தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பாதிப்புகளை மத்தியக் குழுவினர் கே.பி.சிங், தலைமையிலான 7 உறுப்பினர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. சாலைகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. வீடுகள் அதிகளவில் சேதமடைந்தன. கால்நடைகளும் உயிரிழந்தன. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பாதிப்புகளை மத்தியக் குழுவினர் கே.பி.சிங், தலைமையிலான 7 உறுப்பினர்கள் ரங்கநாத்ஆடம், ஆர்.தங்கமணி, கே.பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, கே.எம்.பாலாஜி, எஸ்.விஜயகுமார் ஆகியோர் கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாரகன், முன்னிலையில் இன்று (12.01.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மறவன்மடம், அந்தோணியார் புரத்தில் சேதடைந்த சாலைகள், முறப்பநாடு நீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூரில் சேதடைந்த சாலைகள், பயிர்கள், தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை, பொன்னாக்குறிச்சியில் சேதடைந்த வீடுகள், நீரேற்று நிலையம், கடம்பாகுளம், தென்திருப்பேரையில் சேதமடைந்த குளங்கள், ஏரல் வட்டம் மணத்தி, ராஜபதி கிராமங்களில் சேதடைந்த திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலை, பயிர்கள், மின்சார கம்பங்கள், ஏரல் டவுணில் சேதமடைந்த பாலம், சிறுவணிகர்களுக்கான பாதிப்பு, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், தெற்கு வாழவல்லானில் சேதமடைந்த மின்கோபுரங்கள்,
தூத்துக்குடி மாநகராட்சியில் அரசு மருத்துவமனை, கருத்தபாலம், ஓம்சக்திநகர், மாப்பிள்ளையூரணியில் ஏற்பட்ட சேதங்களையும், தூத்துக்குடி வட்டம் அத்திமரப்பட்டியில் கோரம்பள்ளம் குளத்தில் உள்ள உடைப்புகள், சேதமடைந்த சாலைகள், பயிர்கள், ஏரல் வட்டம் பழையகாயலில் சேதமடைந்த சாலைகள், அகரத்தில் சேதடைந்த பயிர்கள், ஆத்தூரில் சேதடைந்த பாலம், மின்கம்பங்கள், மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பு, திருச்செந்தூர் வட்டம் ஆவுடையார்குளத்தில் ஏற்பட்ட உடைப்பு, மெஞ்ஞானபுரத்தில் பாதிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் மத்தியக் குழுவினர் கே.பி.சிங், தலைமையில் நடைபெற்றது. ஆய்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் / கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மேலாண்மை இயக்குநர் சிப்காட் மரு.செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோ.பாலாஜி சரவணன், மற்றும் வட்ட அனைத்து துறை உயர் அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


