தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரையில் செயல்பட்டு வரும் மதுபானகடை அருகே நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உள்ள மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் தென்திருப்பேரை மதுபானக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அப்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 40 நாட்களில் உரிய முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மாலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தென்திருப்பேரை மதுபானக்கடை முன்பு பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஏரல் வட்டாட்சியர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற வெள்ளிக்கிழமை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதுவரை போராட்டத்தை கைவிடுமாறும் அதுவரை மதுபானக்கடை செயல்படாது என உறுதி அளித்தார். இதனை ஏற்று பாஜகவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.


