குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனியார் நிறுவன சூப்பர்வைசரிடம் ரூ.10 லட்சம் பணமோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மோத்தா மகன் சுரேஷ்ராஜ் மோத்தா (33), தனியார் இறால் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனிக்கு கேரளாவைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவர் அடிக்கடி வந்து செல்வாராம். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அப்துல் கலாம் தான் கேரளாவில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறேன். அங்கு மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும், நீங்கள் ரூ.10 லட்சம் தந்தால் உங்களுக்கும் குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினாராம். இதை நம்பிய சுரேஷ்ராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு இரு தவனைகளில் மொத்தம் ரூ.10 லட்சம் கொடுத்தாராம்.
அதன் பின்பு அப்துல் கலாம் அவருக்கு வேலை வாங்கி கொடுக்க கொடுக்கவில்லையாம். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்ராஜ் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்துல்கலாம் மற்றும் உடந்தையாக இருந்தாக அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


