக்க வக்கில்லை. வீட்டுக்குள்ள முடங்கி கிடக்காரு. மனுசன்”.
மனதுக்குள் நொந்து போனான். “தனது தாத்தா இப்படி ஊரை விட்டு ஒட அவர் போட்ட பொய் வழக்கு தானே காரணம். அவர் கஷ்டப்படுறதை நம்ம இரண்டு கண்ணால பாக்கணும். இன்னைக்கு ராத்திரி யாருக்கும் தெரியாம கிராமத்துக்குள்ள போணும். அவர் படுத்த பாட்டை பாக்கணும்”.
முடிவு செய்தான். ஆனால் சுப்பையா சொல்லுவதை தட்டவும் முடியவில்லை. எனவே சுப்பையா பின்னாலேயே வீட்டுக்கு வந்தான். இரவு சாப்பிட்டான். சுப்பையா தூங்க ஆரம்பித்தார். வீட்டுக்கு வெளியே ஒரு நாரு கட்டிலில் படுத்து போர்வையை போர்த்திக் கொண்டான். ஆனால் நடுராத்திரியில் எழுந்த நடக்க ஆரம்பித்தான். ஆற்றுக்கு அந்த கரையில் தான் கிராமம் இருந்தது. இரவு பௌர்ணமி வெளிச்சத்தில் கிராமத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பௌர்ணமி வெளிச்சம் தாமிரபரணி தண்ணீரில் பட்டு பல்வேறு வண்ணங்களை சிதறடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் குருவிகள் சத்தம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிகொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல எங்கிருந்தோ ஆந்தை மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அந்த கத்தல் கொலை வெறிபோல இருந்தது.
வேகமாக வந்த வேக கூட்டம் பௌர்ணமி நிலவை மறைத்து அதன் பின் உடனே விலகி சென்றது. இவனுக்கு இந்த பாதை ஒன்றும் மோசமாக தெரியவில்லை. எதிர்பார்ப்போடு இறங்கி நடைபோட்டான்.
தூரத்தில் இருந்த மண்சாலை அந்த கிராமத்தினை காட்டியது.
ஒரு காலத்தில் பொன் விளையும் பூமியாக இருந்த அக்கிரகாரம். தற்போது 1 சில வீட்டில் மட்டுமே ஆள்கள் இருந்தன. மற்ற வீடுகள் பூட்டிக்கிடந்தது. வீடுகளில் அதிகாரம் தாண்டவமாடிய இடம். தற்போது புல்புதர் செடி முளைத்து கிடக்கிறது. எப்போதும் பஜனை பாடல்களும், அக்ரகார மொழிகளும் தெரு அதிர இருந்த இடம் தற்போது நாய்கள் ஊழையிடும் தெருவாக மாறியிருந்தது.
வெள்ளத்துரைக்கு இந்த தெருவை பற்றி தெரிய வாய்ப்பில்லை. இவரது தந்தை காலத்தில் இந்த இடத்தில்தான் அடாவாடி அதிகமாக இருக்கும். சிவராமன் அய்யர் இட்ட கட்டளைக்கு வேலை செய்ய எத்தனையோ பேர் காத்து கிடந்தனர்.
ஒரு காலத்தில் உள்ளே நுழைய முடியாது அந்த அளவுக்கு கட்டுபாடாக இருந்த இடம். மேலே ஆடை போட்டு உள்ளே நுழைய முடியாது. செருப்பை கழற்று கககத்தில் வைத்துக்கொண்டுத்தான் கடக்க வேண்டும். அதிலும் சாணர்கள் என்றால் தெருக்குள் நுழையவே முடியாது. எல்லோரும் தொட்டால் தான் தீட்டு, ஆனால் நாடார்கள் பார்த்தாலே தீட்டு. ஆனால் தற்போது இந்த அக்ரகாரத்துக்குள் யார் வேண்டும் என்றாலும் எப்போதும் நுழையலாம் என்பது போல இருந்தது.
சில வீடுகளில் மொட்டை பிரமாணத்தி இருப்பார்கள். இவர்கள் ஆத்துக்கு குளிக்க வந்தால், யாரும் எதிரே வர இயலாது. அவர்களை பார்த்தவுடன் ஒதுங்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் தீட்டு. தீட்டு செய்த நம்மை தூக்கி கொண்டு உதைக்க அடியாள்கள் வந்து விடுவார்கள். எனவே மொட்டை பிரமாணத்திகள் வந்தால் நம்மவர்கள் வயற் காட்டுக்குள் இறங்கிவிடுவார்கள்.
ஆனால் காலங்கள் கடந்த போது அந்த பிரமாணத்திகளை பார்த்து யாரும் ஒதுங்குவது கிடையாது. எனவே எதிரே யாரும் வந்தா அந்த மொட்ட பிரமாணத்திகளே பாதையை விட்டு இறங்கி ஒரு ஒரமாக போய் நின்று கொள்வார்கள் . அந்த அளவுக்கு தீண்டாமை வெகுண்டு எழுந்த இடம் தற்போது மாறியிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க. கொடி கட்டி பறந்த அய்யர்கள் எல்லாம் தங்கள் வயல்களை காவல்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு அருகில் உள்ள பட்டனத்திலும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் போய் பெரிய பொறுப்பில் அமர்ந்து கொண்டார்கள்.
ஊரில் இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே. இவர்களும் தற்போது வசதியில் பின்தங்கி விட்டார்கள். சிவராமன் அய்யர் போன்றவர்கள் குடும்பத்தோடு இங்கே தங்கினாலும் பழைய மரியாதை இல்லை. சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு கூட குத்தகை பணம் பிரிவதில்லை. குத்தகைதாரர்களிடம் கேட்டால், அவர்கள் இவர்களை மதிப்பதே இல்லை. வேறு வழியில்லாமல் வெளியே சொல்லவும் முடியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இங்குள்ள பிராமணர்கள் வாழ்ந்த காலம் அது.
அந்த வேளையில் தான் தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராம அய்யரை பார்க்க நடுராத்திரியில் கிளம்பி வந்திருக்கிறான் வெள்ளத்துரை. ஆனால் அங்கே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)