தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் நல்லையா (58) என்ற செல்லையா. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இறந்த பின்னர் இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். மனைவி இறந்த பின்னர் சாத்தான்குளத்தில் அருகே உள்ள கரையடி கோவில் வளாகத்தில் தான் இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல கரையடி கோவில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு படுத்து தூங்கியுள்ளார்.
இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்த நல்லையா என்ற செல்லையாவை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரது உடலை கோவில் வெளியே போட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் செல்லையா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சாத்தான்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சாத்தான்குளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


